தூக்க பக்கவாதம் (Sleep Paralysis) தூக்கத்தில் ஏற்படும் மிகவும் அரிதான, பலர் அனுபவிக்கும் ஒரு விசித்திரமான உணர்வாகும். தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் உடல் அசையாமல் இருக்கும் நிலை, கனவுகள் உண்மை போல தோன்றுதல், பறக்கும் உணர்வு, அறையில் இருள் சூழ்ந்திருப்பது போன்ற பயங்கரமான உணர்வுகளால் இது வகைப்படுத்தப்படுகிறது. இந்த அனுபவம் அனுபவிப்பவரை மிகவும் பயமுறுத்தும் விதமாக இருக்கும். சிலருக்கு மர்மமான உருவம் தன்னை அமுக்குவது போல தெரியும். இதை தான் பலர் பேய் அமுக்கிவிட்டது எனக் கூறுவார்கள்.
Sleep Paralysis ஏற்படுவதற்கான காரணங்கள்:
REM (Rapid Eye Movement) தூக்கம் என்பது கனவு காணும் ஒரு நிலை. தூக்க பக்கவாதம் பொதுவாக இந்த REM தூக்கத்தின் தொடக்கம் அல்லது முடிவில் ஏற்படுகிறது. இந்த தூக்க நிலையின்போது மூளை செயல்படுவதால் உடல் அசையாமல் இருக்கும். இந்த நிலை, தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் சரியாக முடிவடையாமல் போனால் தூக்க பக்கவாதம் ஏற்படலாம்.
தூக்கமின்மை போன்ற தூக்கக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, இரவில் ஒழுங்காக தூங்க வேண்டும். மேலும், மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு போன்ற மனநிலை மாற்றங்கள் இருந்தாலும் தூக்கப் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
சிலருக்கு மரபணு ரீதியாகவும் தூக்கப் பக்கவாதம் ஏற்படலாம். ஆஸ்துமா, இதய நோய், நரம்பியல் கோளாறுகள் போன்ற சில மருத்துவ நிலைகள் தூக்கப் பார்க்கவாதத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன.
தூக்க பக்கவாதத்தின்போது மூளை செயல்படுவதால் தூக்கத்தில் இருக்கும் காட்சிகள், ஒலிகள், உண்மையானவை என்று நினைத்து நாம் பயப்படுகிறோம். சிலர் தங்கள் மீது ஏதோ அழுத்தம் கொடுப்பது போல உணர்வார்கள். அல்லது சிலர் அறையில் இருள் சூழ்ந்திருப்பது போன்ற பய உணர்வை அனுபவிப்பார்கள்.
தூக்க பக்கவாதத்தின் அறிகுறிகள்:
உடல் அசையாமல் இருக்கும்.
தூக்கத்தில் இருக்கும் காட்சிகள் மற்றும் ஒலிகள் நம்மை பயமுறுத்தும்.
மூச்சு விடுவதில் சிரமம்.
இதயத் துடிப்பு அதிகரிக்கும்.
பயம் மற்றும் பதட்டம் உண்டாகும்.
உடல் வெப்பநிலை அதிகரிக்கும்.
தடுக்கும் முறைகள்: தூக்கப் பக்கவாதம் ஏற்படுவது ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. அது தானாகவே சரியாகிவிடும். இருப்பினும், இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு நாளும் குறைந்தது 7-8 மணி நேரம் தூங்க வேண்டும். தினமும், ஒரே நேரத்தில் படுத்து, ஒரே நேரத்தில் எழுவது நல்லது. மன அழுத்தத்தை குறைக்க யோகா, தியானம் போன்ற நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். போதைப் பொருட்கள் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
மேலும், உங்களுக்கு ஏதேனும் மருத்துவ நிலைகள் இருந்தால், அவற்றுக்கான சிகிச்சையை முறையாக எடுத்துக் கொள்ளவும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினாலே தூக்க பக்கவாதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.