அதிகமாக வறுக்கப்பட்ட உணவுகள் அதன் சுவை காரணமாக பலரது பிடித்தமான ஒன்றாக மாறிவிட்டன. ஆனால் அத்தகைய உணவுகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவை சாப்பிட சுவையாக இருந்தாலும் தொடர்ச்சியாக அதிகமாக வருக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவது உங்கள் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கலாம்.
அதிகமாக வறுக்கப்பட்ட உணவுகள் பொதுவாக ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்த எண்ணெய்களில் சமைக்கப்படுகின்றன. அதாவது ட்ரான்ஸ்பேட் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் போன்றவை இதில் அதிகமாக இருக்கும். இந்த வகையான கொழுப்புகள் இதய நோய், அதிக கொழுப்பு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுடன் தொடர்புடையவை. இத்தகைய உணவுகளை தொடர்ச்சியாக உண்பதால் உங்கள் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கலாம்.
உணவுகளை அதிக வெப்பத்தில் வறுக்கும்போது அக்ரிலாமைட் எனப்படும் தீங்கு விளைவிக்கும் கலவைகள் உருவாகலாம். இந்த கலவையை புற்றுநோய் ஏற்படுத்தும் ஒன்றாக சர்வதேச புற்றுநோய் ஏஜென்சி வகைப்படுத்தியுள்ளது. அக்ரிலாமைட் அதிகம் உள்ள உணவுகள் கருப்பை, மார்பகம் மற்றும் கணைய புற்றுநோய் உள்ளிட்ட சில வகை புற்று நோய்களை உருவாக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உணவுகளை அதிக நேரம் வறுக்கும்போது அதில் இருக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பல அழிக்கப்படுகின்றன. வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்ற வெப்பத்தால் பாதிக்கப்படும் வைட்டமின்களின் அளவு கணிசமாகக் குறைக்கப்படும். இது ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு வழி வகுத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம்.
உணவுகளை அதிகமாக வறுக்கும்போது அவை எண்ணெயை உறிஞ்சுவதால், அவற்றில் அதிகப்படியான கலோரிகள் இருக்கலாம். இத்தகைய உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் அதிகப்படியான கலோரி உட்கொள்ளல் நீரிழிவு மற்றும் வளர்ச்சிதை மாற்ற நோய்களை உருவாக்கும் அபாயம் உள்ளது.
வறுத்த உணவுகளில் அதிக கொழுப்பு இருப்பதால் அது செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த உணவுகள் பெரும்பாலும் ஜீரணிக்க கடினமாக இருக்கும். இதனால் வயிற்று உப்புசம், வீக்கம், அசௌகரியம் மற்றும் அஜீரணப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
எனவே எண்ணெயில் அதிகம் வறுக்கப்பட்ட உணவுகளை மிதமாகவே உட்கொள்ளுங்கள். இத்துடன் சமச்சீர் உணவுகளை சாப்பிடுவது, உடலுக்கு நன்மை பயக்கும். மோசமான உணவுகளுக்கு பதிலாக, எல்லா விதமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளுக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது.