தேநீரில் பல வகை உண்டு என்பதையும் அவற்றில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதையும் பற்றி நம்மில் பலரும் அறிந்திருப்போம். அவற்றில் ஒன்றான டாமரிண்ட் டீ, அதாவது புளி பேஸ்ட் சேர்த்து தயாரிக்கப்படும் டீயில் உள்ள நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
இந்த டீயில் வைட்டமின் A, B C போன்ற பல வகை வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள், இரும்புச் சத்து, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற கனிமச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இயற்கையாகவே இதில் உள்ள மலமிளக்கும் குணமும், நார்ச்சத்துக்களும் உணவு சிறப்பாக ஜீரணமாகவும், மலம் சிக்கலின்றி வெளியேறவும் உதவி புரிகின்றன.
இதிலுள்ள ஃபிளவனாய்ட் மற்றும் பாலிஃபினால் போன்ற கூட்டுப் பொருள்கள் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டு, உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், கீல் வாதம், ஆர்த்ரைட்டிஸ் போன்ற நோய்களைக் குணப்படுத்தவும் செய்கின்றன. மற்ற ஆன்டி ஆக்சிடன்ட்களும், நார்ச்சத்தும் அதிகப்படியான கொழுப்பைக் குறைத்து இதய நோய் வராமல் பாதுகாக்கின்றன; இரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதால் இதய நோய், பக்கவாதம், இரத்த நாளங்களில் பிளாக்குகள் உண்டாவது ஆகியவையும் தடுக்கப்படுகின்றன.
இந்த டீ குறைவான கலோரி அளவு கொண்டது; இதை குறைந்த அளவில் அருந்தும்போது, இரத்த சர்க்கரை அளவு குறைகிறது. இதிலுள்ள நார்ச்சத்து பசியுணர்வைக் கட்டுப்படுத்தி, உடல் எடை அதிகரிக்காமல் பராமரிக்க உதவுகிறது. புளியில் இயற்கையிலேயே ஆன்டி மைக்ரோபியல், ஆன்டி ஃபங்கஸ், ஆன்டி பாக்டீரியல் குணங்கள் நிறைந்துள்ளன. இவை தொற்று நோய்களைத் தடுக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.
இனி இந்த டீயை தயாரிக்கும் முறை குறித்து அறிவோம். இரண்டு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் வெல்லம், ஒரு டீஸ்பூன் இஞ்சி ஜூஸ், இரண்டு டீஸ்பூன் புளி பேஸ்ட் சேர்த்து, நன்கு கலந்து வடிகட்டினால் டாமரிண்ட் டீ தயார்.