வீட்டின் சுப நிகழ்ச்சிகள் அனைத்திலும் தவறாது இடம்பெறும் ஒரு மங்கலப் பொருள் தாம்பூலம். அக்கால திருமண நிகழ்ச்சிகளில் விருந்துக்குப் பிறகு அவசியம் பெரியோர்கள் அனைவரும் தாம்பூலம் தரிப்பது வழக்கத்தில் இருந்தது. தாம்பூலம் போடுவது, விருந்துக்குப் பிறகு ஜீரண சக்திக்கு பெரும் உதவி புரிகிறது.
தற்போது வயதானவர்களுக்கு இருக்கக்கூடிய உடல் குறித்த அபாயங்களில் மிகவும் முக்கியமானது எலும்பு முறிவுதான். அந்தக் காலத்தில் தவறாமல் தாம்பூலம் போட்ட காரணத்தால்தான் நம் தாத்தா, பாட்டிகள் ஆகியோர் எலும்பு முறிவு பாதிப்பு இல்லாமல் இருந்தார்கள். ஆம், வெற்றிலையை சுண்ணாம்பு சேர்த்து போடுவதால் குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்குக் கிடைக்கும்போது எலும்புகள் வலு பெறுகின்றன. இதனால் எலும்பு முறிவிலிருந்து தப்பிக்கலாம்.
இது மட்டுமின்றி, தாம்பூலம் தரிப்பது பலவித நன்மைகளை நமக்குத் தருகிறது. உடம்பில் உள்ள வாதம், பித்தம், சிலேத்துமம் போன்றவை சரியான விகிதத்தில் இல்லாமல், கூடும்போதோ குறையும்போதோ நோய்கள் ஏற்படுவதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. இதை சமன் செய்யும் விதமாக செயல்படுகிறது வெற்றிலை பாக்கு.
பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை தடுத்து நிறுத்த உதவுகிறது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இதுமட்டுமல்லாது, தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவை வாயில் உள்ள நோய்க்கிருமிகளை மட்டுப்படுத்தி. செரிமான சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
வெற்றிலைப் பாக்கு போடுவதற்கான நியதிகள் நமது முன்னோர்களால் ஆராய்ந்து வகுக்கப்பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்குப் பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணம் மதிய நேரம் வெப்பம் அதிகமாகும்போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது உணவில் உள்ள வாதத்தை, அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது என்பதே அந்த முறைகள். இதை கடைப்பிடித்தால் நல்ல உடல் ஆரோக்கியம் பெறலாம்.
சிலர் பாக்கு மட்டும் வாயில் போட்டு மெல்லுவதைப் பார்க்கலாம். இது முற்றிலும் தவறு. அதேபோல் வெற்றிலை, பாக்கு போடும்போதும் முதலில் பாக்கை மட்டும் வாயிலிட்டு மென்று உமிழ்நீரை விழுங்கும்போது இதன் துவர்ப்பினால் கழுத்துக் குழல் சுருங்கி நெஞ்சு அடைக்கும். மயக்கம் ஏற்படவும் வாய்ப்புண்டு. அதனால் முதலில் வெற்றிலையை மென்று பின்பு பாக்கை வாயிலிட்டு மெல்லுதலே நல்லது.
இன்று இந்த வெற்றிலை பாக்கு கலாசரம் மறைந்து இனிப்பு வெற்றிலை பீடா என்கிற புது தாம்பூலக் கலாசாரம் வந்துவிட்டது. இருப்பினும் நமது முன்னோர்கள் சொன்ன வழியில் எலும்புகளை வலுவாக்கும் வெற்றிலைப் பாக்கு எடுத்துக்கொண்டு எலும்பு முறிவு பிரச்னையிலிருந்து விடுபடலாம்.