சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவப் பரிசோதனைக்கு உமிழ்நீர் சேகரிக்க இனி லாலிபாப் போதும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் உமிழ்நீர் சேகரிக்கும்போது ஏற்படும் அசௌகர்யம் தவிர்க்கப்படும் எனக் கூறப்படுகிறது.
முதல் முறையாக ஆய்வாளர்கள் லாலிபாப் பயன்படுத்தி உமிழ்நீர் சேகரிக்கும் முறையை கண்டுபிடித்துள்ளனர். இதனால் யாரிடம் வேண்டுமானாலும் அவர்களை துன்புறுத்தாமல் உமிழ்நீர் மாதிரிகளை சேகரிக்கலாம். மேலும் சேகரித்த லாலிபாப்பை ஒரு வருடம் வரை பதப்படுத்தி வைக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதுவரை நோயாளிகளிடம் நேரடியாக அவர்களின் தொண்டையிலிருந்து உமிழ்நீர் சேகரிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.
கொரோனா சமயத்திலும் இந்த முறையையே மருத்துவர்கள் கையாண்டனர். இப்படி உமிழ்நீர் சேகரிப்பது மருத்துவர்களுக்கு கடினமாகவும், நோயாளிகளுக்கு அசௌகர்ய உணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இருந்து வந்தது. இதற்கு மாற்றாக அனைவரும் விரும்பும் படி உமிழ்நீர் மாதிரிகளை சேகரிக்க என்ன செய்யலாம் என்று ஆய்வாளர்கள் சோதித்து வந்த நிலையில், எல்லா நபர்களுக்கும் விரும்பத்தக்க வகையில் இந்த லாலிபாப் உமிழ்நீர் சேகரிப்பு முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஆய்வாளர்கள் ஸ்பூன், கோன், ரவுண்ட் க்ரூவ் போன்ற பல வடிவங்களில் லாலிபாப்களை உருவாக்கி, அதில் எந்த வகையான லாலிபாப்பில் உமிழ்நீர் முறையாக சேகரிக்கப்படுகிறது என சோதித்துப் பார்த்தனர். அதில் வட்ட வடிவில் இருக்கும் லாலிபாப்பில் போதிய அளவு உமிழ்நீர் சேகரிக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த லாலிபாப் உமிழ்நீர் சேகரிப்பு முறையையும், இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட உமிழ்நீர் சேகரிப்பு முறையையும் 28 நபர்களிடம் ஆய்வாளர்கள் சோதித்துப் பார்த்தனர்.
அவர்களிடம் சில கேள்விகளும் முன்வைக்கப்பட்டு, எடுக்கப்பட்ட உமிழ்நீர் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த ரெண்டு முறைகளிலுமே சரியான பாக்டீரியாக்களைக் கண்டறிய முடிந்தது. குறிப்பாக கேண்டி கலெக்ட் முறையில் 100% துல்லியத்தன்மை இருந்தது. அதேசமயம் லாலிபாப் பயன்படுத்தும் போது அது பிறருக்கு எவ்விதமான முகச்சுழிப்பையும் ஏற்படுத்தவில்லை. பாதுகாப்பாக ஆளுக்கொரு மிட்டாய் கொடுத்து எளிதாக உமிழ்நீர் மாதிரிகளை சேகரிக்கலாம்.
இந்த முறையில் கிடைக்கும் முடிவுகள் துல்லியமாக இருப்பதோடு மட்டுமில்லாமல், சேகரித்த மாதிரிகளை ஓராண்டு வரை பதப்படுத்த முடியும். மேலும் இந்த முறையில் பல சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இது எல்லா நபர்களும் விரும்பும் படியாகவும், எளிமையாகவும் இருப்பதால், இதே போன்ற புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க இது உந்துதலாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.