

தனிமனித நிதியில் பட்ஜெட் போடுவதென்பது நிதிச் சுதந்திரத்தை அடைய உதவும் அருமையானதொரு விஷயம். அதே சமயத்தில், பட்ஜெட் போடும் போது, தவிர்க்க வேண்டிய தவறுகளைத் தெரிந்து கொண்டு, அவற்றைத் தவிர்ப்பதன் மூலம், நாம் பட்ஜெட்டினை இன்னும் சிறப்பாக செயல்படுத்த முடியும்.
தனிமனித நிதியில் பட்ஜெட் போடும்போது, தவிர்க்க வேண்டிய 12 தவறுகளைப் பற்றிப் பார்ப்போம்.
1. நிதிக்குறிக்கோள்களில் தெளிவில்லாமல் இருப்பது:
குறுகிய கால, நடுத்தர கால, நீண்ட கால குறிக்கோள்களைப் பட்டியலிட்டு அவற்றுக்கு மாதா மாதம் நிதி ஒதுக்க வேண்டும். அதன் மூலம், பெரிய செலவுகளை எளிதில் கையாள முடியும். அவ்வாறு செய்யவில்லையென்றால், அந்த குறிக்கோள்களுக்குப் பணம் தேவைப்படும் போது, கடன் வாங்க நேரலாம். உதாரணமாக, வருடாந்திர தீபாவளி செலவுகளுக்கு மாதாமாதம் பணம் ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்காத பட்சத்தில் தீபாவளி சமயத்தில் கடன் வாங்க நேரலாம்.
2. கடன்களை அடைப்பதற்கு போதிய முக்கியத்துவம் அளிக்காமலிருப்பது:
பட்ஜெட் போடுவதன் முக்கியக் குறிக்கோள் நிதி சுதந்திரத்தை அடைவது. கடன்களை சீக்கரம் அடைப்பதன் மூலமே, நம்மால் நிதி சுதந்திரத்தை அடைய முடியும். இல்லையென்றால், மாதா மாதம் கடன் தவணைகளுக்குப் பணம் கொடுப்பதன் மூலம், வட்டியாக பணம் வீணாகும். நிதிக் குறிக்கோள்களை அடைவது கடினமாகிவிடும். எனவே, கடன்களை வரிசைப்படுத்தி, சிறிய கடன் முதல் பெரிய கடன் வரை, பணம் ஒதுக்கி வரிசையாக கட்டி முடிக்க வேண்டும்.
3. வருமானமும் பட்ஜெட் காலவரையறையும் பொருந்தாமலிருப்பது:
ஒருவருக்கு மாதம் இருமுறை சம்பளம் என்றால், பட்ஜெட்டும் மாதம் இருமுறை என இருக்க வேண்டும். அதன் மூலம், பணத்தைச் செலவுகளுக்கு ஒதுக்குவது எளிதாகிறது. மாதா மாதம் வாடகை கொடுக்க வேண்டுமெனில், இரண்டு பட்ஜெட்டிலும், வாடகைப் பணத்திற்கு பாதிப் பாதியாக பணத்தை ஒதுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது, செலவுகளைக் கையாள்வது எளிதாக இருக்கும்.
4. அவசரகால நிதி, காப்பீடுகளுக்கு நிதி ஒதுக்காமலிருப்பது:
பட்ஜெட் தொடங்கும் போது, அவசர கால நிதி, ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கத் தொடங்க வேண்டும். அதன் மூலம், அவசர கால செலவுகளை கடன் வாங்காமல் கையாள முடியும். அவற்றுக்கு போதிய நிதி ஒதுக்காத பட்சத்தில், திடீரென அவசர பணத் தேவைகள் வரும் போது, கடனில் மாட்டிக் கொள்ள நேரிடும்.
5. பட்ஜெட்டிற்குள் செலவுகளைக் கட்டுக்குள் வைக்காமலிருப்பது:
பட்ஜெட்டில் இரண்டு விஷயங்கள் முக்கியம். ஒன்று திட்டமிடல். மற்றொன்று செயல்படுத்துதல். பட்ஜெட் போடுவதுடன் வேலை முடிந்து விடவில்லை. மாதம் செலவழிக்கும் ஒவ்வொரு செலவும் ரூபாய் மட்டுமன்றி பைசா உட்பட வரி வரியாக எழுதப்பட வேண்டும். பட்ஜெட் பணத்தை செலவு தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம், பட்ஜெட் சரியாக செயல்படுத்தப்படுகிறது. பட்ஜெட்டின் குறிக்கோளினை அடைய முடிகிறது.
6. மாதா மாதம் பட்ஜெட்டினை மறுபரிசீலினை செய்வது: பட்ஜெட் என்பது வாழும் ஆவணம். அதனை மாதா மாதம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். கடந்த மாதம் பட்ஜெட்டைத் தாண்டி ஏதேனும் செலவு நிகழ்ந்ததா, பட்ஜெட்டில் மாற்றம் செய்ய வேண்டுமா என்று பார்க்க வேண்டும். நிதிக் குறிக்கோளினை அடைந்த பிறகு, பட்ஜெட்டில் அதற்கேற்றவாறு மாற்றங்களைச் செய்து, மற்ற நிதிக் குறிக்கோள்களுக்கு கூடுதல் பணம் ஒதுக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில், சேமித்தப்பணம், சரியாக ஒதுக்கப்படாமல், மற்ற நிதிக் குறிக்கோள்களை அடைவது கடினமாகிவிடும்.
7. மாறக் கூடிய செலவுகள் மற்றும் அவ்வப்போது தேவைப்படும் செலவுகளுக்கு பணம் ஒதுக்காமலிருப்பது:
மாறக் கூடிய செலவுகளான வெளியே உணவருந்துவது போன்றவற்றிற்கு பணம் ஒதுக்க வேண்டும். வருடாந்திர வாகனக் காப்பீடு போன்றவற்றிற்கும் அதன் தேவையை 12 ஆல் வகுத்து மாதா மாதம் பணம் ஒதுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில், எல்லா செலவு வகைகளுக்கும் பட்ஜெட்டில் பணம் ஒதுக்கப்பட்டிருக்கும். கடன் வாங்குவது தவிர்க்கப்படும். வாழ்க்கையின் எல்லா அங்கங்களுக்கும் போதிய பணம் ஒதுக்கப்படும்.
8. பட்ஜெட்டை நமக்கேற்ற முறையில் பிரத்யேகமாக வடிவமைக்காமலிருப்பது:
50/30/20 போன்ற பட்ஜெட் முறைகளில், 50% தேவைகள், 30% வேண்டல்கள், 20% சேமிப்புகள் என்ற விகிதாச்சாரம் எல்லோருக்கும் பொருந்தாது. குறைவான சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் அதிக பணவீக்கம் உள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு, தங்களது பட்ஜெட்டில் இந்த விகிதாச்சாரத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதபட்சத்தில், அவர்களுக்கு நிதிக் குறிக்கோள்களுக்குப் போதிய பணம் ஒதுக்க முடியாமல் போகலாம். ஒவ்வொருவரும் தங்களது பிரத்யேக விகிதாச்சாரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
9. மாறக்கூடிய வருமானம் உடையவர்கள் பட்ஜெட்டைச் சரியாக வடிவமைக்காமலிருப்பது:
மாறக்கூடிய சம்பளம் உடையவர்கள் தங்களது குறைந்தபட்ச வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு, பட்ஜெட் அமைக்க வேண்டும். அப்போது, அவர்கள் பணத்தை வாழ்வின் அங்கங்களுக்கு ஒதுக்க ஏதுவாக இருக்கும். அதிக வருமானம் வரும் பட்சத்தில், அந்தப் பணத்தை நிதிக் குறிக்கோள்களுக்கு ஒதுக்க வேண்டும்.
10. சம்பளம் கூடினால், பட்ஜெட்டை மாற்றி அமைக்காமலிருப்பது:
சம்பளம் கூடினால், அதிக பணம் வருமானம் வருமாதலால், மாதாந்திர பட்ஜெட்டை மறுசீரமைத்து நிதிக் குறிக்கோள்களுக்கு அதிக பணத்தை ஒதுக்க வேண்டும். பழைய பட்ஜெட்டைத் தொடர்ந்து கடைபிடித்தால், அதிக பண வரவு, சரியாக ஒதுக்கப்படாமல், வங்கியிலேயே தேங்கி நிற்கும் நிலை ஏற்படும்.
11. பட்ஜெட் நிதர்சன வாழ்க்கைக்கு பொருந்தாமலிருப்பது:
பட்ஜெட் நிதர்சனமான வாழ்க்கைக்கு பொருந்தி, நிதிக் குறிக்கோள்களுக்குப் போதிய பணம் ஒதுக்க வேண்டும். விரலுக்கேத்த வீக்கமாக இருக்க வேண்டும். ஒரு நிதிக் குறிக்கோளுக்கு அதிக பணம் ஒதுக்குகிறேன் என்று நினைத்து, மற்ற நிதிக் குறிக்கோள்களுக்குப் பணத்தைக் குறைத்தால் வாழ்க்கையை நடத்துவது கடினமாகிவிடும். சம்பளம், செலவுகள், நிதிக்குறிக்கோள்களுக்கு ஏற்ற பட்ஜெட்டைப் போட வேண்டும்.
12. வாழ்க்கைத் துணையுடன் பட்ஜெட்டைக் கலந்தாலோசிக்காமலிருப்பது:
பட்ஜெட் என்பது குடும்பத்தின் நிதி குறிக்கோள்களுக்கானது. வாழ்க்கைத் துணையுடன் கலந்தாலோசித்து பட்ஜெட் முடிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில், வாழ்க்கைத் துணைக்கு பணம் கட்டுக்குள் வைத்திருக்கும் விஷயம் தெரியாத பட்சத்தில், பட்ஜெட்டை மீறி செலவுகள் நடந்து நிதிக் குறிக்கோள்களை அடைவது கடினமாகிவிடும். தம்பதிகள் இரட்டை மாடுகள் பூட்டிய வண்டியைப் போன்றவர்கள். வாழ்க்கை என்ற வண்டியை இருவரும் சேர்ந்து இழுக்க வேண்டும்.
இந்த 12 தவறுகளைத் தவிர்ப்பதன் மூலம், பட்ஜெட்டை இன்னும் சிறப்பாக கையாண்டு நிதிக் குறிக்கோள்களை அடைய முடியும். நிதி சுதந்திரத்தை அடைய முடியும்.