கடலை மாவு கொண்டைக் கடலையிலிருந்து தயாரிக்கப்படுவது. சமையலில் ஸ்வீட், காரம் என பலவிதமான உணவு தயாரிப்பில் இம்மாவு உபயோகப்படுத்தப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
பதப்படுத்தப்பட்ட வேறு மாவுகளுக்கு மாற்றாக கடலை மாவை உபயோகப்படுத்துவதற்கு இதில் நிறைந்துள்ள அதிகளவு புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவையே காரணமாகும்.
வெஜிடேரியன்களும் வேகன்களும் தங்களின் புரோட்டீன் சத்தின் தேவைகள் நிறைவேற தாவரப் புரோட்டீன் நிறைந்த இம்மாவினால் தயாரிக்கப்படும் பலவிதமான உணவுகளை தாராளமாக உட்கொள்ளலாம்.
கடலை மாவு இயற்கையாகவே ஒரு க்ளூட்டன் ஃபிரி உணவாக இருப்பதால் சீலியாக் (Celiac) நோய் உள்ளவர்கள் இதை தாராளமாக உண்ணலாம். கடலை மாவில் உள்ள அதிகளவு நார்ச்சத்து ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்பாடுகளை சிறப்பாக்குகிறது; எடையை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது; இரத்த சர்க்கரை அளவையும் சமநிலையில் இருக்கச் செய்து உடல் ஆரோக்கியம் காக்கிறது.
கடலை மாவில் தயாரித்த உணவுகளை உண்பதால் உடலில் LDL என்னும் கெட்ட கொழுப்பின் அளவு குறைய வாய்ப்புள்ளது. இதனால் இதய நோய்கள் வரும் வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.
இந்த மாவானது குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் (GI) கொண்டுள்ளதால், இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் சமநிலையில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது. இதன் மூலம் டைப் 2 டயாபெட் வரும் ஆபத்து குறைகிறது.
கடலை மாவு, சமையலில் பகோடா, முறுக்கு, பான்கேக், மைசூர் பாக், க்ளூட்டன் ஃபிரி பேக்ட் (baked) போன்ற சுவையான வகை வகையான உணவுகள் தயாரிக்க உதவுகிறது.
சோப்பிற்குப் பதில் கடலை மாவு தேய்த்துக் குளித்தால் சருமம் பளபளப்புப் பெறும். கடலை மாவுடன் மஞ்சள் மற்றும் பன்னீர் சேர்த்து பேஸ்ட்டாக்கி முகத்தில் பூசி இருபது நிமிடம் கழித்து கழுவி வர முகம் பிரகாசமடையும்.
உணவுகளின் சுவையைக் கூட்டி, உடலுக்கு ஊட்டச்சத்துக்களையும் வாரி வழங்கவல்ல கடலை மாவின் தயாரிப்புகளை, அவற்றிலுள்ள ஆரோக்கிய நன்மைகளைக் கருத்தில் கொண்டு நாமும் உண்போம்; உடல் நலம் பல பெறுவோம்.