சுவாச அமைப்பு என்பது மூக்கு, வாய், குரல் வளை, தொண்டை, நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய் ஆகியவற்றைக் கொண்டு இயங்குகிறது. தற்போது மழைக்காலம் துவங்கி விட்டது. இப்போது சுவாசப் பிரச்னையால் பலரும் பாதிப்பு அடைவதைக் காணலாம். சுவாசப் பிரச்னைகளைத் தடுப்பதற்கான சில எளிய வழிமுறைகளை இந்தப் பதிவில் காண்போம்.
1. வீடுகள் அல்லது அலுவலகங்களில் சரியான காற்று சுழற்சி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நாம் இருக்கும் இடத்தில் உள்ள அனைத்துக் கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறப்பதன் மூலம் சுத்தமான காற்றை சுவாசிக்க எளிதாக இருக்கும்.
2. தீ பயன்பாட்டில் இயங்கினால் புகை, கரி வரும் அல்லது காகிதத்தை எரிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் ஜன்னல் கதவுகள் திறந்திருப்பதையும், புகைபோக்கி சுத்தமாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
3. வீடு, அலுவலகம் பொது இடங்களில் சிகரெட், பீடி போன்றவற்றை பிடிக்காதீர்கள், மற்றவர்களும் உங்கள் வீட்டின் அருகில் புகைபிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
4. ஏசியில் உள்ள காற்று சீரமைப்பு வடிகட்டிகள் உட்பட எங்கும் தூசி சேராதபடி வீட்டு சாதனங்களை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். அறையிலிருக்கும் மின் விசிறிகளையும் தூசியின்றி சுத்தமாக வைக்கவும்.
5. வீட்டின் உள் மற்றும் வெளியில் உள்ள வளர்ப்புத் தாவரங்கள் மூடப்பட்ட நிலப்பரப்பில் இருப்பது நல்லது. புதர்கள் அல்லது மரங்களுக்கு அருகில் அடிக்கடி அமர்வது அல்லது நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.
6. ஊதுபத்தி, அறை நறுமணப் பொருள் (ஓடோர்) போன்ற ஒவ்வாமை தரும் அதீத வாசனைப் பொருட்களை தவிர்ப்பது நல்லது. செல்லபிராணிகள் இருந்தால் இடைவெளி முக்கியம்.
7. முறையான உடற்பயிற்சி அவசியம். நாள்பட்ட பல சுவாச பிரச்னைகளுக்கும் உடற்பயிற்சி ஒரு தீர்வாக இருக்கிறது. இது தசை வலிமை மற்றும் இருதய செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் மூச்சுத் திணறலைக் குறைக்க உதவுகிறது.
8. சமச்சீர் உணவு அவசியம். ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் குணப்படுத்துவதற்கும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும் முழு தானியங்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் பழங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
9. சுவாசப் பயிற்சிகள் மற்றும் தியானம் போன்றவை பல வகையான சுவாச பிரச்னைகளுக்கான தீர்வுகளில் ஒன்றாகும். சுவாசப் பிரச்னை மன அழுத்தம் மற்றும் ஓய்வெடுக்க இயலாத மாற்றங்களால் ஏற்படுத்தும் என்பதால் சுவாசிக்கும் முறையைக் கட்டுப்படுத்தும் வழிகளை நிபுணர்கள் மூலம் முயற்சிக்கலாம்.
10. எந்த வயதாக இருந்தாலும் சுவாசத்தில் பிரச்னை என்றால் அலட்சியமாக இல்லாமல் உடனடியாக மருத்துவரை அணுகினால் அதிக பாதிப்பிலிருந்து நிவாரணம் பெறலாம்.