

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சாமானிய மக்களுடைய பட்ஜெட்டில் பெரும் சுமையை ஏற்படுத்து கின்றன. தினமும் அலுவலகம் செல்பவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், குறைந்த செலவில் நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய வாகனங்களுக்காக காத்திருக்கின்ற நேரத்தில் முன்னணி வாகன உற்பத்தியாளரான பஜாஜ் ஆட்டோ ஒரு புதுமையான தீர்வாக பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கைக் கொண்டு வந்துள்ளது. இது இந்தியாவின் முதல் சிஎன்ஜி அடிப்படையிலான மோட்டார் பைக் ஆகும்.
பாரம்பரிய பெட்ரோல் பைக்குகளுடன் ஒப்பிடும்பொழுது உலகின் முதல் சிஎன்ஜி பைக்கான பஜாஜ் ஃப்ரீடம் 125 இயக்கச் செலவைக் கணிசமாகக் குறைக்கிறது. பெட்ரோல் செலவைப் பாதியாகக் குறைக்கும் பஜாஜ் ஃப்ரீடம் 125 என்ற பெயரில் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டிலும் இயங்கும் இரட்டை எரிபொருள் பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது.
இயங்கும் செலவு (Running Cost):
பெட்ரோல் பைக்குடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி பைக்கை ஓட்டுவதற்கான செலவு பாதியாகக் குறைகிறது. சிஎன்ஜி ஒரு கிலோமீட்டருக்கு தோராயமாக ரூ.0.87 செலவாகும்.
பெட்ரோல் ஒரு கிலோமீட்டருக்கு தோராயமாக ரூ.1.60 செலவாகும்.
சேமிப்பு: சிஎன்ஜி மூலம் எரிபொருள் செலவை சுமார் 55% முதல் 65% வரை மிச்சப்படுத்தலாம்.
மைலேஜ் மற்றும் எரிபொருள் கொள்ளளவு:
பெட்ரோல் பைக்கில் 10 முதல் 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது. பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கில் 2 கிலோ சிஎன்ஜி சிலிண்டரும், அவசரத் தேவைக்கு 2 லிட்டர் பெட்ரோல் டேங்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டும் சேர்த்து முழுமையாக 330 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும். பைக்கை ஓட்டிக் கொண்டிருக்கும்பொழுதே பெட்ரோலில் இருந்து சிஎன்ஜி-க்கோ அல்லது சிஎன்ஜிசியில் இருந்து பெட்ரோலுக்கோ மாற்றுவது மிகவும் எளிது.
இதற்காக ஹேண்டில்பாரிலேயே ஒரு பிரத்தியேக ஸ்விட்ச் பொருத்தப்பட்டுள்ளது. பயணத்தின்போது சிஎன்ஜி தீர்ந்து விட்டாலும், பெட்ரோல் இருப்பு இருப்பதால் பயணிகள் எங்கும் நிறுத்தவேண்டிய அவசியம் இன்றி பயணிக்க முடியும்.
சுற்றுச்சூழல் பாதிப்பு:
பெட்ரோல் பைக்குகளை விட கார்பன் டை ஆக்சைடு(CO2) உமிழ்வு 50% குறைவாகவும், கார்பன் மோனாக்சைடு 75% குறைவாகவும் வெளியேறுகிறது.
பெட்ரோல் பைக்கின் நன்மைகள்:
அதிக எடையை ஏற்றிச் செல்லும்போது பெட்ரோல் பைக்குகள் தடையற்ற பிக்கப்பைத் தரும். சிஎன்ஜி பைக்கில் சிங்கிள் ரைடிங்கிற்கு பவர் போதுமானதாக இருந்தாலும், பெட்ரோல் அளவுக்கு வேகம் இருக்காது.
பெட்ரோல் பங்க்குகள் மூலைக்கு மூலை இருப்பதால், எங்கு வேண்டுமானாலும் எளிதாக எரிபொருள் நிரப்பலாம். சிஎன்ஜி நிலையங்கள் இன்னும் அனைத்து கிராமப்புறங்களிலும் பரவலாக வரவில்லை.
ஒருமுறை முழுமையாக பெட்ரோல் நிரப்பினால் 500 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். ஆனால் சிஎன்ஜி பைக்கில் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் இரண்டையும் சேர்த்தே அதிகபட்சம் 330 கிலோ மட்டர் வரை தான் செல்ல முடியும்.
எதை வாங்கலாம்?
நீங்கள் நகரத்திற்குள் தினமும் அதிக தூரம் பயணிப்பவர் மற்றும் உங்கள் பகுதியில் சிஎன்ஜி நிலையங்கள் தாராளமாக இருக்கிறது என்றால் கண்களை மூடிக் கொண்டு சிஎன்ஜி பைக்கைத் தேர்ந்தெடுக்கலாம். ஆரம்ப விலை சற்று கூடுதலாக இருந்தாலும் சில மாதங் களிலேயே எரிபொருள் சேமிப்பு மூலம் அந்தப் பணத்தை எடுத்துவிடலாம்.
உங்களது தினசரி பயன்பாடு (10-20 கி.மீ) மிகக் குறைவு, லாங் ரைடு அதிக தூரம் செல்வீர்கள் என்றாலோ, உடனடி பிக்கப்/வேகம் முக்கியம் என்று நினைத்தாலோ வழக்கமான பெட்ரோல் பைக்கே உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும்.
இந்த விரிவான ஒப்பீட்டு வழிகாட்டியைப் படிப்பதன் மூலம், உங்கள் தினசரி பயணத் தேவைக்கு எந்த வாகனம் சிறந்தது என்பதைத் துல்லியமாகத் தீர்மானித்து, மாதம்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாயை எரிபொருள் செலவில் மிச்சப்படுத்த முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: