Hand wash 
ஆரோக்கியம்

முறையாகக் கைகளைக் கழுவுவதன் அவசியமும், முறைகளும்!

தி.ரா.ரவி

கொரோனா காலகட்டத்தில் ஒரு நாளைக்கு பலமுறை சானிடைசர் போட்டு கைகளை சுத்தம் செய்து கொண்டது பலருக்கும் நினைவில் இருக்கலாம். அக்டோபர் 15ம் தேதி அன்று உலகளாவிய கை கழுவும் தினம் அனுசரிக்கப்படுகிறது. சுத்தமான கைகள் சூப்பர் ஹீரோக்கள் எனப்படுகின்றன. தொல்லை தரும் கிருமிகளை சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

கை கழுவுவதன் அவசியம்: கை கழுவுதல் என்பது சுகாதாரத்தை பேணுவதற்கும் கிருமிகள் மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பதற்கும் ஒரு முக்கியமான நடைமுறை ஆகும். பொதுவாக, பல நோய்கள் கைகள் மூலம்தான் மனிதர்களுக்கு பரவுகிறது. சரியாக கைகளை கழுவி பராமரிக்காததால்தான் நோய்களுக்கு ஆளாகிறோம். சோப்பு போட்டு கைகளை கழுவி சுத்தப்படுத்தும்போது வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியாவால் நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் குறைவு. காய்ச்சல், கோவிட் 19 போன்ற மோசமான நோய்களை தடுப்பதிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், நிறைய மக்களுக்கு கைகளை தூய்மையாக வைப்பது பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை.

கைகளை முறையாகக் கழுவுவது எப்படி?

கைகளைக் கழுவுவதற்கு சோப்பு அல்லது லிக்விட் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை உபயோகப்படுத்தலாம். இவை கிருமிகளை அகற்றுவதில் பயன் உள்ளதாக இருக்கும். சுத்தமான நீரில் கைகளை கழுவ வேண்டும். முதலில் கைகளை ஈரப்படுத்திக்கொள்ள வேண்டும். குழாயைத் திருகிவிட்டு சுத்தமான நீரின் கீழ் கைகளை நன்கு ஈரப்படுத்த வேண்டும். அதில் சோப்பு அல்லது லிக்விட் தடவ வேண்டும். கைகளின் அனைத்து மேற்பரப்புகளையும் சோப்புக்கொண்டு தடவவும். பின்னர் கைகளை ஒன்றன் மேல் ஒன்று வைத்து நுரை வரும் அளவுக்கு தேய்க்கவும்.

கைகளின் பின்புறம், விரல்களுக்கு இடையில், நகங்களுக்கு கீழ், மணிக்கட்டை சுற்றி நன்றாக தேய்க்கவும். குறைந்தது 20 வினாடிகளுக்கு கைகளை தேய்க்கவும். ஹாப்பி பர்த்டே பாடலை இரண்டு முறை பாடுவதற்கு ஆகும் நேரம் வரைக்கும் கைகளை தேய்க்க வேண்டும். பின் குழாயை திறந்து விட்டு கைகளை நன்றாக சோப்பு நுரை போகும் வரை கழுவ வேண்டும். கைகளை காற்றில் நன்றாக உலர வைக்கவும். அல்லது ஒரு சுத்தமான துண்டு அல்லது டிஷ்யூ பேப்பர் பயன்படுத்தி ஈரத்தை துடைக்கலாம். பின்னர் டிஷ்யூ பேப்பர்களை குப்பைத் தொட்டியில் முறையாகத் தூக்கி எறிய வேண்டும்.

எப்போதெல்லாம் கை கழுவ வேண்டும்?

உணவு தயாரிப்பதற்கு முன்பும், பின்பும். சாப்பிடுவதற்கு முன்பு. நோய்வாய்ப்பட்ட ஒருவரை பராமரிப்பதற்கு முன்னும் பின்னும். புண் மற்றும் காயத்திற்கு மருந்து போடுவதற்கு அல்லது சிகிச்சை அளிப்பதற்கு முன்னும், பின்னும். கழிப்பறையை பயன்படுத்திய பிறகு. முகத்தில் மூக்கு, காது போன்ற பகுதிகளைத் தொட்ட பிறகு, குறிப்பாக இருமல் அல்லது தும்மலுக்குப் பிறகு. விலங்குகளை தொட்ட பின்பு அல்லது விலங்குக் கழிவுகளை கையாண்ட பின்பு. குப்பைகளைத் தொட்ட பிறகு கைகளை நிச்சயமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். அதற்கு முன்பாக முகத்தை தொடுவதையோ முகத்தில் உள்ள உறுப்புகளை தொடுவதையோ தவிர்க்க வேண்டும். குறிப்பாக கண்கள் மூக்கு மற்றும் வாய் போன்றவற்றை. சோப்பு மற்றும் தண்ணீர் கிடைக்காத சந்தர்ப்பங்களில் ஆல்கஹால் அடிப்படையிலான ஹேண்ட் சானிடைசர்களை பயன்படுத்த வேண்டும். முறையாகக் கை கழுவுவதன் மூலம் நோயின் அபாயத்தை கணிசமாக குறைக்கலாம். அதேபோல பிறருக்கு நோயை பரப்புவதும் குறையும்.

இந்த 5 கேள்விகளை படுக்கை நேரத்தில் உங்கள் குழந்தைகளிடம் கட்டாயம் கேளுங்கள்! 

புது அம்சங்களை அள்ளிக் கொடுத்த YouTube… நீங்க எதிர்பார்க்கும் அத்தனையும் இருக்கு! 

எழும்புக்கூடுகள் நிரம்பிய ரூப் குந்த் ஏரி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சிறுகதை – பிறவிக்குணம்!

உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா? 

SCROLL FOR NEXT