Top 10 easily digestible foods for seniors https://www.lekhafoods.com
ஆரோக்கியம்

வயதானவர்களுக்கு எளிதில் ஜீரணமாக சிறந்த 10 உணவுகள்!

எஸ்.விஜயலட்சுமி

யதாகும்போது உடலில் பல பிரச்னைகளும் நோய்களும் எட்டிப் பார்க்கும். மலச்சிக்கல், அசிடிட்டி, அஜீரணம், குடல் அழற்சி நோய் போன்றவை வயதானவர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்னைகளாகும். அவர்கள் உண்ணும் உணவு எளிதில் செரிமானம் ஆனால்தான் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். செரிமானம் உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜீரணிக்க எளிதான 10 சிறந்த உணவுகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

1. சர்க்கரைவள்ளிக் கிழங்கு: இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே, ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஏனெனில், இது ப்ரீபயாடிக்குகளாக செயல்படுகிறது. இது குடல் பாக்டீரியாவை பெருக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள பொட்டாசியம் செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும் இயற்கை எலக்ட்ரோலைட் ஆகும்.

2. வெள்ளை அரிசி: பழுப்பு அரிசி நார்ச்சத்து நிறைந்தது. வயிற்றுப்போக்கு, வீக்கம் மற்றும் வாயு போன்ற செரிமான பிரச்னைகளை தீர்க்கும். ஆனால் வயதானவர்களுக்கு பழுப்பு கருப்பு அல்லது சிவப்பு அரிசியை விட ஜீரணிக்க எளிதான சிறந்த தேர்வாக வெள்ளை அரிசி இருக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன.

3. பப்பாளி: பப்பாளியில் பப்பைன் மற்றும் சைமோபாபைன் உள்ளது. இந்த நொதிகள் புரதங்களை ஜீரணிக்கின்றன மற்றும் செரிமானத்திற்கு உதவுகின்றன. பப்பாளி பல செரிமான பிரச்னைகளை எதிர்த்து போராடும் பழம். உடல்நல நிபுணர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் இந்தப் பழத்தை சிறிய வயிற்று உபாதைகளை கட்டுப்படுத்த பரிந்துரைக்கின்றனர். மேலும், பப்பாளியில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது செரிமானத்திற்கு உதவுவது மட்டுமின்றி, மலச்சிக்கலையும் தடுக்கிறது. கூடுதலாக, இது பல பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதை காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்தப் பழம் கொலஸ்ட்ராலை குறைக்கிறது, இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது மற்றும் இருதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

4. தயிர்: இது நன்மை பயக்கும் பாக்டீரியாக்களைக் கொண்ட புரோபயாடிக்குகளின் சிறந்த மூலமாகும். லாக்டிக் அமில பாக்டீரியா மற்றும் பிஃபிடோ பாக்டீரியாவுடன் பால் புளிக்க வைப்பதன் மூலம் தயிர் தயாரிக்கப்படுகிறது. செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களால் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு பண்புகளையும் மனித வளர்ச்சிதை மாற்ற செயல்முறைகளை மாற்றி அமைக்கும் குணத்தையும் கொண்டுள்ளது.

5. தர்பூசணி: பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தர்பூசணியில் ஏராளமாக உள்ளது. ஊட்டச்சத்து அதிகம் உள்ளது. மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகள் தேவைப்படுபவர்களுக்கு இது நன்மை பயக்கும். தர்பூசணியில் நிறைய தண்ணீர் மற்றும் சிறிதளவு நார்ச்சத்து உள்ளது. இது எளிதில் ஜீரணிக்கக்கூடியது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கும். குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது, அதே நேரத்தில் செரிமான பாதை வழியாக கழிவுகளை மிகவும் திறமையாக நகர்த்த உதவுகிறது.

6. கெஃபிர்: கெஃபிர் என்பது ஆடு அல்லது பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு புளித்த பானமாகும். இது குடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாவைக் கொண்டுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமான நிலையை மேம்படுத்தவும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் புண்கள் போன்ற செரிமான பிரச்னைகளையும் எதிர்த்துப் போராடுகிறது. இதில் உள்ள புரோபயாடிக்குகள் பல வகையான வயிற்றுப்போக்குக்கு சிகிச்சையளிக்க உதவும். இதில் புரதம், வைட்டமின் டி, மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12 போன்ற பல அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன, அவை எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், மலச்சிக்கல், எடை இழப்பைத் தடுக்கவும் உதவுகின்றன. ஒவ்வொரு நாளும் தகுந்த அளவில் கெஃபிர் உட்கொள்வது தசைப்பிடிப்புகளைத் தடுக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனநிலை மற்றும் சருமப் பராமரிப்பை அதிகரிக்கவும் உதவும்.

7. கோழி: சிக்கனில் லீன் புரோட்டீன் உள்ளது, இது திசுக்களை சரிசெய்ய உதவுகிறது. கூடுதலாக, கோழிக்கறியில் மினரல்கள் மற்றும் பி வைட்டமின்களும் அதிகம். கோழியில் நார்ச்சத்து இல்லாததால் பொதுவாக ஜீரணிக்க எளிதானது. செரிமான பிரச்னைகள் உள்ளவர்களுக்கு தோல் இல்லாத வேகவைத்த கோழி ஒரு நல்ல தேர்வாக அமைகிறது.

8. கொம்புச்சா: கொம்புச்சா என்பது கிரீன் டீயில் இருந்து புளிக்கவைக்கப்பட்ட தேநீர். இது உலகளவில் ஆரோக்கியமான பானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த தேநீரில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பயோ ஆக்டிவ் கலவைகள் உள்ளன. கொம்புச்சாவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளன. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் உணவை எளிதாக செரிமானத்திற்கு உதவுகிறது. அடிக்கடி இதை உட்கொள்வது, வீக்கம், அஜீரணம் மற்றும் வாய்வு போன்ற செரிமான பிரச்னைகளை கட்டுப்படுத்த உதவும். கொம்புச்சா மலச்சிக்கலைத் தடுப்பது, குடல் ஆரோக்கியத்தை ஆதரிப்பது, பாக்டீரியா எதிர்ப்பு, இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பது, இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவது மற்றும் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பது போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது.

9. வேகவைத்த முட்டைகள்: முட்டை மேக்ரோ மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களின் வளமான ஆதாரமாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. முட்டையின் ஆல்புமன் மற்றும் மஞ்சள் கரு இரண்டும் எளிதில் ஜீரணமாகும். முட்டைகள் ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாகும். செரிமான அமைப்பு உட்பட உடலை நல்ல நிலையில் பராமரிக்க உதவுகிறது.

10. வாழைப்பழங்கள்: வாழைப்பழங்கள் அஜீரணத்தை தடுக்கிறது. இரைப்பைப் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. குடல் செயல்பாட்டை மீட்டெடுக்க உதவுகிறது. இதில் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் உடலுக்கு நன்மை பயக்கும்.

ஜீரணிக்கக் கடினமாக இருக்கும் உணவுகள் என்ன?

சர்க்கரை சேர்த்த இனிப்பு பானங்கள், சீஸ் மற்றும் கிரீம் போன்ற நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகள், காபி போன்ற காஃபின் கொண்ட பானங்கள், காரமான உணவுகள் மற்றும் பிட்சா போன்ற க்ரீஸ் உணவுகள், வறுத்த உணவுகள், காரமான உணவுகள், அதிக நார்ச்சத்து, சில பால் பொருட்கள், சிட்ரஸ் பழங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட அல்லது சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், கார்ப்-அடர்த்தியான உணவு, அதிக அளவு செயற்கை சேர்க்கைகள் உள்ள உணவுகள் ஜீரணிக்கக் கடினமாக இருக்கும். இவற்றை வயதானவர்கள் அவசியம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் செரிமானத்தை தடுத்து பல உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT