மழைக்காலம் தொடங்கப் போகிறது. மழை காலம் என்றாலே அனைவருக்கும் சளி மற்றும் தொண்டையில் புண் ஏற்படுவது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும். குறிப்பாக, தொண்டைப்புண் ஏற்பட்டுவிட்டால் உணவை விழுங்குவதற்கே சிரமமாக இருக்கும். ஏன், சிலரால் எச்சிலைக் கூட விழுங்க முடியாது. குரல் வளையைச் சுற்றி வீக்கம், எரிச்சல், போன்றவற்றால் தொண்டையின் மென்மையான திசுக்கள் பாதிக்கப்படுகிறது. இத்தகைய தொண்டைப் புண்களை சில வகை உணவுகளை உட்கொள்வதன் மூலமாக குணப்படுத்த முடியும்.
தேன்: நீண்ட காலமாகவே தொண்டைப் புண்களுக்கு தேன் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உள்ளதால், நோய்த் தொற்றுக்களை குணப்படுத்த உதவுகிறது. இதனால் தொண்டையில் உள்ள காயங்கள் விரைவில் ஆறும். தேனை உட்கொள்வதன் மூலமாக இரத்த அழுத்தம், இதய ஆரோக்கியம் போன்ற மேலும் பல நன்மைகளும் கிடைக்கின்றன.
மாதுளை பழம்: மாதுளம் பழத்தில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் குறிப்பாக, அழற்சியைக் குறைக்கும் பண்புகள் இருப்பதால், தொண்டைப் புண்களை விரைவில் சரிசெய்துவிடும். மாதுளையில் பொட்டாசியம், நார்ச் சத்துக்கள், வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளதால் தொண்டையின் திசுக்களை சுற்றி இருக்கும் வீக்கத்தைக் குறைக்கிறது.
வெஜிடபிள் சூப்: வெஜிடபிள் சூப்பில் உடலுக்குத் தேவையான கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்ற பல நன்மை பயக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது தொண்டையில் பாதிக்கப்பட்ட திசுக்களை சரி செய்ய உதவுகிறது. சளி, மூக்கடைப்பு போன்றவற்றை போக்குவதற்கும் வெஜிடபிள் சூப் உதவுகிறது. இதைப் பருகும்போது தொண்டையின் புண்களை ஆற்றி, விரைவில் குணமடைய உதவும்.
உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கு மசியல் நாம் எளிதாக விழுங்கக்கூடிய உணவாகும். தொண்டையில் புண் ஏற்பட்டு வலி இருந்தால் இதை உணவாக எடுத்துக் கொள்ளலாம். இது விரைவாக தொண்டை வலியை ஆற்ற உதவும். உருளைக்கிழங்கில் சக்தி வாய்ந்த தாதுக்களும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகளும், மெக்னீசியம், மாங்கனிஸ், நார்ச்சத்து போன்ற அனைத்து விட்டமின்களும் உள்ளன. இதனால் தொண்டைப் புண் விரைவில் குணமாகிவிடும்.