நம்முடைய வாழ்க்கையை எப்படி சிம்பிளாக மாற்ற வேண்டும் தெரியுமா? நமக்குத் தேவைப்படாதவற்றை நீக்கி விடுவதே சிறந்த வழியாகும். உதாரணத்திற்கு, தேவையில்லாத பழக்கங்கள், வீட்டில் தேவையில்லாத பொருட்கள் என்று நம் நேரத்தையும், சக்தியையும் உறிஞ்சக்கூடிய விஷயங்களை களையெடுத்தாலே போதுமானது. வாழ்க்கை புத்துணர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் மாறிவிடும். இதை செய்வதற்கு நம் வாழ்க்கையில் இருந்து நீக்க வேண்டிய 6 பழக்கங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. தேவையற்ற பொருட்களை சுமக்காதீர்கள்: நம் வாழ்க்கையை சரியாக மாற்ற முதலில் செய்ய வேண்டிய விஷயம் வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்குவது. உதாரணத்திற்கு, அலமாரியில் இருக்கும் உபயோகப்படுத்தாத துணிகளாக இருக்கட்டும், வீட்டில் தேக்கி வைத்திருக்கும் குப்பைகளாக இருக்கட்டும். இவற்றையெல்லாம் வீட்டை அடைத்துக் கொண்டிருக்க விடாதீர்கள். இவை நம் வீட்டை மட்டுமில்லாமல், மனதையும் தெளிவில்லாமல் மாற்றிவிடும். முதல் வேலையாக வீட்டில் இருக்கும் தேவையில்லாத பொருட்களை நீக்கி சுத்தப்படுத்துங்கள்.
2. அதிக அர்ப்பணிப்பு வேண்டாம்: நம்முடைய வாழ்க்கையில் எதையும் தவறவிட்டு விடக்கூடாது என்ற காரணத்தால், எல்லா வேலைகளையும், வாய்ப்புகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய வேண்டும் என்று நினைக்கும் எண்ணம் நம்மை எந்த வேலையையும் சரியாக செய்ய விடுவதில்லை. இதனால் தேவையில்லாத மன அழுத்தம் உருவாகும். எனவே, தேவைப்படும் பொழுது ‘நோ’ சொல்லவும் பழகிக் கொள்ளுங்கள். இது நம்முடைய நேரம் மற்றும் சக்தியை சேமித்து. மனதளவில் புத்துணர்ச்சியைத் தருகிறது.
3. எதிலும் முழுமையடைய எண்ணாதீர்கள்: ‘நான் எதிலும் போதுமான அளவு இல்லை’ என்ற எண்ணம் பதற்றம் மற்றும் ஸ்ட்ரெஸ்ஸை கொடுக்கும். எது செய்தாலும் Perfect ஆக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள். ‘இதுவே போதுமானது’ என்று ஏற்றுக்கொள்ளும் மனம்தான் வாழ்க்கையை சுலபமாக்கி அடுத்த கட்டத்திற்கு நம்மை கொண்டு செல்கிறது.
4. டிஜிட்டல் கருவிகளை சார்ந்திருக்காதீர்கள்: டெக்னாலஜி நம் வாழ்க்கையை சுலபமாக மாற்றியிருப்பது உண்மைதான். இருப்பினும், எந்நேரமும் அதையே சார்ந்து இருப்பது, அதனுடனேயே அதிக நேரத்தை செலவு செய்வது மனதளவில் அதிக அழுத்தத்தையும், குழப்பத்தையும் தரும். எனவே, அவ்வப்போது Digital detoxing செய்வது நல்லது. போன் பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது சிறந்ததாகும். நமக்கு உபயோகமான ஆப்களை வைத்துக்கொண்டு தேவையற்றதை நீக்கி விடுகள். இது நமக்கு மனத்தெளிவையும், புத்துணர்ச்சியையும் தரும்.
5. சுய பராமரிப்பை புறக்கணிக்காதீர்கள்: நமக்காக நேரம் ஒதுக்குவது ஆடம்பரம் அல்ல. அது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமாகும். சுய பராமரிப்பு இல்லாத இடத்தில் குழப்பம், பதற்றம், கோபம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, நமக்காக நேரம் ஒதுக்கி ஒரு புத்தகம் படிப்பதோ அல்லது நாம் நேசிக்கும் நபருடன் நேரத்தை செலவழிப்பதோ வாழ்க்கையில் புத்துணர்ச்சியையும், அமைதியையும், மனத்தெளிவையும் கொடுக்கும்.
6. பல்பணி செய்வதை நிறுத்துங்கள்: பல்பணி செய்வதன் மூலமாக உற்பத்தித் திறனை அதிகரிக்கலாம் என்று நினைப்பது தவறாகும். பல்பணி செய்வதால், வேலையில் அதிக தவறுகள் ஏற்படவும், வேலையின் தரம் குறையவும் வாய்ப்புகள் உள்ளன. பல்பணி செய்வதால் அதிகமான மன அழுத்தம் ஏற்படவும், நம்முடைய நேரம் மற்றும் சக்தியை சரியாக ஒரு வேலைக்குக் கொடுக்காமல் பிரித்து செயல்படுவதால் குழப்பமும் ஏற்படும். எனவே, ஒவ்வொரு வேலையாக எடுத்து அதற்கு நேரம், சக்தி ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்தும் போது சுலபமாக வேலையை முடிப்பதோடு மட்டுமில்லாமல், நல்ல பலனையும் பெறலாம். இந்த 6 பழக்கங்களுக்கு குட்பை சொல்வது உங்கள் வாழ்க்கையை தெளிவாக்கும். முயற்சித்துப் பாருங்கள்.