மனிதனுடைய வாழ்வில் சந்தோஷம் தருவது எது என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒன்றைக் கூறுவர். ஆனால், பெரும்பாலானோர் கூறுவது, ‘நிம்மதியான தூக்கம்’ என்பதுதான். காரணம், தூக்கத்தை விட சந்தோஷம் தரும் விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது. இதை நான் கூறவில்லை, பிரிட்டனில் நடந்த ஒரு ஆய்வில் கண்டறிந்து கூறிய உண்மை.
பணம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி உலகில் மன நிம்மதியுடன் வாழ்கிறவர்கள் இரவில் நன்கு தூங்கி எழுந்தவர்கள்தான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இளமையில் நன்றாகத் தூங்கி எழுந்தவர்கள் முதுமையில் ஆரோக்கியமாகவும், அறிவுபூர்வமாகவும் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.
நாள் முழுவதும் எவ்வளவு பிரச்னைகளை சந்தித்தாலும், அன்று இரவு நன்றாகத் தூங்கி விட்டு மறுநாள் காலையில் எழும்போது புத்துணர்ச்சி பிறக்கிறது. புதிய உற்சாகத்துடன் அன்றைய நாளை தொடங்க முடிகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு உணவு எவ்வளவு முக்கியமோ, அந்தளவுக்கு தூக்கமும் அவசியம். உலகில் இயங்கும் எந்தவொரு ஜீவராசிக்கும் ஓய்வு அவசியம். அந்த ஓய்வினை தூக்கம் மூலமாக உடலுக்கு நாம் அளிக்கிறோம்.
தூக்கம் நமது உடலில் இழந்த செல்களை புதுப்பிப்பதுடன், மூளையின் செயல்பாட்டிற்கும், நினைவாற்றலுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தியின் வளர்ச்சிக்கும், ஹார்மோன் சுரப்பு சமநிலைக்கும் தேவையானதாக இருக்கிறது.
அசதி, கவனக்குறைவு, ஞாபக மறதி, மன உளைச்சல், இரத்த அழுத்தம் அதிகரிப்பு, இதய நோய், சர்க்கரை நோய், கண் பார்வை குறைபாடு, கல்லீரல் மற்றும் குடல் சார்ந்த நோய்கள் போன்றவற்றிற்கும் தூக்க குறைபாடு காரணமாக இருப்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. தூக்கக் குறைபாடு உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய், மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.
நமது உடல் நலம், மன நலம் போன்றவற்றுக்கு உணவு, உடற்பயிற்சி போன்றவை எந்தளவு அவசியமோ தூக்கமும் அதே அளவு அவசியம். எவ்வித தடங்கலும் இல்லாமல் தினமும் வழக்கமான நேரத்தில் தூங்குவது நாள்பட்ட நோய்கள், உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை குறைக்கும் என்று 'வோர்ல்ட் ஸ்லீப் டே' நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது.
வளர்சிதை மாற்ற (Metabolism) பணிகளில் ஒன்றுதான் தூக்கம். வளர்சிதை மாற்றத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று அனபாலிசம்; மற்றொன்று கெடபாலிசம். இவற்றை சமன்படுத்தும் பணிகள் தூக்கத்தின்போதுதான் நிகழ்கின்றன. எனவே, தூக்கம் என்பது மிகவும் அவசியம். தூக்கத்தின்போதுதான் நமது உடலில் அணுக்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. தூக்கம் குறையும்போது நோய் எதிர்ப்பு குறைந்துவிடுகிறது. இதனால் பல்வேறு நோய்கள் வரக் காரணமாகிறது.
தூக்கம் இயற்கையின் வரம். தூக்கத்தின் மொத்த நேரத்தை விட ஆழ்ந்த தொடர் தூக்கம்தான் மிகவும் அவசியம். தினமும் 7 முதல் 9 மணி நேரம் தூங்குபவர்களுக்கு நோயின் தாக்கம் அதிகம் இல்லை என்பது ஆராய்ச்சி முடிவு.
ஆரோக்கியத்தின் அடையாளம் நல்ல தூக்கம் என்பது நிரூபிக்கப்பட்ட மருத்துவ உண்மை. ஆனால், எது ஆரோக்கியமான தூக்கம்? என்ற கேள்வி எழுவதுண்டு. இதற்கு விடை தந்துள்ளனர் அமெரிக்காவின் நேஷனல் பிலிப் பவுண்டேஷன் ஆராய்ச்சியாளர்கள். அவர்கள் படுத்தவுடன் 30 நிமிடங்களுக்குள் அல்லது அதற்கும் குறைந்த நேரத்தில் தூங்குவது, இடையில் இரவில் ஒரே ஒரு மட்டும் எழுந்து பின் 20 நிமிடங்களுக்குள் மீண்டும் ஆழ்ந்து தூங்குவது என்பதுதான் ஆரோக்கியமான தூக்கத்தின் அளவுகோல் என்கிறார்கள்.
65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இதில் விதிவிலக்கு உண்டு. அவர்கள் படுத்தவுடன் 60 நிமிடங்களுக்கு முன்னதாக தூங்கிவிட வேண்டும். வயதானவர்கள் என்றால் இரவில் இரண்டு முறை எழலாம். ஆனால், அந்த இரு முறையும் 30 நிமிடங்களுக்குள் மீண்டும் தூங்கி விட வேண்டும். இரவில் படுக்கையில் இருக்கும் நேரத்தில் 85 சதவீத நேரம் அவசியம் தூங்கியாக வேண்டும். மாறாக, புரண்டு புரண்டு படுத்து 40 சதவீத நேரமே தூங்குவது ஆரோக்கியத்திற்கு கேடு தரும் என எச்சரிக்கிறார்கள்.
ஒரு ஆரோக்கியமான மனிதனாக சுறுசுறுப்பாக அன்றாடப் பணிகளில் நாம் ஈடுபட்டு வர தூக்கம் ஒரு முக்கிய அம்சமாக இருப்பதை உணர்ந்து அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஏன் என்கிறீர்களா? பின்னாளில் வரும் ஒவ்வொரு பெரிய நோய்க்கும் ஆரம்பத்தில் நீங்கள் சரிவர தூங்காமல் இருந்தது காரணமாக இருக்கலாம் என்கிறார் அமெரிக்காவின் பெர்க்லி பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர் மாத்யூ வாய்க்கர். இளமையில் நன்றாகத் தூங்கி எழுந்தவர்கள் முதுமையில் ஆரோக்கியமாகவும், அறிவுபூர்வமாகவும் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஒரு மனிதனுக்கு குறைந்தபட்சம் 7 மணி நேர தூக்கம் அவசியம். அதற்குக் குறைவாகத் தூங்குவதும், அதையும் தாண்டி நீண்ட நேரம் தூங்குவதும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். அதிக தூக்கமும், குறைந்த தூக்கமும் ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாகவே நம்மை முதுமை அடைய வைக்கும். ஆக, தினமும் நீங்கள் இரவில் படுக்கச் செல்லும் நேரத்தை வரையறுத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. பெண்கள், ஆண்களை விட அதிகமாக அரை மணி நேரம் தூங்க வேண்டும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஏனெனில், ஆண்களின் மூளையும், பெண்களின் மூளையும் வித்தியாசமாக அமைந்திருப்பதால் பெண்களுக்குக் கூடுதலாக அரை மணி நேரம் தூக்கம் தேவைப்படுவதாகக் கூறுகிறார்கள்.