தவறான UPI கணக்கிற்குப் பணம் போய்விட்டதா? அதைத் திரும்பப்பெற இதோ எளிய வழிகள்!

அவசரப்பட்டுப் பணத்தை இழக்காதீர்கள்; உடனடியாகப் பணத்தை மீட்க வேண்டிய 4 முக்கிய நடைமுறைகள்.
UPI பணம் - Wrong UPI Transfer
UPI பணம் - Wrong UPI Transfer
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 6 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, மூன்று சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். இவரது உலக சிறுவர் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள், 2024-ல், ஓர் அங்குலச் சிறுவன், அமேஸான் கானகத்தில் வழி மறந்த சிறுமி, ஆகாயத்தைத் தின்ற மனிதர்கள் ஆகிய மூன்று நூல்களாக வெளியாகியுள்ளன. இவ் வரிசையில் இன்னும் சில தொகுப்புகள் வரவுள்ளன.

Updated on: 

டிஜிட்டல் இந்தியாவில் யுபிஐ (UPI) செயலி மூலமாகப் பணம் அனுப்புவது நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. காய்கறி வாங்குவது முதல் பெரிய வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்கள் வரை அனைத்தும் ஒரு விரல் தொடுதலில் நடந்துவிடுகிறது. ஆனால், அவசரத்திலோ அல்லது கவனக்குறைவாலோ தவறான தொலைபேசி எண்ணுக்கோ அல்லது யுபிஐ ஐடிக்கோ (UPI ID) பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது?

அந்தப் பணத்தைத் (UPI பணம்) திரும்பப் பெறமுடியுமா?

திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால், வெற்றிகரமாகச் சென்றுவிட்ட பரிவர்த்தனையைப் பணம் பெற்றவரின் ஒப்புதல் இல்லாமல் வங்கிகளால் திருப்ப இயலாது; எனவே மீட்பு என்பது அவருடைய ஒத்துழைப்பைப் பொறுத்தது.

அதைச் செய்வதற்கான வழிமுறைகள், கால அவகாசம் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இக்கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

தவறான கணக்கிற்குச் சென்ற பணத்தைத் திரும்பப் பெறும் வழிமுறைகள்

பணம் சென்றது உங்களுக்குத் தெரிந்த நபருக்கு என்றால், முதலில் அவரை நேரடியாகத் தொடர்புகொண்டு பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்கலாம். அது பலனளிக்காவிட்டால், உடனடியாகக் கீழ்க்காணும் நடவடிக்கைகளை வரிசையாக மேற்கொள்ள வேண்டும்:

1. யுபிஐ செயலி மூலம் புகாரளித்தல்: நீங்கள் பயன்படுத்திய யுபிஐ செயலியிலேயே (Google Pay, PhonePe, Paytm, BHIM போன்றவை) 'Help' அல்லது 'Support' பிரிவிற்குச் சென்று, குறிப்பிட்ட பரிவர்த்தனையை (Transaction) தேர்ந்தெடுத்து, பணம் தவறான நபருக்குச் சென்றதைக் குறிக்கும் விருப்பத்தை (எடுத்துக்காட்டு: 'Payment sent to wrong beneficiary' அல்லது அதற்கு இணையான தேர்வு) தேர்வுசெய்து புகாரளிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கிரெடிட் கார்ட் பில்: ஒரு நாள் தாமதமானாலும் ₹2500 நஷ்டமா? அதிர்ச்சித் தகவல்கள்!
UPI பணம் - Wrong UPI Transfer

2. வங்கிக்குத் தெரிவித்தல்: பணம் கழிக்கப்பட்டவுடன் உங்கள் கைபேசிக்கு வரும் குறுஞ்செய்தியில் (SMS) UTR / RRN எனப்படும் 12 இலக்கப் பரிவர்த்தனைக் குறிப்பு எண் இருக்கும். அதை வைத்துக்கொண்டு, உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை (Customer Care) தொடர்புகொண்டு விவரத்தைக் கூறவேண்டும்.

வங்கிக் கிளைக்கு நேரில் சென்று மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துப் பெறுகைச் சீட்டு (acknowledgement) பெறுவது விரைவான தீர்வுக்கு உதவும். பெறுநர் அதே வங்கியில் கணக்கு வைத்திருந்தால், உங்கள் வங்கியே அவரிடம் ஒப்புதல் கோரலாம். வேறு வங்கியாக இருந்தால், அந்த வங்கியின் கிளை விவரங்களை மட்டுமே வழங்க இயலும்.

UPI பணம் - Wrong UPI Transfer
UPI பணம் - Wrong UPI Transfer

3. NPCI இணையதளத்தில் புகார் பதிவு செய்தல்: இந்தியத் தேசியக் கொடுப்பனவுக் கழகத்தின் (NPCI) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'UPI' பிரிவின் கீழுள்ள 'Dispute Redressal Mechanism' பக்கத்திற்குச் செல்லவும் (www.npci.org.in/what-we-do/upi/dispute-redressal-mechanism). அதில் Transaction → Incorrectly transferred to another account என்பதைத் தேர்வு செய்து, 12 இலக்கப் பரிவர்த்தனை எண், வங்கி, தொகை, தேதி ஆகிய விவரங்களுடன் புகாரைப் பதிவு செய்ய வேண்டும். NPCI உதவி எண் 1800-120-1740; மின்னஞ்சல்: upihelp@npci.org.in.

4. ரிசர்வ் வங்கி ஒருங்கிணைந்த குறைதீர்ப்பாளரிடம் (RBI Ombudsman) முறையீடு: வங்கியிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்து, 30 நாட்களுக்குள் பதில் வரவில்லையென்றாலோ, புகார் நிராகரிக்கப் பட்டாலோ, பதில் திருப்தியளிக்க வில்லையென்றாலோ, ரிசர்வ் வங்கியின் இணையதளம் (cms.rbi.org.in) வழியாகப் புகார் அளிக்கலாம். இதற்குக் கட்டணம் இல்லை.

வங்கியின் சேவைக் குறைபாட்டைக் குறைதீர்ப்பாளர் ஆராய்வார்; ஆனால் பணம் மீட்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. புகாரைக் குறைதீர்ப்பாளரிடம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு (வங்கியின் பதில் கிடைத்ததிலிருந்து 90 நாட்கள்) உள்ளதால், தாமதிக்கக் கூடாது.

பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நிபந்தனைகளும் கால அவகாசமும்.

தவறான பரிவர்த்தனை குறித்துப் புகார் அளிக்க ரிசர்வ் வங்கி கட்டாயக் கால வரம்பு எதையும் நிர்ணயித்ததாகத் தெரியவில்லை. இருப்பினும், எவ்வளவு விரைவாகப் புகார் அளிக்கிறீர்களோ, அவ்வளவு எளிதாகப் பணத்தை மீட்க முடியும்; குறிப்பாக, முதல் ஓரிரு நாட்கள் மிக முக்கியமானவை.

இதையும் படியுங்கள்:
UPI புதிய கட்டணம்: உங்க அக்கவுண்டில் இருந்து பணம் பிடிப்பார்களா? NPCI அளித்த நிம்மதி விளக்கம்!
UPI பணம் - Wrong UPI Transfer

நிபந்தனைகள்:

* தவறாகப் பணத்தைப் பெற்ற நபர், அந்தப் பணத்தைத் தன் கணக்கிலிருந்து எடுக்காமல் (Withdraw) இருக்க வேண்டும்.

* பணத்தைத் திருப்ப அவர் தாமாக ஒப்புக்கொள்ள வேண்டும். ஒப்புதல் கிடைத்தால், பணம் சுமார் 7 நாட்களுக்குள் உங்கள் கணக்கிற்குத் திரும்பிவிடும். பெறுநரின் ஒப்புதலோ அல்லது நீதிமன்ற உத்தரவோ இல்லாமல் வங்கி அவரது கணக்கிலிருந்து பணத்தை எடுக்க இயலாது.

* ஒருவேளை தவறாகப் பணத்தைப் பெற்றவர் அதைத் திரும்பத் தர மறுத்தால், வங்கி மூலமான முயற்சி களுக்குப் பிறகு சட்டரீதியான நடவடிக்கை மூலமாக மட்டுமே தீர்வுகாண முடியும்.

ஏமாற்றி வாங்கப்பட்ட பணமா?

தவறுதலாக அல்லாமல், ஏமாற்றுப் பேர்வழிகளின் தூண்டுதலால் பணம் அனுப்பியிருந்தால், உடனடியாக வங்கிக்குத் தெரிவித்து, சைபர் குற்ற உதவி எண் 1930-ஐ அழைக்க வேண்டும்; தேசிய சைபர் குற்றப் புகார் இணையதளத்திலும் பதிவு செய்ய வேண்டும்.

* கைபேசி எண் மூலம் பணம் அனுப்பும்போது கடைப்பிடிக்க வேண்டிய நிதானம் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்திப் பணம் அனுப்பும்போது ஓர் இலக்கம் தவறினாலும் பணம் வேறு ஒருவருக்குச் சென்றுவிடும்.

* பெயரைச் சரிபார்த்தல்: எண்ணை உள்ளீடு செய்தவுடன், செயலியில் தோன்றும் கணக்கு உரிமையாளரின் வங்கியில் பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வப் பெயரை (Verified Name) ஒன்றுக்கு இரண்டு முறை கவனமாகப் படிக்க வேண்டும்.

* அவசரத்தைத் தவிர்த்தல்: அவசரமான சூழலிலோ அல்லது கவனச்சிதறல் இருக்கும்போதோ பரிவர்த்தனை செய்வதைத் தவிர்க்கவேண்டும்.

* எண்களைச் சரிபார்த்தல்: கைபேசி எண்ணின் 10 இலக்கங்களையும் தொடக்கத்திலிருந்து முடிவு வரை சரியாக உள்ளீடு செய்துள்ளோமா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
UPI மூலம் தவறுதலாக வேறு ஒருவருக்கு பணம் அனுப்பிட்டீங்களா? எளிதில் திரும்ப பெறலாம்!
UPI பணம் - Wrong UPI Transfer

QR கோடு ஸ்கேன் செய்யும்போது தேவைப்படும் எச்சரிக்கை

கடைகளிலோ அல்லது தனி நபரிடமோ QR கோடு ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தும்போது சில முன்னெச்சரிக்கைகள் அவசியம்:

* போலி QR கோடுகள்: கடைகளில் ஒட்டப்பட்டிருக்கும் QR கோட்டின் மீது வேறு ஏதேனும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்.

* தொகையைச் சரிபார்த்தல்: ஸ்கேன் செய்த பிறகு செயலியில் தோன்றும் பெறுநர் பெயர் மற்றும் நீங்கள் செலுத்தும் தொகை சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்த்த பிறகே 'UPI PIN' உள்ளீடு செய்ய வேண்டும்.

புதிய நபருக்குப் பணம் அனுப்பும்போது 'ஒரு ரூபாய்' உத்தி

முதன்முறையாக ஒரு எண்ணுக்கோ, நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ பெரிய தொகையை அனுப்ப வேண்டியிருந்தால் – அவர் உங்களுக்கு நன்கு பழக்கமானவர், நெருங்கிய உறவினர் அல்லது நீண்டகால நண்பர் என்றாலும்கூட – கீழ்க்காணும் நடைமுறையைப் பின்பற்றுவது பாதுகாப்பானது. (இது அரசு விதி அல்ல; பரவலாகப் பரிந்துரைக்கப்படும் நடைமுறை).

1. முதலில் ₹1 (ஒரு ரூபாய்) மட்டுமே அனுப்பிப் பார்க்க வேண்டும்.

2. அந்த ஒரு ரூபாய் அவருக்குச் சென்று சேர்ந்துவிட்டதா என்பதைச் சம்பந்தப்பட்ட நபரைத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்த வேண்டும்.

3. அவர் தன் வங்கிக் கணக்குச் செயலியைப் பார்த்து (Bank Statement / App) பணம் வந்துவிட்டதை உறுதிசெய்த பிறகோ அல்லது அதற்கான ஸ்கிரீன்ஷாட்டைப் பெற்ற பிறகோ, மீதமுள்ள பெரிய தொகையை அனுப்ப வேண்டும்.

இந்த எளிய பழக்கம், பெரிய அளவிலான பண இழப்புகளைத் தவிர்க்க உதவும் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

இதையும் படியுங்கள்:
முதியவர்கள் வேடத்தில் சுற்றித்திரியும் திருடர்கள்... உங்களை ஏமாற்ற அவர்கள் பயன்படுத்தும் புது ட்ரிக் இதுதான்!
UPI பணம் - Wrong UPI Transfer

கூடுதல் விழிப்புணர்வு

உங்கள் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டால் வரும் SMS மற்றும் மின்னஞ்சல் விழிப்பூட்டல்களை (Alerts) தவறாமல் பார்த்துச் சோதித்துக்கொள்ளும் பழக்கம் கண்டிப்பாக இருக்கவேண்டும்.

அறிவியல் தொழில்நுட்பம் நமது பரிவர்த்தனைகளை எளிதாக்கியிருந்தாலும், அதில் நாம் காட்டும் சிறு நிதானமும் விழிப்புணர்வுமே நமது பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com