நம்மில் சிலர் நடுத்தர வயதை எட்டியிருக்கும்போதே சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டு, முடி கொட்டி, கூட பத்து வயது ஆகிவிட்டது போன்ற தோற்றத்துடன் காணப்படுவர். வேறு சிலரோ. வயது கூடிவிட்ட போதும் இளமைத் துள்ளலோடு நல்ல ஆரோக்கியத்துடன் தோற்றமளிப்பர். இவை இரண்டுக்கும் அவரவர் உட்கொள்ளும் உணவே காரணம் எனலாம். வயதாகிவிட்ட தோற்றம் வராமலிருக்க என்னென்ன உணவுகளை உண்ணலாம் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெரி, ராஸ்பெரி, பிளாக்பெரி போன்ற பழங்களில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. குறிப்பாக, அன்த்தோஸியானின் (anthocyanin) என்ற ஆன்டி ஆக்சிடன்ட்டானது ஆக்சிடேடிவ் ஸ்ட்ரெஸ் மற்றும் உடலில் ஏற்படும் வீக்கத்தை எதிர்த்துப் போராடி, இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க உதவும்.
சால்மன், மக்கரேல், சர்டைன் போன்ற மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ளன. இவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வீக்கத்தைக் குறைக்கவும் செய்யும். அதன் மூலம் சருமம் பொலிவடையும்; தோற்றம் எழில் பெறும்.
பாதாம், வால்நட், ஃபிளாக்ஸ் மற்றும் சியா போன்ற விதைகள் வைட்டமின் E, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள் போன்ற சத்துக்கள் நிறைந்தவை. இவை ஆக்சிடேடிவ் ஸ்ட்ரெஸை குறைத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
டார்க் சாக்லேட்டை குறைந்த அளவில் உட்கொள்ளும்போது, கோக்கோவிலுள்ள ஃபிளவோனோய்ட் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்து சூரியக் கதிர்கள் மூலம் சருமத்து செல்களுக்கு ஏற்படும் அழிவைத் தடுக்கிறது.
பசலை, காலே போன்ற இலைக் காய்கறிகளில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. இவை சரும ஆரோக்கியம் உள்பட, உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் காக்கின்றன. இதனால் தோற்றத்தில் இளமை நிலைக்கும்.
க்ரீன் டீயில் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் ஏராளம் உள்ளன. அதன் பாலிஃபினால் மற்றும் கேட்டசின்கள் உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் காத்து இளமைத் தோற்றம் தருகின்றன.
அவகோடா பழங்களில் ஆரோக்கியம் நிறைந்த மோனோ அன்சாச்சுரேடட் கொழுப்புகள், வைட்டமின் E மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகளவு உள்ளன. இவை சருமத்தை நீரேற்றத்துடனும், மிருதுத்தன்மையுடனும் வைக்க உதவி புரிகின்றன.
மேற்கூறிய உணவு வகைகளை நாம் தினசரி உணவில் சேர்த்து உண்டு, நீண்ட நாள் இளமைத் தோற்றத்தோடு வாழ்வோம்.