சொடக்கு தக்காளி https://www.sudagarkrishnanchannels.com
ஆரோக்கியம்

அம்மை நோயை விரட்டும் அரிய மூலிகை சொடக்கு தக்காளி!

சேலம் சுபா

க்காளி தெரியும்; அதென்ன சொடக்குத் தக்காளி? நம் கண்ணெதிரே இருந்தாலும் அதன் அருமை பெருமைகளை அறியாத பழங்களில் ஒன்றுதான் சொடக்குத் தக்காளி. குறிப்பாக, கிராமங்களில் இதை அறியாதவர்கள் இல்லை எனலாம். கிராமப்புறங்களில் சாலை ஓரங்களிலோ அல்லது வீடுகளின் அருகாமையிலோ தானாகவே வளரும் மூலிகை செடிகளில் இந்த சொடக்கு தக்காளியும் ஒன்று.

கிராமங்களில் சிறுவர்கள் இந்த தக்காளிப் பழத்தை செடியில் இருந்து பறித்து  நெற்றியில் வைத்து உடைக்கும்போது ‘பட்’ என சொடக்கு போடுவது போன்ற ஒரு சத்தம் எழும். இதனால்தான் இந்த மூலிகை பழத்திற்கு 'சொடக்கு தக்காளி' என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.

மணத்தக்காளி வகையை சேர்ந்த இதில் பக்கவிளைவுகள் அற்ற பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இதில்  வைட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்டுகள் நிறைந்து உள்ளதால் கண்களின் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. உடலின் ஆரோக்கியத்துக்கு அவசியமான வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மிக அதிக அளவில் உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதிலுள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்  சத்துக்கள் எலும்புகள் பலம் பெற உதவும். மேலும், இதில் உள்ள பெக்டின் எனும் நார்ச்சத்து நமது செரிமான மண்டலம் மற்றும் குடல் இயக்கங்களை சீராக்கும். இதனால் வரும் மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை இது தடுக்கிறது. சொடக்கு தக்காளி வலி நிவாரணியாகவும், கட்டிகளைப் போக்கும் தன்மை கொண்டதாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் விளங்குகிறது என மருத்துவக் குறிப்புகள் சொல்கின்றன.

சொடக்கு தக்காளியின் இலைகளில் உள்ள நோய் நிவாரணங்கள் அநேகம். இதன் இலைகள் மற்றும் பழங்களுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து கட்டியின் மேல் போட்டு வந்தால், கட்டிகள் சுலபமாக கரைந்து  வலியும் சுலபமாக நீங்கும் என்கிறார்கள். அதேபோல, இம்மூலிகையின் இலைகளையும், காய்களையும் நசுக்கி, ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் போட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளையும் சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சுத்தமான சொடக்கு தக்காளி இலைகளை அம்மியில் அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு காலை நேரத்தில் வெறும் வயிற்றில் மோரில் கலந்து ஐந்து நாட்கள் தொடர்ந்து குடித்து வர தற்போது பயமுறுத்தும் குரங்கு அம்மை, சிற்றம்மை போன்ற அம்மை நோய்கள் விரைவில் குணமாகும் என்கின்றனர். இவை அனைத்தையும் தகுந்த சித்த அல்லது ஆயுர்வேத மருத்துவர் ஆலோசனை கீழ் எடுத்துக்கொள்வது நல்லது.

மேலும் நீரிழிவு, இரத்த சோகை, நினைவாற்றல் பாதிப்பு, சளி காய்ச்சல் போன்ற பல உடல் நல பாதிப்புகளுக்கு தீர்வு தரும் சொடக்குத் தக்காளி செடி வளர நம் வீட்டு மாடி அல்லது வீட்டு அருகில் உள்ள சிறு இடம் போதும். பூச்சித் தாக்குதல் பாதிப்பின்றி பராமரிப்பு அதிகம் தேவைப்படாத இந்த சொடக்குத் தக்காளியை வளர்த்து பயன்படுத்தி உடல் நலம் பெறுவோம்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT