இந்தியாவில் கோடை காலம் என்பது அனைவரும் ஓய்வெடுக்கும் பருவமாகும். அதாவது இந்த காலகட்டத்தில் பெரும்பாலும் விடுமுறை இருக்கும் என்பதால், மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வெளியே சென்று சுற்றிப் பார்ப்பார்கள். இருப்பினும் கோடைகால வெப்பம், பல்வேறு விதமான உடல்நல அபாயங்களைக் கொண்டு வருகிறது. எனவே கோடைகாலத்தில் நாம் நமது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
நீரேற்றத்துடன் இருங்கள்: பொதுவாகவே கோடை காலங்களில் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் வெப்பம் காரணமாக உடலில் நீரிழப்பு விரைவாக ஏற்படும் என்பதால், சோர்வு தலைச்சுற்றல் மற்றும் Heat Stroke போன்றவை ஏற்படலாம். எனவே உங்களுக்கு தாகம் எடுக்கவில்லை என்றாலும் நாள் முழுவதும் அவ்வப்போது நிறைய தண்ணீர் குடிக்கவும். மேலும் உங்களது உணவில் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் சிட்ரஸ் பழங்களை சேர்த்துக்கொள்ளத் தவறாதீர்கள்.
சருமத்தை பாதுகாக்கவும்: அதிக நேரம் சூரிய ஒளியில் இருப்பதால், சருமம் தன் பொலிவை விரைவாக இழக்கிறது. இதனால் விரைவிலேயே முதுமையான தோற்றம் மற்றும் தோல் புற்றுநோய்க்கான ஆபத்து அதிகரிக்கும். எனவே வெளியே செல்வதற்கு முன் சன் ஸ்கிரீன் கட்டாயம் பயன்படுத்துங்கள். மிகவும் லேசான வெளிர் நிற உடைகளை அணியுங்கள். சூரிய ஒளி அதிகமாக இருக்கும் நேரங்களில், தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.
உடற்பயிற்சி முறையை மாற்றுங்கள்: கோடைகாலத்தில் உடற்பயிற்சியில் சில மாற்றங்களைக் கொண்டு வாருங்கள். வெப்பம் அதிகம் இல்லாத நேரமாக பார்த்து உடற்பயிற்சி செய்யுங்கள். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் உடற்பயிற்சி செய்வது நல்லது. உடற்பயிற்சி செய்யும்போது நிழலாக இருக்கும் இடத்தைத் தேர்வு செய்யவும். மேலும் நல்ல காற்றோட்ட வசதி உள்ள இடத்தைத் தேர்வு செய்து உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி செய்யும்போது இடையில் தேவையான அளவு இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள்.
வீட்டுக்குள் பாதுகாப்பாக இருங்கள்: வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது முடிந்து வரை வெளியே செல்லாமல் வீட்டில் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க மின்விசிறி, ஏர் கண்டிஷனர் போன்றவற்றைப் பயன்படுத்தவும். உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க குளிர்ந்த நீரில் குளிக்கவும். உங்கள் வீட்டில் போதுமான அளவு குளிர்ச்சி இல்லை என்றால், நூலகங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களுக்குச் சென்று வாருங்கள்.
உணவுப் பாதுகாப்பில் கவனமாக இருங்கள்: அதிக வெப்பநிலையால் உணவுகள் விரைவில் கெட்டுப் போகும் வாய்ப்புள்ளது. இதனால் உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. எனவே கோடைகாலங்களில் வெளியே செல்லும்போது உணவு எடுத்துச் சென்றால், அது பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துவிட்டு சாப்பிடுங்கள். விரைவில் கெட்டுப் போகும் உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் கோடைகாலத்தில் நாம் நம்மை ஆரோக்கியமாக பாதுகாத்துக்கொள்ள முடியும்.