So many benefits of nookal vegetable https://www.maalaimalar.com
ஆரோக்கியம்

நூக்கல் காயில் இத்தனை நன்மைகளா?

சேலம் சுபா

ம் விருப்ப உணவுப் பட்டியலில் அதிகம் இடம் பெறாத காய்களில் ஒன்று நூக்கல். ஆனால், இதிலுள்ள நன்மைகளைத் தெரிந்துகொண்டால் நிச்சயம் இதை ஒதுக்க மாட்டோம். அப்படி என்னதான் இருக்கு நூக்கலில் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

நூக்கல், பிராசிகா ஒலரேசியா (Brassica oleracea) குடும்பத்தைச் சேர்ந்த காய்கறி ஆகும். தமிழில் நூல்கோல் என்றும் வட இந்தியாவில் கோஹ்ராபி, ஜெர்மன் டர்னிப் என்றும் அழைக்கப்படுகிற இதை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம். இதன் சுவை சற்றே புரோக்கோலியை போலவே உள்ளது. நூல்கோலின் தண்டு மற்றும் இலைகளும் சமைத்து உண்ண ஏற்றது.

நூக்கலின் மருத்துவப் பலன்கள் என்ன?

இந்தக் காயில் வைட்டமின்கள் A, E, C, போன்றவைகளும் மற்றும், மாங்கனீசு, பீட்டா கரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துக்களும்  நிறைந்துள்ளன. குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட காய்கறியான இது உடலின் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதுடன் அதிக எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

பொதுவாக, நமக்கு  வயதாகும்போது எலும்புகள் பலவீனமடைவதை தவிர்க்க முடியாது. அதிக மாங்கனீசு, இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்த காயான இதை அடிக்கடி உணவில் எடுக்கும்போது எலும்புகள் வலிமை பெறுகிறது.

இக்காயில் நார்ச்சத்துக்கள் மிகுந்திருப்பதால் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கல், தசைப்பிடிப்பு மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. மேலும் இதன் ஊட்டச் சத்துக்கள் இரைப்பை மற்றும் குடல் அமைப்பின் தரத்தை மேம்படுத்துகிறது.

நூக்கலில் பீட்டா கரோட்டின் உட்பட, கரோட்டின்களின் சத்துக்கள் அடங்கி உள்ளதால் கண்களில் ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு கண்களுக்கு பாதுகாப்பு தருகிறது. மேலும், இதிலுள்ள வைட்டமின் ஏ மாகுலர் சிதைவைத் தடுக்கவும், கண் புரையின் தாக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

இதிலுள்ள பொட்டாசியம் ஒரு வாசோடைலேட்டராக செயல்பட்டு திடீரென இரத்த அழுத்த உயர்வதைக் குறைக்கிறது. தமனிகள் மற்றும் இரத்த நாளங்களில் உள்ள பதற்றத்தை குறைத்து போதுமான இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் உடலின் முக்கிய உறுப்புகளைப் பாதுகாக்க உதவுகிறது.

பொட்டாசியத்துடன் நூக்கலில் இரும்புச் சத்தும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளதால் இது  இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகையை தடுக்க அவசியமான இரத்த சிவப்பணுக்களை (RBC) அதிகரிக்க உதவுகிறது. இதனால் உண்டாகும் பலவீனம், சோர்வு, தலைவலி, வயிற்று கோளாறுகள் போன்றவற்றைத் தடுக்கிறது.

நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் இந்தக் காயை அடிக்கடி சாப்பிடலாம். நூக்கல் சாறு 45 மி.கி. சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், புற்றுநோய், இதய நோய், கீல்வாதம், மூல நோய், அதிக கொழுப்பு, கல்லீரல் நோய், மாதவிடாய் அறிகுறிகள் போன்ற பல உடல் நலப் பாதிப்புகளைத் தடுக்கிறது.

குறிப்பாக, இதிலுள்ள குறைந்த கலோரி மற்றும் அதிக அளவு நார்ச்சத்து பசியைக் கட்டுப்படுத்தி உடலில் அதிக கலோரிகள் சேர்க்கப்படுவதைக் குறைத்து உடல் எடை குறைப்பில் உதவுகிறது என்பதால்  முற்றாத இளம் காயில் சாலட், கூட்டு, ஜூஸ், சூப்,  குழம்பு போன்றவற்றில் பயன்படுத்தி அளவோடு உண்பது நல்லது.

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

SCROLL FOR NEXT