Siddha Medicine Treatment for Piles 
ஆரோக்கியம்

மூலநோய்க்கான சித்த மருத்துவம்!

நந்தினி சுப்ரமணியம்

மூலநோய்: உடலில் இருக்கும் பிரச்னைகளில் ஒன்றுதான் மலச்சிக்கல். அந்த மலச்சிக்கல் பிரச்னை அதிகம் இருந்து அதனை சரிசெய்யலனா அதற்கு அடுத்த நிலையான பைல்ஸ் வந்துவிடும். பைல்ஸை மூலநோய் என்றும் அழைப்பர். இத்தகைய பைல்ஸ் பிரச்னை வந்துவிட்டால் சரியாக உட்கார முடியாது. எப்போதும் ஒருவித மன அழுத்தம் இருக்கும்.. பைல்ஸ் என்பது சாதாரணமானது அல்ல. அது வந்தால், மலவாயில் கழிவுகளை வெளியேற்றியப் பின்னரும், வெளியேற்றும் போதும் கடுமையான வலி ஏற்படுவதோடு, ரத்தப்போக்கு, அரிப்பு போன்றவையும் ஏற்படும்.

அறிகுறிகள்: மலம் இறுகி எளிதில் வெளியேறாது, அடிக்கடி சிறுகச் சிறுக வயிறு மற்றும் ஆசன வாயில் வலி, எரிச்சலுடன் மலம் கழித்தல், மலத்துடன் ரத்தம் வெளியேறுதல், மூல சதை வெளித்தள்ளுதல், உண்ட உணவு செரிமானமின்மை, புளித்த ஏப்பம்.

மூலநோய் ஏற்படக்கூடிய காரணங்கள்: மிகுந்த காரமான உணவுப் பொருட்களை அடிக்கடி உண்பதாலும், உடல் வெப்பத்தை அதிகப்படுத்தக் கூடிய உணவுகளை உண்பதாலும், அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவதாலும், போதுமான அளவு நீர் அருந்தாமல் இருப்பதாலும், கோழி இறைச்சி அதிகமாக உண்பதாலும், நெடுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதாலும், நார்ச்சத்துள்ள உணவு பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பதாலும், தொடர்ந்து தூங்காமல் இருப்பதாலும் மூல நோய் ஏற்படுகிறது.

மூலநோய்க்கு சித்த மருத்துவம்: மூலநோய் தோன்றியதுமே பாதிப்படைந்த வாதம், பித்தம், கபத்தினை சரிசெய்து, ஆரோக்கிய நிலை அடைய செய்வதோடு மீண்டும் நோய் தோன்றாமல் இருக்க வாழ்க்கை முறைகளும் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

உள்ளுக்கு சாப்பிடும்10 சித்த மருத்துவ முறைகள்:

  1. மலச்சிக்கலை போக்கி, பசியின்மையை போக்க திரிபலா சூரணத்தினை உணவிற்கு முன் வெந்நீர் அல்லது நெய்யுடன் கொடுக்க வேண்டும்.

  2. கடுக்காய் சூரணத்தினை வெல்லம் கலந்து இரண்டு வேளை உணவிற்கு பின் கொடுத்து வர குதத்தில் சேரக்கூடிய மலத்தினை இலகுவாக வெளியேற்றுவதுடன் ஆசனவாய் முறைகளை போக்கும்.

  3. நாயுருவி இலையை அரைத்து கொட்டைப்பாக்கு அளவு உருட்டி நல்லெண்ணையில் குழப்பி 7 நாட்களுக்கு இரண்டு வேளை வீதம் கொடுக்கலாம்.

  4. பிரண்டை கொழுந்தை நெய்யில் வதக்கி அதனை அரைத்து கொட்டைப்பாக்களவில் காலை, மாலை உண்டுவர ரத்தமூலம் ஒழியும்.

  5. ஒன்பது துத்தி இலையை தினமும் வெறும் வயிற்றில் நாள்தோறும் 40 நாட்களுக்கு அருந்துவதால் மூலநோய் குணமாகும்.

  6. வாழை பூச்சாற்றில் சீரகப் பொடியை பாக்களவு கலந்து குடித்து வர மூலக்கடுப்பு நீங்கும்.

  7. துத்தி இலையுடன் பாசிப்பயறு, வெங்காயம், மிளகாய், சிறிது தேங்காய் பால், சிறிது உப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு மோரும் அருந்த, மூலவியாதி தணிந்துவிடும்.

  8. கற்றாழைச் சோற்றை துண்டுகளாக வெட்டி கழுவி எடுத்த சோற்றுடன் பால், சர்க்கரை சேர்த்து உண்டுவர மூலநோய் தணியும்.

  9. நாவற்பட்டையை பொடி செய்து எருமைத் தயிரில் கலந்து இரண்டு வேளை உண்ண மூல நோய் போகும்.

  10. மருதம்பட்டை பொடியை கொட்டைப்பாக்களவு எடுத்து பசும்பாலில் கலந்து இரண்டுவேளை வீதம் மூன்று நாள் உட்கொள்ளலாம்.

வெளிமருத்துவ முறைகள்:

  1. ஈர வெங்காயத்தை தணலில் சுட்டெடுத்து நன்கு அரைத்து பச்சை வெண்ணைய் கூட்டி குழப்பி மூலத்தில் கட்டிவர மூலக்கட்டி, திரட்சி, வீக்கம், தினவு, கடுப்பு இவைகள் நீங்கும்.

  2. தேங்காய் பூவை அரைத்து மூன்று தடவை மூலத்தில் வைத்துக்கொள்ள, மூலக்கடுப்பு வேதனை நீங்கும்.

  3. கடுக்காய் பொடியை மூலமுளையின் மீது தூவலாம் அல்லது ஆசனவாயினை கழுவ பயன்படுத்தலாம்.

  4. சிற்றாமணக்கு இலை, வெங்காயம் சம அளவு பொடியாய் அரிந்து ஆமணக்கு எண்ணெயில் வதக்கி, இரவில் இளஞ்சூடாக ஒத்தடமிட்டு அதனையே ஆசனவாயில் கட்டிவர ஆசனக் கடுப்பும், எரிச்சலும் நீங்கும்.

உணவில் சேர்க்க வேண்டியவை: பூண்டு, வெங்காயம், கருணைகிழங்கு,வெண்ணை, பால், மோர், கீரை வகைகள், அத்திப்பழம் மாதுளை, திராட்சை, கொய்யா.

தவிர்க்க வேண்டியவை: இஞ்சி, பச்சை மிளகாய், மைதா சேர்ந்த உணவுகள், கோழிக்கறி, காரமான உணவுகள்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT