நமது உடலில் உள்ள இரத்தத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் புரதத்தை வைத்தே இரத்த வகை தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு இரத்த வகையும் பாஸிட்டிவ் அல்லது நெகட்டிவாக இருக்கும். இதுவே Rh ஃபேக்டரை முடிவு செய்கிறது. நம் இரத்தத்தில் இருக்கும் Rh ஃபேக்டரால் நமக்கு எந்த உடல் உபாதைகளும் வராது என்றாலும், குழந்தை பிறப்பு, கர்ப்பகாலம் போன்ற சமயங்களில் நம்முடைய இரத்தம் குழந்தையின் இரத்தத்துடன் கலக்கும் நிலை ஏற்படும்போது பிரச்னைகள் ஆரம்பிக்கும். முக்கியமாக இது பெண்களுக்கே பிரச்னையாக அமையும்.
நம்முடைய உடலில் உள்ள இரத்த சிவப்பணுவின் வெளிப்புறத்தில் இருக்கும் புரதமே Rh ஃபேக்டராகும். இந்த Rh ஃபேக்டர் சிலரின் இரத்த சிவப்பணுவில் இருக்கும், இன்னும் சிலருக்கு இருக்காது. அப்படி இந்த Rh ஃபேக்டர் இரத்த சிவப்பணுவில் இருந்தால் அதை Rh பாஸிட்டிவ் என்றும் இல்லை என்றால் Rh நெகட்டிவ் என்றும் கூறுவார்கள்.
உலகில் 85 சதவீத மக்கள் Rh பாஸிட்டிவையே கொண்டிருக்கிறார்கள். சாதாரண நேரங்களில் இதை ஒரு பிரச்னையாகக் கருதுவதில்லை. ஆனால், கர்ப்ப காலத்தில் இதைப் பற்றி பெண்கள் தெரிந்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும். Rh நெகட்டிவாக இருக்கும் கர்ப்பமான பெண்ணின் குழந்தைக்கு Rh பாஸிட்டிவ்வாக இருப்பின் அது சிக்கலாகும். இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
கர்ப்ப காலத்தில் குழந்தை Rh பாஸிட்டிவாகவும், தாய் Rh நெகட்டிவாக இருந்தால், ஒவ்வாமை ஏற்படும். இதை Rh ஃபேக்டர் ஒவ்வாமை என்பார்கள். அதிர்ஷ்டவசமாக இப்பிரச்னைக்கு சிகிச்சை முறைகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Rh நெகட்டிவ் உள்ள பெண்ணின் குழந்தை Rh பாஸிட்டிவாக இருக்கும்போது தாயின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு குழந்தையின் இரத்த சிவப்பணுவை தாக்கத் தொடங்கும். மருத்துவர்கள் இதுபோன்ற பிரச்னை வராமல் இருக்க இமியூன் குலோபுலின் ஊசியை தாய்க்கு செலுத்துவார்கள்.
கர்ப்ப காலத்தில் தாயின் இரத்தம் குழந்தையின் இரத்தத்துடன் கலப்பதில்லை. எனினும் சில சமயங்களில் பிரசவத்தின்போது, சிசேரியன் போன்ற சமயங்களில் சிறிது இரத்தம் கலக்க நேரிடலாம். அமினோசென்டெஸிஸ் போன்ற பரிசோதனை செய்யும்பொழுது, பிறப்புறுப்பிலிருந்து இரத்தப்போக்கு, வயிறுப்பகுதியில் ஏற்படும் காயம், கருச்சிதைவு போன்ற சமயங்களில் நடக்க வாய்ப்புகள் உள்ளன.
இப்பிரச்னை முதல் பிரசவத்தில் இருக்கும் குழந்தைக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஏனெனில், குழந்தையின் இரத்தமும் தாயின் இரத்தமும் கலக்க வேண்டிய நிலை ஏற்படப் போவதில்லை. எனினும், இரண்டாவது பிரசவத்தின்போது குழந்தை Rh பாஸிட்டிவாக இருப்பின் பிரச்னை ஏற்படும். நோய் எதிர்ப்பு அமைப்பு குழந்தையின் இரத்த அணுக்களை தாக்கத் தொடங்கும். இதையே Rh நோய் என்பார்கள். இதனால் குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும்.
கர்ப்ப காலத்தில் Rh ஃபேக்டர் பரிசோதனை செய்து கொள்வது என்பது மிகவும் அவசியமாகும். இது சாதாரண இரத்த பரிசோதனையே ஆகும். இது இரத்தத்தில் Rh ஒவ்வாமை இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்யும்.
தாய் Rh பாசிட்டிவாக இருப்பின் எந்த பிரச்னையுமில்லை. இதுவே தாய் Rh நெகட்டிவாக இருந்து குழந்தை Rh பாஸிட்டிவாக இருப்பின் Rh இமியூன் குலோபுலின் ஊசியை கர்ப்ப காலத்தில் 28வது வாரமும் பிரசவத்திற்கு முன் 72 மணி நேரத்திற்கு முன்பும் போடப்படும்.
Rh இமியூன் குலோபுலின் ஊசி தாயின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதை தடுக்கும். இது எப்போது உதவியாக இருக்குமெனில், தாயின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதற்கு முன்பு செலுத்தும் போதேயாகும். Rh ஒவ்வாமையை போக்குவதில் இது வெற்றிகரமாக செயல்படுகிறது. ஒருவேளை தாயின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி விட்டால், இந்த ஊசி பெரிதும் பயன் அளிப்பதில்லை. தாயின் எதிர்ப்பு சக்தி குழந்தையின் இரத்த அணுக்களை விரைவாக அழிக்கக் கூடும். இதனால் குழந்தைக்கு ஜான்டிஸ், கல்லீரல் பிரச்னை, இருதய பிரச்னை வர வாய்ப்புகள் உள்ளது. மிகவும் அவசர காலகட்டத்திலேயே குழந்தைக்கு இரத்த மாற்றம் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், Rh இமியூன் குலோபுலின் ஊசி வந்த பிறகு Rh நோய் எப்போதாவதுதான் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.