எண்ணெய் வகைகள் சிலவற்றை பதமுறக் காய்ச்சி வைத்துக் கொண்டால் அவ்வப்போது நல்ல மருந்தாகப் பயன்படும். எளிதில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சில தைலங்களை தேய்த்துக் கொண்டால் ஆழ்ந்த உறங்கம் பெறலாம். உடலுக்கு எந்த விதத்திலும் தீங்கு தராத இயற்கையான முறையில் தயாரித்த சில தைல, எண்ணெய் வகைகளை இந்தப் பதிவில் காண்போம்!
* லெமன் கிராஸ் தைலத்தை தலையணையில் சிறிது தடவிக் கொண்டால் ஆழ்ந்த தூக்கம் வருவதாக நம்பப்படுகிறது.
* கரிசலாங்கண்ணி இலையினை கசக்கி பிழிந்து சாறு எடுத்து அத்துடன் நல்லெண்ணெய் சேர்த்து ஊற வைத்து, பின்னர் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என இரு வேளைகள் தலையில் தேய்த்து வந்தால் உடல் குளிர்ச்சி அடையும். இதனால் நன்றாகத் தூக்கம் வரும்.
* மருதாணி விதை எண்ணெயை உடம்பின் மீது தடவி வந்தால் உடலில் எரிச்சல் தணிந்து குளிர்ச்சியாக்கும். பிறகு தூக்கம் கண்களைத் தழுவும்.
* வேப்ப எண்ணெயை உடலில் பூசி வர வாதம், கிரந்தி, கரப்பான், இசிவு, காய்ச்சல், ஜன்னி ஆகிய உடல் உபாதைகள் குணமாகும். நோய் தீர்ந்தவுடன் தூக்கம் கண்களைத் தழுவும்.
* எலுமிச்சைப் பழச்சாறு, கரிசாலைச் சாறு, பால் இவற்றுடன் ஒன்றரை லிட்டர் நல்லெண்ணெய் கலந்து பதமுறக் காய்ச்சி வடித்துத் தலைமுடிக்குத் தடவி வர கூந்தல் நரைக்காமல் நீண்டு அடர்ந்து வளரும்.
* இஞ்சிச்சாறு, பால், சர்க்கரை கலந்த எலுமிச்சைப் பழச்சாறு இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்க, நான்கைந்து முறை பேதியாகும். இதனால் பசியின்மை, வயிற்று வலி போன்ற உபாதைகள் தீரும்.
* நந்தியாவட்டம் பூவுடன் சம அளவு களாப் பூ சேர்த்து ஒரு கண்ணாடி கலத்தில் இட்டு மூழ்கும் அளவு நல்லெண்ணெய் ஊற்றி வேடு கட்டி 20 நாட்கள் வெயிலில் வைத்துக் கொண்டு ஓரிருத் துளி காலை, மாலை கண்களில் விட்டு வர சதை வளர்ச்சி, பலவித கண் படலங்கள், பார்வை மந்தம் ஆகிய பிரச்னைகள் தீரும்.