Barley water
Barley water https://tamil.samayam.com
ஆரோக்கியம்

பார்லி தண்ணீரில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

ஜெயகாந்தி மகாதேவன்

கோடை வெப்பத்தைத் தணிக்க வெறும் தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டிருக்காமல், நீர்ச்சத்துடன் வேறு பல ஊட்டச்சத்துக்களையும் தரக்கூடிய பானங்களை அருந்துவது உடலுக்கு கூடுதல் நன்மை தரும். நீர்ச்சத்துடன் உடலுக்கு குளிர்ச்சியையும் மேலும் பல ஊட்டச் சத்துக்களையும் தரக்கூடியது பார்லி வாட்டர். பார்லி தானியத்தை கொதிக்கும் நீரில் போட்டு அது வெந்த பின் இறக்கி, வடித்தெடுத்தால் கிடைக்கும் நீர் பார்லி வாட்டர். இந்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

உடலுக்கு நீரேற்றமும் புத்துணர்ச்சியும் தரக்கூடிய பானம் இது. கோடையில் வியர்வையால் ஏற்படும் நீரிழப்பை சமநிலைக்குக் கொண்டு வந்து டீஹைட்ரேஷன் மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் பின் விளைவுகளை தடுக்கவும் இது உதவும்.

பார்லி வாட்டரில் வைட்டமின் B1, B3, B6, வைட்டமின் C மற்றும் மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து போன்ற மினரல்களும் அதிகளவில் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் நம் உடல் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பாதுகாத்துப் பராமரிக்க மிகவும் உதவி புரிகின்றன.

இதிலுள்ள கரையக்கூடிய நார்ச்சத்தானது சிறப்பான செரிமானத்துக்கு உதவுவதுடன் கழிவுகள் உணவுப் பாதையை சிரமமின்றி கடந்து வெளியேறவும் உதவுகிறது. பார்லி வாட்டர் இரைப்பைக்கு குளிர்ச்சி தரவும், இரைப்பை - குடல் பாதையில் உண்டாகும் கோளாறுகளை குணப்படுத்தவும் செய்கிறது.

கலோரி அளவும் கொழுப்புச் சத்தும் பார்லி வாட்டரில் குறைவு என்பதால் எடைக் குறைப்பிற்கு ஏற்ற பானமாகிறது இது. இதிலுள்ள அதிகளவு நார்ச்சத்து நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து உட்கொள்ளும் கலோரி அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

பார்லி வாட்டர் இயற்கை முறையில் அசுத்தங்களையும் நச்சுக்களையும் உடலிலிருந்து வெளியேற்ற உதவும். இதன் டையூரெடிக் குணமானது கிட்னியில் உற்பத்தியாகும் யூரின் அளவை அதிகரிக்கச் செய்து அதன் வழியே பாக்டீரியாக்களையும்  நச்சுக்களையும் விரைவில் வெளியேற்ற உதவுகிறது. சிறுநீர் பாதையின் ஆரோக்கியத்தை வலுவாக்கி தொற்றுக்களின் தாக்கத்தைத் தடுக்கவும் எரிச்சல் ஏற்படுத்தும் உணர்வைக் குறைக்கவும் செய்கிறது.

பார்லி வாட்டர் குறைந்த க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயர்வது தடுக்கப்படுகிறது. இந்த நீரை நீரிழிவு நோய் உள்ளவர்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்க முடியும்.

பார்லி வாட்டரில் உள்ள வைட்டமின் C மற்றும் செலீனியம் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்க உதவுகின்றன. இதன் மூலம் உடல் தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி ஜெயிக்க முடிகிறது; உடலிலுள்ள நோய்களையும் விரைவில் குணப்படுத்த முடிகிறது. இதன் இயற்கையான குளிர்விக்கும் தன்மையானது உடல் உஷ்ணத்தையும் தாகத்தையும் குறையச் செய்து உடலுக்கு புத்துணர்ச்சி ஊட்டக் கூடியது.

பார்லி வாட்டரில் உள்ள வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் சரும ஆரோக்கியத்தையும் காக்க உதவுகின்றன. தொடர்ந்து இந்நீரை அருந்தி வந்தால் சருமத்தில் ஏற்படும் வீக்கங்கள் குறைந்து பளபளப்பும் ஆரோக்கியமும் நிறைந்த சருமம் பெற முடியும்.

இத்தனை ஆரோக்கிய நன்மைகள் தரும் பார்லி வாட்டரை இந்தக் கோடைக்காலத்தில் அடிக்கடி அருந்தி நோய்த் தாக்கம் இன்றி வாழ்வோம்.

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

கவிதை - மாற்றம் வேண்டும்!

60 + வயது... அழகு நிலையம் செல்வது எதற்கு?

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி சந்தோஷமாக வாழ்வோம்!

SCROLL FOR NEXT