ஒவ்வொரு பருவகால மாற்றத்தின்போதும் தட்பவெப்பம், காற்றின் ஈரப்பதம், உணவுப் பொருட்களின் தன்மை போன்றவற்றால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். இதனால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்னைகள் அதிகரிக்கும். இதைத் தவிர்க்க பருவகால மாற்றத்தின்போது ஒருசில விஷயங்களை பின்பற்ற. ஒவ்வாமை பிரச்னைகளை வராமல் தடுக்கலாம்.
வீட்டைச் சுற்றி ஒவ்வாமையை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுக்களை அகற்ற வேண்டும். வீட்டிற்குள் தரை விரிப்புகள் மற்றும் மரச்சாமான்களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளின் அறையில் அடைத்து வைத்திருக்கும் பொம்மைகள், பழைய டிரெஸ்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். இதன் மூலம் மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்னைகளை தவிர்க்கலாம்.
வாரத்திற்கு ஒருமுறை படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், பெட்ஷீட் போன்றவற்றை வெந்நீரில் துவைத்து கிருமிகள் இல்லாத சுத்தமான துணிகளாக உபயோகப்படுத்தலாம்.
திரைச்சீலைகள், சோபா இவற்றையும் சுத்தமாக வைத்திருக்க, ஒவ்வாமை பிரச்னைகள் வராது.
நீர்க்கசிவுகள் பாக்டீரியாக்கள், கொசுக்கள் உருவாகும் இடங்களைக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும். குளிர் காலத்தில் ஏ.சி.யின் ஹாட் மேடை உபயோகிக்கலாம்.
உணவில் பழையதை சாப்பிடாமல், ஃப்ரெஷ்ஷாக சமைத்து சாப்பிட வயிற்று ஒவ்வாமை வராது. அனைத்து பருவத்திலும் க்ரீன் டீ அருந்தலாம். இதில் இயற்கையான ஆன்டி ஹிஸ்டமைன்கள் உள்ளன. இவை ஒவ்வாமையால் ஏற்படும் எதிர்வினைகளைக் குறைக்கும்.
மஞ்சள், ஆரஞ்சு நிறக் காய்களுடன் பூண்டு, இஞ்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள, பருவகால அலர்ஜி பிரச்னைகளை வராமல் தடுக்கும்.
நெய்யை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. மசாலாப் பொருட்கள், காரமான உணவுகள், காபின், பால் பொருட்கள், சாக்லெட், வேர்க்கடலை, சிவப்பு இறைச்சி, சர்க்கரை, கோதுமை ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
மழை, பனிக்காலத்தில் வீட்டை காலை நேரங்களில் ஜன்னலை திறந்து வைத்து நன்கு காற்றோட்டமாக வைத்திருக்கலாம். சிறிய அளவில் சாம்பிராணி, வேப்ப இலை போன்றவற்றால் புகை போட, கிருமிகள் அழிந்து சுத்தமாக இருக்கும்.