சமீப காலமாக நிறைய இளம் வயது இளைஞர்கள் உடற்பயிற்சியின்போது ஹார்ட் அட்டாக் வந்து இறந்துபோவதை செய்திகளின்வழி கேட்டிருப்போம். இப்படி இளம் வயதில் ஹார்ட் அட்டாக் வருவற்கான முக்கிய காரணங்கள் என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
முதலில் ஹார்ட் அட்டாக் என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாம். இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பின் காரணமாக இருதயத்திற்குச் செல்லும் இரத்தம் பாதிக்கப்படுகிறது. இதயத்தில் இருந்து மற்ற பாகங்களுக்கு இரத்தத்துடன் செல்லும் ஆக்ஸிஜன் தடைபடுவதாலேயே ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது.
எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு என்று சொல்வார்கள். இது உடற்பயிற்சிக்கும் பொருந்தும். காலையில் ஆரம்பித்து இரவு வரை தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, தூக்கமின்மை, ஸ்ட்ரெஸ், குடிப்பழக்கம், சிகரெட் போன்றவையும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஜிம்மிற்கு செல்லும் இளைஞர்கள் தசை வளர்ச்சிக்காக Protein supplements எடுத்துக்கொள்வது உடல் நலத்திற்கு நல்லதல்ல.
இதயப் பிரச்னை இருந்தும் சரியான பரிசோதனை இல்லாமல் அது தெரியாமலே அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது. கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடும்போது கண்டிப்பாக வல்லுனர்களின் ஆலோசனையை பெற்ற பிறகு செய்ய வேண்டியது அவசியமாகும். கடுமையான உடற்யிற்சி செய்யும்போது உடலுக்கு அழுத்தம் ஏற்பட்டு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் உள்ளன.
உடற்பயிற்சி செய்யும்போது, நம் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருக்க வேண்டியது அவசியமாகும். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லையென்றால், இரத்தம் அடர்த்தியாக மாறி ஹார்ட் அட்டாக் வருவதற்கு காரணமாக அமைந்துவிடும்.
பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக இதயநோய் வருவதாகச் சொல்லப்படுகிறது. பெண்களுக்கு Oestrogen என்னும் ஹார்மோன் சுரப்பது இருதய பிரச்னை பெரிதும் அவர்களை பாதிக்காது பாதுகாக்கிறது.
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இதய சம்பந்தமான பிரச்னை இருந்தால், நாமும் பரிசோதித்துக் கொள்வது நல்லது. 35 அல்லது 40 வயதுள்ள இளைஞர்கள் வருடத்திற்கு இரண்டு முறை இதயப் பரிசோதனை செய்துகொள்வது சிறந்ததாகும். எட்டு மணி நேரம் நல்ல தூக்கமும், வாரத்திற்கு நான்கு முறை உடற்பயிற்சி செய்தால் போதுமானதாகும்.