Mumps 
ஆரோக்கியம்

Mumps: பொன்னுக்கு வீங்கி என்றால் என்ன தெரியுமா? கோடை காலத்தில் குழந்தைகள் ஜாக்கிரதை! 

கிரி கணபதி

Mumps எனப்படும் பொன்னுக்கு வீங்கி ஒரு தொற்று வைரஸ் நோயாகும். இது முதன்மையாக உமிழ்நீர் சுரப்பிகளை பாதித்து, வீக்கம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த நோய்த்தொற்று வருடம் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றாலும், கோடைகாலங்களில் இந்த வைரஸின் தாக்கம் அதிகம் உள்ளது. இந்தப் பதிவில் Mumps ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய விவரங்களைப் பார்ப்போம். 

பொன்னுக்கு வீங்கி (Mumps) என்றால் என்ன?  

மாம்ஸ் வைரசால் ஏற்படும் இந்த தொற்று நோயானது, சுவாசம் மற்றும் உமிழ்நீர் வழியாகப் பரவுகிறது. இதன் பொதுவான அறிகுறிகளில் உமிழ்நீர் சுரப்பிகளில் வீக்கம் மற்றும் வலி, காய்ச்சல், தலைவலி, தசை வலி மற்றும் சோர்வு ஆகியவை அடங்கும். இந்த நோயானது பொதுவாக காதுகளுக்கு கீழே மற்றும் தாடையில் ஓரத்தில் அமைந்துள்ள பரோடிட் சுரப்பிகளின் வீக்கத்துடன் தொடர்புடையது. 

ஏன் கோடை மாதங்களில் அதிகம் வருகிறது? 

கோடைகாலத்தில் மாம்ஸ் நோய் அதிகரிக்க பல காரணங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக கோடை காலம் என்பது விடுமுறை நாள் என்பதால், மக்கள் பொது இடங்களில் அதிகமாகக் கூடுகின்றனர். இது தனி நபர்களுக்கு இடையே நெருக்கத்தை அதிகரித்து, வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. 

கோடை விடுமுறையில் பள்ளிகள் மூடப்படுவதால், குழந்தைகள் அதிக நேரம் வெளியே சென்று விளையாடுகிறார்கள். இதில் பிறருடன் தொடர்பு கொள்வது அதிகரிப்பதால், குழந்தைகளுக்கு Mumps எளிதாகத் தொற்றிக்கொள்கிறது. 

கோடை காலத்தில் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அதிக மக்கள் பயணிக்கிறார்கள். இதன் மூலமாக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களிடமிருந்து வைரஸ் எளிதாகப் பரவுகிறது.

Mumps வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? 

  • இதைத் தடுப்பதற்கான மிகவும் பயனுள்ள வழி தடுப்பூசிதான். MMS தடுப்பூசி இந்த நோய்த்தொற்றுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. எனவே குழந்தைகளுக்கு மறவாமல் இந்தத் தடுப்பூசியைப் போட்டுவிடுங்கள். மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று நீங்களும் போட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் இது யாருக்கு வேண்டுமானாலும் பரவலாம். 

  • சோப்பு பயன்படுத்தி அடிக்கடி கைகளைக் கழுவி சுத்தமாக இருங்கள். குறிப்பாக உணவுக்கு முன் மற்றும் இருமல், தும்மல் அல்லது கழிப்பறையை பயன்படுத்திய பிறகு கை கழுவுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் உடமைகள் அல்லது தனிப்பட்ட பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம். 

  • இருமல் அல்லது தும்மலின்போது உங்கள் வாய் மற்றும் மூக்கை மூடிக் கொள்ளுங்கள். குறிப்பாக வெளியே செல்லும்போது மாஸ்க் பயன்படுத்துவது உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும். 

  • முடிந்தவரை வெயில் காலங்களில் வீட்டிலேயே இருங்கள். வீங்கிய உமிழ்நீர் சுரப்பிகள் மற்றும் காய்ச்சல் போன்றவற்றின் அறிகுறி இருந்தால், நீங்களே உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டில் இருங்கள். இது மற்றவர்களுக்கு வைரஸ் பரவாமல் தடுக்க உதவும். 

பொன்னுக்கு வீங்கி நீங்கள் பயப்படும் அளவுக்கு மிகவும் மோசமான வைரஸ் கிடையாது. அதிகபட்சம் 10 நாட்களுக்குள் சரியாகிவிடும். ஒருவேளை நீண்ட நாட்கள் இருப்பது போல தோன்றினால், உடனடியாக மருத்துவரை அணுகி, தகுந்த சிகிச்சை பெறுவது நல்லது. 

கழிவறைக்கெல்லாம் ஒரு சிறப்பு நாளா? இது மிக மிக அவசியம்!

நேற்று இருவரை மிதித்து கொன்ற யானை இன்று காலை முதல் கண்ணீர் விட்டு அழுகை… நடந்தது இதுதான்!

ஏன் உங்களை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இந்தியாவில் உள்ள கழிப்பறை அருங்காட்சியகம்!

ஒழுங்கை ஒழுங்காக கடைபிடிக்க வேண்டும்!

SCROLL FOR NEXT