பசி என்பது இயற்கையாக உடலில் நடக்கும் ஒரு எதிர்வினையாகும். இது நமது உடலுக்கு ஊட்டச்சத்து தேவைப்படுகிறது என்பதைக் குறிக்கும் செயல்முறையாகும். இருப்பினும் சிலருக்கு போதிய அளவு உணவு உட்கொண்ட பிறகும் தொடர்ந்து பசி எடுக்கும் உணர்வு ஏற்படும். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
பசி எடுப்பது ஆரோக்கியமான விஷயமாக இருந்தாலும், நன்றாக சாப்பிட்டும் பசி எடுத்தால், இது உடலில் உள்ள பிரச்சனையை வெளிப்படுத்தும் அறிகுறியாகும். சரி வாருங்கள் அதற்கான காரணங்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமை: நன்றாக சாப்பிட்டும் மீண்டும் பசி எடுப்பதற்கு முதன்மைக் காரணங்களில் ஒன்று, நமது உணவில் போதுமான அளவு மைக்ரோ நியூட்ரியன்ட்கள் இல்லை என்பதாகும். புரதங்கள், ஆரோக்கிய கொழுப்பு மற்றும் நார்ச்சத்து இல்லாத உணவுகள், உடலில் சர்க்கரை அளவு விரைவாக அதிகரிக்க வழிவகுக்கும். மீண்டும் சர்க்கரை அளவு குறையும்போது அது பசியின்மை சிக்னலைத் தூண்டிவிடுகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணுதல்: பிராசஸ் செய்யப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை உணவுகள் போன்ற அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கலோரிகள் அதிகமாக இருக்கும், ஆனால் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் குறைவாகவே இருக்கும். இத்தகைய உணவுகள் விரைவாக ஜீரணிக்கப்படுவதால், விரைவாகவே பசியைத் தூண்டி, மீண்டும் சாப்பிடத் தோன்றும்.
நார்ச்சத்து இல்லாமை: பசியை கட்டுப்படுத்துவதிலும், மனநிறவை மேம்படுத்துவதிலும் நார்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. நார்ச்சத்து இல்லாத உணவுகள் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்தாது. இதன் காரணமாகவே சாப்பிட்ட பிறகும் மீண்டும் பசி உணர்வு வருகிறது. எனவே பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வதால், இத்தகைய திடீர் பசி உணர்வைக் கட்டுப்படுத்த முடியும்.
நீரிழப்பு: சில நேரங்களில் நம் உடல் தாக உணர்வு மற்றும் பசி உணர்வுடன் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றாலும் பசியின்மை உணர்வு ஏற்படும். எனவே நீரிழப்பு தொடர்பான பசி சிக்னலை தவிர்ப்பதற்கு நாள் முழுவதும் நீரேற்றத்துடன் இருக்க வேண்டியது அவசியம். உணவுக்கு முன்னும் பின்னும் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உங்களது திடீர் பசி உணர்வைத் தடுக்க உதவும்.
தூக்கமின்மை: போதிய தூக்கமின்மை பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களான கிரேலின் மற்றும் லெப்டின் ஆகியவற்றின் சமநிலையை சீர்குலைக்கிறது. கிரேலின் பசியை தூண்டும் ஹார்மோன். லெப்டின் முழுமை உணர்வைக் கொடுக்கும் ஹார்மோன். தூக்கமின்மையால் கிரேலின் அளவு அதிகரித்து, லெப்டின் அளவு குறையலாம். இது போதுமான உணவு சாப்பிட்ட பிறகும் பசியைத் தூண்ட காரணமாகிறது. எனவே பசியை பராமரிக்க தரமான தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.
இந்த காரணங்களைப் புரிந்துகொண்டு உங்கள் உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்வது மூலமாக, தேவையில்லாத பசி உணர்வை நீங்கள் தவிர்க்க முடியும். இது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.