Want to eat less? Then this is for you https://www.eaglenewz.in
ஆரோக்கியம்

குறைவாக சாப்பிட ஆசையா? அப்போ இது உங்களுக்குத்தான்!

இந்திராணி தங்கவேல்

டிஸ்போசபில் பாத்திரங்களின் உற்பத்தி பெருகியதாலும், இலைகளின் பற்றாக்குறையாலும் நம்மில் இலையை அதிகம் பயன்படுத்துவதைக் குறைத்து விட்டனர். வாழை இலையில் உணவருந்துவதால் சுத்தம்  கடைபிடிக்க முடிகிறது.  ஒருவர் உண்டபின் அதில் மற்றொருவருக்கு பரிமாறும் நிலையும் வரவில்லை. வாழை இலையில் இருக்கும் பச்சையம் நச்சுக்கிருமிகளை அழித்து நமக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. இதில் உள்ள க்ளோரோஃபில் நமது உணவை நன்கு செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும், வயிறு மற்றும் குடல் பகுதிகளில் இருக்கிற புண்களையும் ஆற்றுகிறது.

சூடான உணவினை வாழை இலையில் பரிமாறப்பட்டு சாப்பிடும்போது அதில் உள்ள பாலிஃபெனால் நாம் சாப்பிடும் உணவில் கலந்து இலையில் உள்ள வைட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் போன்ற சத்துக்கள் உணவுடன் சேர்ந்து கிடைக்க உதவுகிறது. புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. வாழை இலையில் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. மேலும், இது உடலில் ஏற்படும் வாதம், பித்தம், கபம் ஆகியவற்றின் சமநிலையை காக்கிறது. இப்படி வாழை இலையின் பயன்களை கூறிக்கொண்டே போகலாம்.

இதனால் மதிய உணவை வாழை இலையில் தினந்தோறும் உண்ணும் வழக்கத்தை கடைப்பிடிப்பவர்கள் இன்றும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் வாழை இலையில் விருந்து படைப்பதற்கென்று பிரத்தியேகமான உணவு முறைகள் தயாரிக்கப்படுவது விசேஷ நாட்களில் இன்றும் நம் வீடுகளில் நடைமுறையில் உள்ளது. பச்சடி, பாயாசம், அப்பளம்,  ஸ்வீட், காரம் என்று ஒரு நீண்ட வரிசை பட்டியலே அதற்கு உண்டு.

அதிலும் உணவு தயாரிக்கும் முறையும் அதை பரிமாறும் விதமும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியாக உள்ளது. கேரளாவில் குறைந்தபட்சம் 5, 6 வகையான அவியல், கூட்டு, பொரியல் வகைகளை படைப்பார்கள். அவியலை அதிகமாக செய்து விட்டு, ஒரு பெரிய பீட்ரூட்டை பொடி பொடியாக அரிந்து சமைப்பார்கள். அதை பத்து பேருக்கு பரிமாறி விடுவார்கள். இதேபோல் ஒவ்வொரு காய்கறியையும் நறுக்கும் விதமும், அதை சமைக்கும் பாங்கும், பரிமாறும் அளவும்  அந்த இலையில் அசத்தலாக இருக்கும். அளவுக்கு அதிகமாக அள்ளி அள்ளி வைத்து இலையை மூடும்படி செய்து விட மாட்டார்கள். இதனால் எல்லோரும் திருப்தியாக சாப்பிட முடியும். இலையில் உணவு பொருள் மீதம் வைக்காததால் சாப்பிடும் இடமும் சுத்தமாக இருக்கும். வழிந்து காலில் மிதிபடாமல் இருக்கும். வயிறும் நிறைந்து இருக்கும். இது அவர்களின் பண்பு.

நாம் எக்கச்சக்கமாக உணவுகளை படைத்து, பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ இலை நிறைய வண்டி வண்டியாக அள்ளி சாய்த்து விடுவோம். இதை பல பேர் சாப்பிடாமல் அப்படியே இழுத்து மூடி விட்டு சென்று விடுவார்கள். இதனால் உணவுப் பொருள் விரயம் ஆவது ஒரு பக்கம். எல்லோருக்கும் உணவு கிடைக்காமலும் போய்விடும். இடமும் வழிந்து சுத்தமில்லாமல் இருக்கும். குப்பை கூடை நிறைந்து வழிய பலரின் வயிறுகளோ பசியால் தவிக்கும்.

ஹைதராபாத்தில் ஒருமுறை விருந்துக்கு சாப்பிடப் போனபொழுது அவர்கள் இலையைப் போட்டிருந்த விதமே வித்தியாசமாக இருந்தது. நாம் ஹரிசாண்டலாக இலையைப் போடுவோம். அவர்களோ வெர்ட்டிகளாக போட்டிருந்தார்கள். இதனால் தொலைவில் வைக்கப்பட்டிருக்கும் உணவு வகைகளை ஒவ்வொரு முறையும் எக்கெக்கி எடுத்துச் சாப்பிடுவோம்.

எவ்வளவு ருசியாக சமைத்து இருந்தாலும், இதனால் எல்லோரும் மூக்கை பிடிக்க சாப்பிட மாட்டோம். அரை அல்லது முக்கால் திட்டம் உணவு, வயிற்றில் மீதி இடத்தில் தண்ணீர் மற்றும் கால் வயிறு காலி என்று இருக்கும். சாப்பிட்டு முடித்ததும் நிம்மதியாக இருக்கும். எந்த உணவுப் பொருளும் வீணாகாது. அளவுக்கு மீறி சாப்பிட்டு உடம்புக்கு நோயை வரவழைத்துக் கொள்ளும் தன்மை இதில் முற்றிலுமாக இல்லாது இருப்பது திருப்தி. இப்படி இலை போட்டு சாப்பிடும் பழக்கத்தை நாமும் கடைப்பிடித்தால் சாப்பாடு அளவில் குறைந்து, உடம்பை அழகாக வைத்துக் கொள்ளலாம். எடையை சரியாக பராமரிக்கலாம் என்று தோன்றியது. விருப்பப்பட்டவர்கள் இதையும் செய்து பார்க்கலாமே!

ஆஸ்திரேலியாவை நிலைகுலையச் செய்த இரண்டு கேப்டன்கள் யார் தெரியுமா?

இந்த 7 அறிகுறிகள் இருந்தால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க பாஸ்! 

வெற்றி என்ற இலக்கை அடைய உதவும் 8 சக்சஸ் பாயிண்ட்டுகள்!

Ind Vs SA: விதிமுறையை மீறிய தென்னாப்பிரிக்கா வீரருக்கு அபராதம் விதித்த ஐசிசி!

இத தெரிஞ்சுக்காம சீம்பால் யாரும் சாப்பிடாதீங்க! 

SCROLL FOR NEXT