உடலில் அதிகமாக யூரிக் அமிலம் இருந்தால், கீல்வாதம் எனப்படும் வலிமிகுந்த நிலையை அது உருவாக்கும். உங்களுக்கு அதிக யூரிக் அமிலம் இருப்பது கண்டறியப்பட்டால் அல்லது அதிகரிக்காமல் இருக்க விரும்பினால், இயற்கையாகவே யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் இருக்கும் சில வழிகளை இப்பதிவில் பார்க்கலாம்.
நீரேற்றம்: உடலில் இருக்கும் யூரிக் அமிலத்தின் அளவு குறைவதற்கு நாள் முழுவதும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். இது உங்களது யூரிக் அமிலத்தை நீர்த்துப்போகச் செய்து உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. உடலில் உள்ள யூரிக் அமிலத்தை வெளியேற்றவும் ஒட்டுமொத்த சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்கவும், தினசரி குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
குறைந்த பியூரின் உணவுகளை சாப்பிடுங்கள்: பியூரின் நிறைந்த உணவுகள் யூரிக் அமில அளவை அதிகரிக்கும். எனவே உறுப்பு இறைச்சிகள், சிவப்பு இறைச்சி, மத்தி மற்றும் நெத்திலி போன்ற சில மீன்கள் போன்றவற்றில் பியூரின் நிறைந்திருப்பதால், அவற்றை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துங்கள். அதற்கு பதிலாக காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்புடைய பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
வைட்டமின் சி உணவுகளை சாப்பிடவும்: வைட்டமின் சி உடலில் உள்ள யூரிக் அமில அளவை குறைக்கும் தன்மையுடையது. சிட்ரஸ் பழங்கள், பெர்ரி, மிளகுத்தூள் மற்றும் கீரைகள் போன்ற விட்டமின் சி நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அல்லது சுகாதார நிபுணரை அணுகி விட்டமின் சி சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்வதையும் பரிசீலிக்கலாம்.
எடையைப் பராமரிக்கவும்: அதிக உடல் எடை யூரிக் அமில அளவு அதிகரிக்க வழிவகுக்கும். ஆரோக்கியமான எடையைப் பராமரிப்பது மூலம் உங்கள் மூட்டுகளில் உள்ள அழுத்தத்தை குறைத்து கீல்வாத பாதிப்பின் அபாயத்தைக் குறைக்கலாம். வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சீரான உணவுகளை கடைப்பிடிப்பதால் ஆரோக்கியமான எடையைப் பராமரிக்கலாம்.
மது வேண்டாம்: ஆல்கஹால், குறிப்பாக பீர், உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிப்பதாக அறியப்படுகிறது. உங்களது உடலில் அதிக யூரிக் அமிலம் அல்லது கீல்வாத பிரச்சனை இருந்தால் மதுவைக் கட்டுப்படுத்துவது அல்லது முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. ஒருவேளை நீங்கள் குடிக்கிறீர்கள் என்றாலும் மிதமாக எடுத்துக்கொண்டு, அதிகப்படியான தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
சர்க்கரை பானங்களைத் தவிர்க்கவும்: அதிக செயற்கை இனிப்புகள் கலக்கப்பட்ட பானங்கள் மற்றும் உணவுகள் யூரிக் அமில அளவை அதிகரிப்பதுடன் தொடர்புடையவையாகும். அவற்றிற்கு பதிலாக அதிக தண்ணீர், மூலிகை தேநீர் அல்லது இனிப்பு இல்லாத பானங்களை தேர்ந்தெடுத்து பருகவும்.
நீங்கள் யூரிக் அமிலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்றால், உடனடியாக தகுந்த மருத்துவரை அணுகி கலந்தாலோசிப்பது நல்லது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மேற்கூறிய விஷயங்களை பின்பற்றுவதால், உங்களது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தி மகிழ்ச்சியாக வாழலாம்.