தற்போதைய காலக்கட்டத்தில் உடலை பிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வது என்பது மிகவும் அவசியமாகும். உடலை பிட்டாக வைத்துக்கொள்ள யோகா, ஜிம் போன்ற நிறைய வழிகள் இருக்கின்றன. ஆனால், பலருக்கும் இதில் எதைப் பின்பற்றுவது சிறந்தது என்ற சந்தேகம் உண்டு. அதைப்பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஜிம்மில் செய்யப்படும் உடற்பயிற்சி உடல் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. உடற்பயிற்சி கூடத்தில் இருக்கும் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் தசைகள் நன்றாக வளர்ச்சியடைவதற்கு உதவுகிறது. பாடி பில்டர், விளையாட்டு வீரர்கள், பளு தூக்குபவர்கள் போன்றவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும், ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதனால், பாசிட்டிவ்வான மனநிலையை உருவாக்குகிறது.
பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் பலராலும் பயின்று வரப்படும் யோகாசனம் முனிவர்களால் உருவாக்கப்பட்டதாகும். தியானத்தின்போது இது பயன்படுத்தப்பட்டது. இதை செய்வதால் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. யோகாசனம் செய்வதற்கு அதிகமான ஒழுக்கமும், விடாமுயற்சியும் தேவைப்படும். யோகா செய்வதனால் உடல் மற்றும் மன அமைதி கிடைக்கிறது. மேலும், யோகாவை சரியாக செய்வதன் மூலம் ஆன்மிக ஞானமும் கிடைக்கிறது.
யோகா மற்றும் ஜிம் இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்பட்டாலும், இரண்டிலுமே சில வித்தியாசங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி பார்க்கலாம்.
யோகா செய்வதன் மூலமாக உடலில் உள்ள கலோரிகளை எரிக்கலாம். எனினும், அது மிகவும் மெதுவாகவே நடைபெறும். இது உடலில் உள்ள உறுப்புகளின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. ஜிம்மில் பயிற்சி செய்வதனால், திடமான பயிற்சியின் மூலமாக உடல் எடையை கணிசமாகவும், விரைவாகவும் குறைக்க முடியும்.
யோகா செய்வதனால் உடல் எடையை குறைக்க முடியும் என்றாலும், மாற்றத்தை விரைவாகக் காண இயலாது. ஆனால், ஜிம்மில் பயிற்சி செய்வதின் மூலம் விரைவாக பலனைப் பெற முடியும்.
யோகா தசை வளர்ச்சிக்கு பெரிதாக உதவுவதில்லை. எனினும், சில யோகா பயிற்சிகளை தொடர்ந்து கடுமையாக செய்வதன் மூலம் தசை வளர்ச்சியை பெறலாம். ஜிம்மில் பயன்படுத்தப்படும் கருவிகள் முக்கியமாக தசை வளர்ச்சி பெறுவதற்கு உதவுகின்றன.
யோகா செய்வதனால் இதய ஆரோக்கியம் பெறுகிறது. எனவே, இதய ஆரோக்கியத்திற்கு யோகா சிறந்த சாய்ஸ் ஆகும். ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதனால், அதிக கலோரிகளை குறைக்க முடியும். இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லதாகும். எனினும், கடுமையான உடற்பயிற்சி செய்வது இதய சம்பந்தமான பிரச்னை உள்ளவர்களுக்கு சிறந்ததல்ல.
யோகா மன ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும். இது பதற்றத்தை குறைத்து பாசிட்டிவிட்டியை அதிகரிக்கிறது. ஜிம்மில் பயிற்சி பெறுவது உடல் வலிமையை அதிகரித்தாலும், மனப்புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.
யோகா செய்வதற்காக எந்த கடுமையான உணவுப் பழக்கத்தையும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. ஜிம்மில் பயிற்சி செய்யும்போது உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடுகள் தேவை. இல்லையென்றால், விரும்பிய பலன் கிடைக்காமல் போகக்கூடும்.
யோகா செய்வதன் மூலம் உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் தசையிலுள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது உடலில் உள்ள தசைகளை மெறுகேற்ற உதவுகிறது.
யோகா மற்றும் ஜிம் இரண்டுமே உடலின் ஆரோக்கியத்தை வெவ்வேறு விதமாக மேம்படுத்தவே பயன்படுகின்றன. இதில் எது வேண்டும் என்று தேர்வு செய்வது ஒவ்வொருவருடைய தேவையைப் பொறுத்ததேயாகும். உடல் எடையை விரைவாகக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஜிம்மை தேர்வு செய்வது சிறந்தது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி மனதின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்று எண்ணுபவர்கள் யோகாவை தேர்வு செய்வது நல்லதாகும்.