Monsoon Fungal Infectious Diseases https://www.onlymyhealth.com
ஆரோக்கியம்

மழைக்காலத்தில் பூஞ்சைத் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகள்!

தி.ரா.ரவி

ழைக்காலம் வியாதிகளை இருகரம் நீட்டி வரவேற்கும் காலமாகும். குறிப்பாக, எளிதில் பூஞ்சைத் தொற்றுக்கு ஆளாகும்படி நேரலாம். இந்தப் பதிவில் பூஞ்சைத் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகள் பற்றி பார்ப்போம்.

உடல்  சுத்தம்: உடலை சுகாதாரத்துடன் பராமரிப்பது அவசியம். சருமத்தில் இருந்து வியர்வை, அழுக்கு மற்றும்  பூஞ்சைகளை அகற்ற மென்மையான சோப்பைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு ஒரு முறையாவது குளிக்கவும். இரு முறை குளிப்பது நல்லது. குறிப்பாக, வெளியில் சென்று விட்டு, வீடு திரும்பியதும் குளித்து விட்டால், உடலில் ஒட்டியுள்ள பாக்டீரியாக்கள் அகன்று விடும். மழையில் நனைந்து விட்டால் ஈரத்துணிகளை உடனே மாற்றுவதும் அவசியம். அதேபோல ஈரமான காலணிகளை நன்கு உலர வைக்கவும்.

உலர்த்துதல்: குளித்த பிறகு, முதுகுப்புறம், கால் விரல்கள், காது மடலின் பின்புறம், அக்குள் மற்றும் இடுப்புக்கு இடையில் ஈரப்பதம் உள்ள பகுதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, முழுமையாக மென்மையான டவலால் ஒற்றியெடுக்கவும். பரபரவென துண்டால் உடலை சிலர் தேய்த்து எடுப்பார்கள். அவ்வாறு செய்யக் கூடாது. அது சருமத்தை பாதிக்கும்.

பருத்தி ஆடைகள்: காற்றோட்டமான மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சும் பருத்தி போன்ற இயற்கை இழைகளால் செய்யப்பட்ட தளர்வான ஆடைகளைத் தேர்வு செய்து அணியவும். டால்கம் அல்லது ஃபங்கல் இன்ஃபெக் ஷன் பவுடரை வியர்வை அதிகம் உள்ள பகுதிகளில் தடவவும். அவை  பூஞ்சை வளர்ச்சியின் அபாயத்தைக் குறைக்கும்.

சாக்ஸ், காலணிகள்: மழைக்காலத்தில் வெளியில் செல்லும் போது முறையான காலணிகளை அணிய வேண்டும். அவை நீர்ப்புகா வண்ணம் இருப்பது அவசியம். மூடிய காலணிகளைத் தவிர்க்கவும். சிறந்த காற்றோட்டத்தை வழங்கும் செருப்புகள் அல்லது திறந்த காலணிகளைத் தேர்ந்தெடுக்கவும். சாக்ஸ் அணியும் முன் கால் விரல்களுக்கு இடையே டஸ்டிங் அல்லது டால்கம் பவுடரை போட்ட பின்னர்தான் ஷூக்கள் அணிய வேண்டும். மழையில் நனைந்து விட்டால், ஷூக்களை நன்கு உலர வைப்பதும், சாக்ஸ்களை துவைத்து உலர்த்துவதும் முக்கியம். உபயோகப்படுத்தாதபோது, ஷூக்களுக்குள் ஒரு பழைய செய்தித்தாளை செருகி வைத்தால் அது ஈரம் படாமல் இருக்கும். உள்ளே ஈரம் இருந்தாலும் உறிஞ்சிக்கொள்ளும்.

வெயிலின் மகிமை: துணிகளை வெயில் வரும்போது நன்றாக உலர்த்தி எடுப்பது முக்கியம். துணிகளில் ஏதேனும் கிருமிகள் ஒட்டிக் கொண்டிருந்தாலும், சுள்ளென்ற சூரிய ஒளியில் அவை அழிந்து விடும். பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தடுக்க வீட்டின் தரையையும் குளியலறையையும் சுத்தமாக வைக்கவும். சமையலறைகள் போன்ற ஈரப்பதம் அதிகம் உள்ள பகுதிகளை தவறாமல் சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யவும்.

சுத்தமான சுற்றுச்சூழல்: சுத்தமான சுற்றுச்சூழலைப் பராமரிக்கவும். வசிக்கும் பகுதியை வறண்ட நிலையில் வைத்திருக்கவும். வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் இருக்க வேண்டும். இல்லையெனில் அது கொசுக்களுக்கு அழைப்பு விடுத்தது போல ஆகிவிடும். அவை நோய்களைப் பரப்பும். இதனால் மலேரியா, டெங்கு என அவதிப்பட நேரிடும். ஈரப்பதத்தின் அளவைக் குறைக்க வீட்டில் நல்ல காற்றோட்டத்தை உறுதிப்படுத்தவும்.

பூஞ்சை எதிர்ப்பு: பூஞ்சை தொற்று பரவுவதைத் தடுக்க, துண்டுகள், காலணிகள் அல்லது ஆடைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையை பராமரிக்கவும், இது தொற்று நோய்களை எதிர்த்துப் போராட உதவும்.

சிகிச்சை: உடலில் ஏதேனும் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டால் சொறியக் கூடாது. நகங்களை சுத்தமாக வெட்டி  வைத்திருக்கவும். இல்லையெனில் உடலில் கீறும்போது காயங்களை ஏற்படுத்தும். சொறிவது நோய்த்தொற்றை மோசமாக்கும் மற்றும் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவும். ஒரு சரும நோய் நிபுணரை அணுகி சிகிச்சை எடுக்கவும்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT