ஆரோக்கியம்

அதிகாலையில் எழுவது சுமையல்ல…

ஜெ.ராகவன்

திகாலை எழுவதில் பல நன்மைகள் உள்ளன. காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது, உடற்பயிற்சி செய்வது என திட்டமிட்டு அன்றைய நாட்களின் வேலைகளைச் செய்ய முடியும். மற்றவர்கள் தூங்கும் நேரத்தில் நாம் சீக்கிரம் எழுவதால் நாம் நினைத்த வேலைகளை எந்தவித இடையூறும் இல்லாமல் செய்து முடிக்கலாம்.

உடல் சோர்வாக இருப்பதுபோல் நாம் நினைப்பதால் அதிகாலையில் எழுவது நமக்குச் சற்று கடினமாக இருக்கலாம். ஆனால், ஒருவார காலத்துக்கு நாம் அதிகாலையில் எழுந்து பழகிவிட்டால் அது ஒன்றும் சிரமமான காரியமாக இருக்காது.

நீங்கள் அதிகாலையில் எழ வேண்டுமெனில் சில நடைமுறைகளைப் பின்பற்றினால் அது எளிதாக இருக்கும். வேலை இல்லாத நாட்களிலும் அலாரம் வைக்க மறக்காதீர்கள். வார இறுதி அல்லது ஓய்வு நாட்களிலும் மற்ற நாட்களைப் போலவே சரியான நேரத்தில் படுக்கைக்குச் செல்ல முயற்சி செய்யுங்கள். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் சென்றால் உங்கள் உடல் அதற்கு ஒத்துழைக்கத் தொடங்கிவிடும். மேலும், தூக்கமும் சீக்கிரம் வரும். இதனால் நீண்ட நேரம் தூக்கம் வராமல் அவதிப்பட வேண்டிய நிலை ஏற்படாது.

இரவு சீக்கிரம் படுக்கைக்குச் செல்லுங்கள். உங்களுக்குத் தூக்கம் வராவிட்டால் நல்ல புத்தகங்களை எடுத்து வாசியுங்கள். தூக்கம் தானாக வந்துவிடும். ஆனால், தூக்கம் வரவில்லையே என்று டி.வி.பார்க்க முயற்சிக்காதீர்கள். நல்ல எண்ணங்களுடன் தூங்கச் சென்றால் மறுநாள் காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்து அந்த நாளைத் தொடங்கலாம்.

காலை எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்து, குளித்துவிட்டு உடற்பயிற்சி, தியானத்தில் ஈடுபடுவது மனதுக்கு உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் அளிக்கும். இதன் மூலம் அன்றைய நாளை நாம் சுறுசுறுப்புடன் எதிர்கொள்ளலாம்.

தினமும் அலாரம் வைத்துக்கொண்டு உறங்கச் செல்லுங்கள். நீங்கள் எழுந்திருக்க வேண்டிய நேரத்தில் இருந்து 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே அலாரம் வைக்கவும். படுக்கையில் இருந்து எழுந்து சில நிமிடங்கள் தியானம் அல்லது சுவாசப் பயிற்சியில் ஈடுபடுங்கள். தியானம் செய்ய முடியவில்லை எனில், உங்களுக்குப் பிடித்தமான இசையைக் கேளுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் சீக்கிரம் எழுந்திருக்க உடல் தானே பழகிவிடும். அதேபோல, இரவு திட்டமிட்ட நேரத்துக்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே படுக்கைக்குச் சென்று விடுங்கள். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, நேர்மறை சிந்தனையுடன் உறங்கச் சென்றால் மன அழுத்தம் ஏற்படாமல் நிம்மதியாக உறங்கி எழ முடியும்.

அதிகாலை எழுவதை ஒரு சுமையாக நினைக்காதீர்கள். உங்கள் வேலைகளை சரிவர முடிப்பதற்குக் கிடைத்த சரியான வாய்ப்பாகக் கருதுங்கள்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT