Chandipura virus 
ஆரோக்கியம்

சண்டிபுரா வைரஸின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்!

தி.ரா.ரவி

ற்போது குஜராத் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சண்டிபுரா வைரஸின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

சண்டிபுரா வைரஸ் என்பது என்ன?

சண்டிபுரா வைரஸ் (CHPV) தொற்று மணல் ஈக்கள் மற்றும் கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் ஆகும். இதில் ஏடிஸ் கொசுக்களும் அடங்குகிறது. இந்தப் பூச்சிகளின் உமிழ் நீர் சுரப்பிகளில் வைரஸ் தங்கி இருக்கும். இவை மனிதர்களுக்கும் வீட்டு விலங்குகளுக்கும் இந்த வைரஸை பரப்புகிறது. இது பருவ மழையின் ஆரம்பத்தில் அதிகமாக இருக்கும்.

சண்டிபுரா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்புகள்: சண்டிபுரா வைரஸ் முதன்மையாக குழந்தைகளை பாதிக்கிறது. பெரும்பாலும் கிராமங்களில் உள்ள 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கிறது. இது மூளைக்காய்ச்சலுடன் தொடர்புடையது. இது கடுமையான நரம்பியல் அறிகுறிகளை ஏற்படுத்தி அதிக இறப்பு விகிதங்களுக்கு வழிவகுக்கும்.

மிகக் கடுமையான மூளை அழற்சியை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் நிரந்தர நரம்பியல் பாதிப்பிற்கும் வழி வகுக்கும். அறிவாற்றல் குறைபாடுகள், நடத்தை மாற்றங்கள் மற்றும் உடல் இயக்கத்தில் குறைபாடுகளை ஏற்படுத்தும்.

இந்தத் தொற்று நோயின் அறிகுறிகள்: திடீரென காய்ச்சல் அதிகரிப்பது ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும். கடுமையான தலைவலியுடன் காய்ச்சல் ஏற்படும். அசௌகர்யம், சோர்வு மற்றும் பலவீனம் ஆகியவை தோன்றும். தொடர்ந்து குமட்டல் உணர்வுடன் சேர்ந்த வாந்தி வருவது இதனுடைய அறிகுறிகளில் ஒன்றாகும். மேலும் வலிப்பு ஏற்படலாம். இது மூளை அழற்சியின் முக்கிய அறிகுறி ஆகும்.

சிலருக்கு வயிற்றுப்போக்கு உண்டாகும். பலவீனமான நரம்பியல் செயல்பாடுகளும் ஏற்படும். பேசுவதில் சிரமம், பார்வை மாற்றங்கள் ஏற்படும். குழப்பம், எரிச்சல் அல்லது சோம்பலான மனநிலை ஏற்படும். கடுமையான சந்தர்ப்பங்களில் நோயாளி கோமா நிலைக்குச் செல்லவும் வாய்ப்பு உள்ளது.

சிகிச்சை: தற்போது சண்டிபுரா வைரஸ் பாதித்தவர்களுக்கு குறிப்பிட்ட வைரஸ் தடுப்பு சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை. ஆரம்ப கால நோயை கண்டறிந்தால் சுவாச பாதைகளை நிர்வகித்து இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்கலாம்.

தடுப்பு முறைகள்:

1. மணல் ஈக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை நீக்க வேண்டும். மனிதர்கள் தாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். குப்பை, கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும். சுகாதாரம், சுற்றுச்சூழல் கட்டுப்பாடு போன்றவை வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

2. மணல் ஈக்கள் குழந்தைகளை அதிகமாகக் கடிக்கும். இதைத் தவிர்க்கவும், குறைக்கவும் குழந்தைகளின் மேற்புற சருமத்தில் பூச்சி விரட்டி ஆயின்மெண்ட்டை தடவி விடலாம். வாழ்விடங்களை சுற்றி பூச்சிக்கொல்லிகளை தொடர்ந்து தெளிப்பது இவற்றின் எண்ணிக்கையை குறைக்க உதவும்.

3. குழந்தைகளை தூக்கத்தில் இந்த வகை கொசுக்களும் ஈக்களும் கடிப்பதைத் தடுக்க படுக்கையை சுற்றி கொசுவலை அமைக்க வேண்டும். வீட்டைச் சுற்றி தேங்கி நிற்கும் நீரை முறையாக வெளியேற்றம் செய்ய வேண்டும்.

4. ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் கொசு வலை அமைப்பது மிகவும் முக்கியம். குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஆடைகள் அணிவிக்க வேண்டும். கைகள், கால்கள் வெளியே தெரியாதவாறு நீண்ட சட்டை பேண்டுகளை அணிவிக்க வேண்டும்.

5. பெரும்பாலும் சண்டிபுரா வைரஸ் பரப்பும் கொசுக்கள் அந்தி நேரம் மற்றும் விடியற்காலையில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும். இந்த நேரங்களில் குழந்தைகளை வீட்டிற்கு வெளியே அனுப்புவதைத் தடுக்க வேண்டும்.

6. குழந்தைகளை எப்போதும் சுத்தமாக பராமரிப்பது முக்கியம். இருமுறை குளிக்க வைக்கவும். உடல் வியர்க்கும்போது கொசுக்களையும், ஈக்களையும் ஈர்க்கும். எனவே உடல் முழுக்க பவுடர் போட்டு வாசனையாக வைத்தல் அவசியம். காய்ச்சல் தோன்றினால் தாமதிக்காமல் உடனே சிகிச்சை எடுப்பது முக்கியம்.

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT