நமது நாக்கு உணவை சுவைப்பது, பேசுவது என பல விஷயங்களுக்கு பயன்படுகிறது. ஆனால், சிலருக்கு இந்த நாக்கில் சிவப்பு திட்டுக்கள், வெள்ளைப் புள்ளிகள் தோன்றும். இதை Geographic Tongue என்பார்கள். இந்தப் பதிவில் இந்த அறிய நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
Geographic Tongue என்றால் என்ன?
இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நாக்கின் மேற்பரப்பில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறப் புள்ளிகள், கோடுகள் அல்லது வளையங்கள் தோன்றும். இது நாக்கின் மேற்பரப்பில் புவியியல் வரைபடம் போல இருப்பதால் இந்தப் பெயர் பெற்றது. இந்த பாதிப்பினால் நாக்கின் மேற்பரப்பில் பல மாற்றங்கள் ஏற்படும். தொடக்கத்தில் இது ஒரு பகுதியில் மட்டும் தோன்றி, சில நாட்கள் கழித்து நாக்கு முழுவதும் பரவும். இது பொதுவாக வலி இல்லாதது என்றாலும், சிலருக்கு லேசான எரிச்சல், அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.
காரணங்கள்: இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான துல்லியமான காரணம் முழுமையாகக் கண்டறியப்படவில்லை. இருப்பினும் பாக்டீரியா அல்லது புஞ்சை தொற்றுகள் நாக்கின் மேற்பரப்பில் மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமாக அமையலாம். சில உணவுகள், மருந்துகள் அல்லது பல் பொருட்கள் ஆகியவற்றால் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் இந்த பாதிப்பு ஏற்படும்.
வாய் வறட்சி நாக்கின் மேற்பரப்பை பாதித்து, சிவந்து போதல், நாக்கு தடித்து போதல் போன்றவற்றை உண்டாக்கலாம். இரும்பு, போலிக் அமிலம் போன்ற விட்டமின் குறைபாட்டாலும் இந்த புவியியல் நாக்கு பிரச்சனை ஏற்படும்.
அறிகுறிகள்:
நாக்கின் மேற்பரப்பில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற புள்ளிகள் தோன்றும்.
நாக்கில் எரிச்சல் அல்லது அசைவுகரியம் ஏற்படும்.
உணவின் சுவையை உணர முடியாது.
நாக்கில் அதிகமாக வறட்சி இருக்கும்.
சிகிச்சை:
புவியியல் நாக்கு பிரச்சனை பெரும்பாலும் தானாகவே சரியாகிவிடும். எனவே, இதற்கு சிகிச்சை அவசியமில்லை. இருப்பினும் சில சூழ்நிலைகளில் சிகிச்சை செய்வது நல்லது. தினசரி குறைந்தது இரண்டு முறை வாயை சுத்தப்படுத்தவும்.
நாக்கில் உள்ள அழுக்குகளை நன்கு தேய்த்துக் கழுவவும். வாய் கொப்பளிப்பதற்கு உப்பு சேர்க்கப்பட்ட மருந்துகளை பயன்படுத்தவும். சில நேரங்களில் பாக்டீரியா அல்லது புஞ்சை தொற்று இருந்தால், மருத்துவர் ஆன்டிபயாட்டிக், புஞ்சை எதிர்ப்பு மருந்துகளைப் பரிந்துரைப்பார். உங்களுக்கு அலர்ஜி காரணமாக புவியியல் நாக்கு பிரச்சனை ஏற்பட்டால், எந்த உணவினால் அலர்ஜி ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து அதைத் தவிர்க்கவும்.
இந்த நோய் பாதிப்பு பெரும்பாலும் ஆபத்து இல்லாதது என்றாலும், சிலருக்கு மோசமான உணர்வை ஏற்படுத்தும். எனவே, இது வராமல் தடுக்க, வாய் சுகாதாரத்தை கடைப்பிடித்து, ஆரோக்கியமான உணவு உட்கொள்ளுதல் மற்றும் மன அழுத்த மேலாண்மை போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.