Reasons for No Weight Loss 
ஆரோக்கியம்

என்ன பண்ணாலும் உடல் எடை குறையலையா? அப்போ இந்த தப்பெல்லாம் செய்றீங்கன்னு அர்த்தம்! 

கிரி கணபதி

இன்றைய காலத்தில் உடல் எடை அதிகரிப்பு என்பது ஒரு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. பலர் சரியான உணவுமுறையை பின்பற்றி, உடற்பயிற்சி செய்யாத நிலையில், உடல் எடை அதிகரிப்பை அனுபவிக்கின்றனர். இதில் சிலர் என்னதான் டயட் மற்றும் உடற்பயிற்சி வழிமுறைகளைப் பின்பற்றினாலும் உடல் எடை குறையாமல் இருப்பவர்களும் உண்டு. இந்தப் பதிவில் உடல் எடை இழப்புக்கு தடையாக இருக்கும் காரணங்கள் மற்றும் செய்யும் தவறுகள் பற்றி பார்க்கலாம். 

உடல் எடை குறையாமல் இருக்க காரணங்கள்: 

இன்றைய காலத்தில் உட்கார்ந்திருக்கும் வேலைகள் அதிகரித்துள்ளன. இதனால், உடல் இயக்கம் குறைந்து கலோரி எரிப்பு குறைகிறது. தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யாமல் போவதால், உடல் எடை அதிகரிக்கிறது. மேலும் போதுமான தூக்கம் இல்லாததால் கூட உடலின் கொழுப்பு சேரும் ஹார்மோன்கள் அதிகரித்து எடை குறையாமல் அப்படியே இருக்கும். 

தினசரி உடற்பயிற்சி செய்பவர்களும், உணவுக் கட்டுப்பாட்டில் சரிவர கவனம் செலுத்தவில்லை என்றால் உடல் எடை அப்படியேதான் இருக்கும். ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்த பிறகு அதிக கலோரி, கொழுப்பு, சர்க்கரை நிறைந்த உணவுகளை உண்பது எந்த வகையிலும் பயனளிக்காது. எனவே, உணவுக் கட்டுப்பாட்டுடன் கூடிய உடற்பயிற்சிதான் உங்கள் உடல் எடையைக் குறைக்கும். 

சிலர் உடல் எடையைக் குறைப்பதற்கு உணவு உண்ணாமல் அப்படியே இருக்கின்றனர். இது குறுகிய காலத்தில் உடல் எடையை குறைக்குமே தவிர, நீண்ட காலத்திற்கு நல்ல பலன் அளிக்காது. இதனால், உங்கள் உடல்நிலை பாதிப்படையும் வாய்ப்புள்ளது. மேலும், மது, புகை போன்ற பழக்கங்களும் உங்களது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். 

சில மருத்துவ காரணங்களாலும் உடல் எடை குறைப்பதில் சிரமம் இருக்கலாம். தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பிரச்சனைகள், வளர்ச்சிதை மாற்றத்தை பாதித்து, எடை அதிகரிப்பை ஏற்படுத்தும். பெண்களுக்கு ஏற்படும் பாலிசிஸ்டிக் ஓவேரி சின்றோம் அவர்களது ஹார்மோன் சமநிலையை பாதித்து உடல் எடையை கூட்டிவிடும். மேலும் சில மருந்துகள் எடை அதிகரிப்பை பக்க விளைவாக ஏற்படுத்தும். 

நீங்கள் செய்யும் தவறுகள்: 

முதலில் உங்களது உணவில் கவனம் செலுத்துங்கள். மோசமான உணவு முறையைப் பின்பற்றுவதாலும் நீங்கள் உடல் எடையைக் குறைப்பது கடினமாகலாம். எனவே, உங்கள் உடலுக்கு ஏற்ற உணவு முறையை பின்பற்றவும். 

உடற்பயிற்சி உடல் எடை குறைப்பிற்கு அவசியம் என்றாலும், அதிகப்படியான உடற்பயிற்சி உடலை சோர்வடையச் செய்து, நீங்கள் எதிர்பார்க்கும் ரிசல்ட்டை தடுக்கலாம். 

போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது உடலில் கொழுப்பு சேர்வதை அதிகரிக்கும். இத்துடன் நீங்கள் மன அழுத்தத்தில் இருப்பதாலும் உடல் எடை அதிகரிக்கலாம். 

எப்போதுமே அவசர அவசரமாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என நினைக்காதீர்கள். உங்களது உடல் வகை, மருத்துவ நிலை, உணவுப் பழக்கங்கள் உடற்பயிற்சி போன்றவற்றை கருத்தில் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையைக் குறைப்பதுதான் ஆரோக்கியமானது. விரைவான உடல் எடை குறைப்பு உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். 

உடல் எடையைக் குறைப்பதென்பது ஒரு நீண்ட கால செயல்முறையாகும். இதற்கு பொறுமை மற்றும் திட்டமிடல் தேவை. மேற்கண்ட தவறுகளைத் தவிர்த்து சரியான உணவுமுறை, உடற்பயிற்சியை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் உங்கள் இலக்கை எளிதாக அடைய முடியும். 

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT