தயிர் உலக அளவில் பலரால் உட்கொள்ளப்படும் ஒரு பிரபலமான பால் பொருளாகும். இது அதன் ஊட்டச்சத்து நன்மைகள் மற்றும் ப்ரோபயாட்டிக் பண்புகளால் அதிகம் உண்ணப்படுகிறது. தயிர் ஒரு ஆரோக்கியமான உணவுதான் என்றாலும் அதை மிதமாகவே உட்கொள்ள வேண்டியது அவசியம். சிலரெல்லாம் தயிரை தினசரி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் அப்படி சாப்பிடுவது முற்றிலும் தவறானது. அது ஏன் என இப்பதிவில் பார்க்கலாம்.
லாக்டோஸ் ஒவ்வாமை: சிலருக்கு அதிக பால் பொருட்களை சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படலாம். ஏனெனில் அவர்களின் உடல் பால் பொருட்களில் உள்ள சர்க்கரையை ஜீரணிக்காது. இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிரை தொடர்ந்து சாப்பிடும்போது வயிறு உப்புசம், வாயு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமானக் கோளாறுகளை சந்திக்க நேரிடலாம். எனவே இத்தகையவர்கள் தினசரி தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அதிக கலோரி உள்ளடக்கம்: தயிரில் கொழுப்பு அதிகம் இருப்பதால், அதிக கலோரிகளைக் கொண்டிருக்கும். இது புரதம், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கினாலும், அதிகப்படியாக தயிர் சாப்பிடுவது ஒருவரது தேவைக்கு அதிகமான கலோரி உட்கொள்ளலுக்கு வழிவகுக்கும். இதனால் எடை அதிகரிக்கும் என்பதால், எடையை நிர்வகிக்க விரும்புபவர்கள் தினசரி தயிரை எடுத்துக்கொள்ள வேண்டாம். அதே நேரம் இதில் உள்ள கொழுப்பு உள்ளடக்கம் இருதயப் பிரச்சனைகளை தூண்டவும் வாய்ப்புள்ளது.
குடல் பாக்டீரியாக்கள் பாதிக்கப்படும்: தயிர் அதன் probiotic பண்புகளுக்காக அறியப்பட்டதாகும். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நன்மை பயக்கும் பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கிறது. இருப்பினும் தயிரை அதிகமாக உட்கொள்வதால் குடல் பாக்டீரியாக்களின் சமநிலை சீர்குலையும். ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகளைப் பராமரிக்க பல வகையான உணவுகள் அவசியம். தயிரை மட்டுமே அதிகமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தால், அது குடல் பாக்டீரியாக்களின் நிலையை மோசமாக்கலாம்.
அலர்ஜி பாதிப்புகள்: சில நபர்களுக்கு தயிர் சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் தோலில் வெடிப்பு, படை, செரிமான பிரச்சனை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம். சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தான எதிர்வினை கூட ஏற்படலாம் என்பதால், அலர்ஜி பாதிப்பு இருப்பவர்கள் தயிரை மிதமாகவே உட்கொள்ள வேண்டும். எனவே தினசரி தயிர் சாப்பிடுவதை முடிந்த அளவுக்கு குறைத்துக் கொள்ளுங்கள்.
தயிர் எப்போதுமே ஒரு சீரான உணவில் ஒரு பகுதியாக மட்டுமே இருக்க வேண்டும். எனவே ஒருவரது உணவுத் தேவை, சுகாதார நிலைமைகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு, தயிரை முறையாக எடுத்துக் கொள்வது நல்லது. ஒருபோதும் தயிரை தினசரி சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளாதீர்கள்.