மெளன நடைப்பயிற்சி https://www.nytimes.com
ஆரோக்கியம்

மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மௌன நடைப்பயிற்சி!

தி.ரா.ரவி

ற்போது நடைப்பயிற்சி செய்வது பலரது இயல்பாக மாறிவிட்டது. பெரும்பாலானவர்கள் காதுகளில் இயர் போன் மாட்டிக் கொண்டு, செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டே நடைப்பயிற்சி மேற்கொள்வர். சிலர் நண்பர்கள் கூட்டத்துடன் அரட்டை அடித்துக் கொண்டே நடப்பார்கள். ஆனால், அலைபேசி உரையாடல், இயர் போன் பயன்பாடு, நண்பர்களுடன் அரட்டை இவை எதுவுமே இன்றி மௌனமாக நடைப்பயிற்சி (silent walking) செய்வதால் உடலுக்கும் மனதுக்கும் ஏராளமான நன்மைகள் உண்டு. அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

இயந்திரத்தனமான நடைப்பயிற்சி: ஒரு மனிதர் செல்போனில் அரட்டை அடித்துக் கொண்டோ அல்லது இயர்ஃபோனில் பாட்டு கேட்டுக்கொண்டோ நடக்கும்போது அவரது கவனம் முழுக்க, தான் பேசுவதிலும் கேட்பதிலும் மட்டும் இருக்கும். சுற்றி நடப்பவற்றை அவருடைய கண்கள் கவனிக்காது. ஒரு இயந்திரத்தனமான நடைப்பயிற்சியைத்தான் அவர் மேற்கொள்வார்.

மௌன நடைப்பயிற்சியின் மேன்மைகள்: கைகளை வீசிக்கொண்டு சுற்றிலும் உள்ள இயற்கை காட்சிகள், மனிதர்கள், தன்னை சுற்றி உள்ள உலகம் இயங்கும் விதம் ஆகியவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டே நடக்கும்போது என்ன நிகழ்கிறது தெரியுமா?

1. புன்னகைப் பரிசு: நாம் வழக்கமாக செல்லும் சாலையில் பலவிதமான முக பாவங்களோடு நம்மைக் கடந்து செல்லும் மனிதர்களைப் பார்ப்போம். எதிரில் வரும் சில மனிதர்கள் நம்மைப் பார்த்து சிறு புன்னகை புரிவார்கள். அது மனதிற்கு இதமாக இருக்கும். பதிலுக்கு நாமும் ஒரு புன்னகையை சிந்தலாம்.

2. புலன்களுக்கு விருந்து: சாலையோர மரங்களில் இருக்கும் பறவைகளின் கீச்சொலியும், அவை படபடக்கும் சிறகுகளின் ஒலியும் காதுகளுக்கு இனிமை சேர்க்கும். நம்மைக் கடந்து செல்லும் தள்ளு வண்டியில் இருந்து வீசும் பலாச்சுளை அல்லது மாம்பழத்தின் மணம் நாசியை வருடும். சிவப்பு நிற ஆப்பிளோ, மஞ்சள் வண்ண சாத்துக்குடியோ, பச்சை நிற காய்கறிகள் அல்லது கீரை வகைகள் கண்களுக்கு குளிர்ச்சியூட்டும். சாலையோர டீக்கடையிலிருந்து வரும் பஜ்ஜி வாசம் கூட இதமாக இருக்கும்.

3. தியானத்திற்கு ஒப்பானது: இயற்கையை ரசித்துக்கொண்டே அமைதியாக நடப்பது தியானத்திற்கு ஒப்பானது. இப்போதைய தருணத்தில் இருக்க உதவுகிறது. இது மிகவும் சக்தி வாய்ந்த நடைமுறையாக இருக்கிறது. கவனச்சிதறல்களில் இருந்து விலகி இருப்பது மூளைக்கு நல்ல பயிற்சியாக இருக்கும். டிஜிட்டல் பயன்பாடு அற்ற பொழுதுகள் காதுகளுக்கும் கண்களுக்கும் மற்றும் மனதுக்கும் மிகுந்த நன்மை செய்கிறது.

4. மனச்சோர்வு நீங்கி, உற்சாகம் பெருகும்: நடைப்பயிற்சியின்போது நிகழ் காலத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் மூளை தொடர்ந்து நமக்குள் உரையாடுவதைத் தடுக்க உதவுகிறது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கிறது. மேலும், கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற அறிகுறிகளை நீக்கி உற்சாகமான மனதிற்கு வழிவகுக்கிறது. உடலுக்கு இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் இரவில் நல்ல தூக்கம் வரும்.

5. கவனிக்கும் கலை: நடைப்பயிற்சி செய்யும் இடம் மொட்டை மாடி, தெரு அல்லது ஒரு பூங்காவாகக் கூட இருக்கலாம். அவ்வப்போது முகத்தில் வந்து மோதும் காற்றை நன்றாக அனுபவித்து ரசிக்க வேண்டும். நம்மைக் கடந்து செல்லும் மனிதர்களைக் கவனிக்கும் கலை வளரும். அமைதியாக நடப்பது ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் போகப்போக இது ஒரு அற்புதமான பழக்கமாக மாறிவிடும்.

அவசர காலத்தில் விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? 

உங்கள் இரவு தூக்கத்தைக் கெடுக்கும் 8 விஷயங்கள் எவை தெரியுமா?

கருப்பு ஆப்பிள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அடிக்கடி ஜெல்லி மிட்டாய் சாப்பிடுபவரா நீங்க? போச்சு போங்க..! அப்போ உங்களுக்கும் இந்த விஷயம் தெரியாதா?

கதைகளை எங்கிருந்து எடுக்கலாம் – பாக்யராஜ் ஓபன் டாக்!

SCROLL FOR NEXT