பெட்ரோல் vs எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: எதை வாங்குனா நிஜமா லாபம்? முழு அலசல்..

தற்போதுள்ள காலகட்டத்தில் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் எது சிறந்தது என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க...
பெட்ரோல் vs எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
பெட்ரோல் vs எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்AI Image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

ல ஆண்டுகளாக இந்திய மார்க்கெட்டில் பெட்ரோல் ஸ்கூட்டர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. எனினும் சமீப காலமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி ஒருபக்கம் நாளுக்கு நாள் பெட்ரோலின் விலை அதிகரித்து கொண்டேபோகிறது. மறுபக்கம் பெட்ரோல் இருப்பு மற்றும் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பெட்ரோல் வளமும் பிறை நிலவைப்போல் தேய்ந்து வருகிறது. இதனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மவுசு மக்களிடையே ஏறிக்கொண்டே போகிறது.

தற்போதுள்ள காலகட்டத்தில் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் எது சிறந்தது என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க...

* பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைந்த இயக்கச் செலவையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் தருகிறது. அதுவே பெட்ரோல் ஸ்கூட்டர் நீண்ட தூரப் பயணங்களுக்கும், உடனடி எரிபொருள் நிரப்புவதற்கும் மிகவும் எளிதானது.

* எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்ய ₹15–₹25 வரை செலவாகும். பெட்ரோல் ஸ்கூட்டர்களைவிட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு கிலோமீட்டருக்கு 20 பைசா முதல் 30 பைசா வரை மட்டுமே செலவாகும். மாதத்திற்கு 1,000 கி.மீ ஓட்டினால் தோராயமாக ₹250–₹350 வரை மின்கட்டணம் வரும். இது பெட்ரோல் வண்டிகளைவிட மிகக்குறைவு.

பெட்ரோல் ஸ்கூட்டரை மாதம் தோறும் 1,000 கி.மீ பயணத்திற்கு பெட்ரோல் மற்றும் பராமரிப்பு சேர்த்து ₹2,200 - ₹2,800 வரை தேவைப்படும். லிட்டருக்கு தோராயமாக ₹102 - ₹105 வரை உள்ளது. ஒரு லிட்டருக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை மட்டுமே மைலேஜ் கிடைக்கும்.

* பராமரிப்பை பொறுத்தவரை, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு, என்ஜின் ஆயில் தேவை இல்லை, கிளட்ச் அல்லது கியர்பாக்ஸ் இல்லை, குறைந்த அளவிலான பராமரிப்பு மட்டுமே தேவை மற்றும் தேய்மானம் அடையக்கூடிய பாகங்கள் மிகவும் குறைவு என்பதால் வருடாந்திர பராமரிப்புச் செலவு ₹800 முதல் ₹1,500 வரை மட்டுமே செலவாகும். மேலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரீஜெனரேட்டிவ் பிரேக் பயன்படுத்துவதால், இதில் உள்ள பிரேக்கிங் பேட் அதிக காலத்திற்கு உழைக்கும்.

அதுவே பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு, தவறாமல் இன்ஜின் ஆயில் மாற்றவேண்டும், என்ஜின் பராமரிப்பு தேவை, ஏர் ஃபில்டர் , ஸ்பார்க் பிளக்குகள், ஃபில்டர்கள், பெல்ட்கள் போன்றவற்றிற்காக வருடாந்திர பராமரிப்புச் செலவாக ₹3,000 முதல் ₹5,000 வரை செலவாகும்.

இதையும் படியுங்கள்:
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... அதிகரிக்கும் டிமாண்ட், சரியும் விற்பனை! பேட்டரிதான் பெரிய வில்லன்!
பெட்ரோல் vs எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

* அதேசமயம் பெட்ரோல் வாகனங்களுக்கு நிலையான மறுவிற்பனை (Resale Value) மதிப்பு உள்ளது. ஆனால், எலெக்ட்ரிக் வாகனங்களின் (EV) மறுவிற்பனை மதிப்பு பேட்டரி ஆயுள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்போதுதான் மெதுவாக முன்னேறி வருகிறது.

* வண்டி விலை, பராமரிப்பு மற்றும் எரிபொருள் என 5 வருட மொத்தச் செலவு பெட்ரோல் ஸ்கூட்டருக்கு ₹2.2 - ₹2.6 லட்சம் வரையாகும்; ஆனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ₹1.2 - ₹1.5 லட்சம் மட்டுமே ஆகிறது. அந்த வகையில் வருடத்திற்கு 10,000 கி.மீ வீதம் 5 ஆண்டுகள் பயன் படுத்தினால், பெட்ரோல் ஸ்கூட்டரைவிட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (EV) மூலமாக ₹1 லட்சத்திற்கும் மேல் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

* பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பராமரிப்பு செலவு ரூ.1,50,000 ஆகும். அதுவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு வெறும் ரூ.20,000 மட்டுமே செலவாகும்.

* எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்சை விட பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டர்கள் அதிக தூரத்திற்குச் செல்லும். அந்த வகையில் பெட்ரோல் ஸ்கூட்டர் ஒருமுறை பெட்ரோல் நிரப்பினால் 250 முதல் 350 கி.மீ வரை செல்லும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 90 முதல் 140 கி.மீ வரை மட்டுமே செல்லும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்வது மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது.

உங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் செல்லும்போது பாதி வழியிலேயே சார்ஜ் தீர்ந்துவிட்டால், மறுபடியும் சார்ஜ் ஏற்றுவதற்கு அருகில் எந்த சார்ஜிங் நிலையமும் கிடைக்காமல் சிரமப்படுவீர்கள். ஆனால் பெட்ரோல் ஸ்கூட்டரில் இந்த கவலையே இல்லை. அப்படியே பெட்ரோல் தீர்ந்தாலும் கூட அருகிலேயே பெட்ரோல் பங்க் இருக்கும்.

* பெட்ரோல் போட சில நிமிடங்களே போதும். ஆனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்டில் சார்ஜ் செய்ய 4 முதல் 6 மணி நேரம் தேவைப்படும்.

* பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வெளியிடும் கரியமில வாயுக்கள் நமது சுற்றுச்சூழலை கடுமையாக மாசுபடுத்துவதால் பல ஆபத்துகளை நாம் எதிர்கொள்கிறோம். ஆனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பேட்டரிகளில் இயங்குவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

Electric Scooter vs Petrol Scooter
Electric Scooter vs Petrol Scooterimage credit-choosemybicycle.com

* நீங்கள் அடிக்கடி நீண்ட தூரம் பைக்கில் பயணம் மேற்கொள்பவராக இருந்தால், உங்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டரை விட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதுதான் சிறந்த தீர்வாக இருக்கும். ஏனென்றால் இதன் மூலம் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

* எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் உள்ள கனமான பேட்டரிகள் சாதாரண பெட்ரோல் ஸ்கூட்டரை விடக் கூடுதல் எடையைக் கொண்டிருக்கின்றன. இந்த அதிகப்படியான எடையால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டயர்கள் மற்றும் பிரேக் பேடுகள் வழக்கத்தைவிட வேகமாகத் தேய்மானம் அடைவதால் பெட்ரோல் ஸ்கூட்டரை விட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பிரேக் பேட்களையும் டயர்களையும் அடிக்கடி மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

* எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மெயின்டெனன்சில் மிகப்பெரிய செலவு வைப்பது பேட்டரி தான். பொதுவாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பேட்டரிகள் 3 முதல் 5 ஆண்டுகள் வரை மட்டுமே சிறப்பான செயல்திறனை வழங்கும். அதன்பின் பேட்டரி பழுதாகி மாற்ற நேரிட்டால், அது வாகனத்தின் மொத்த விலையில் சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை செலவை இழுத்துவிட்டுவிடும்.

இதையும் படியுங்கள்:
ஜெலோ நைட் பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: நவீன வசதிகளுடன் வெறும் 59 ஆயிரம்தான்
பெட்ரோல் vs எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

அதாவது, சர்வீஸ் செலவில் மிச்சமாகும் தொகை அனைத்தும் இந்த ஒரே பேட்டரி மாற்றும் செலவில் சரியாகிவிடும். ஆனால் இது போன்ற பிரச்னை பெட்ரோல் ஸ்கூட்டர்களில் இல்லை.

* எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அனைத்தும் சென்சார்கள் மற்றும் மென்பொருட்கள் மூலம் இயங்குவதால், சிறிய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டாலும் உள்ளூர் மெக்கானிக்கிடம் காட்ட முடியாது. அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டருக்கு மட்டுமே போக முடியும். அதேபோல்,

உத்தரவாதக் காலம் முடிந்த பிறகு, இதுபோன்ற எலக்ட்ரானிக் பாகங்கள் மற்றும் கண்ட்ரோலர்களில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்வதற்குப் பெட்ரோல் பைக்கை விட இருமடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

* நீங்கள் தினமும் 40 முதல் 50 கிலோமீட்டருக்கு மேல் பயணிப்பவராக இருந்தால், பெட்ரோல் செலவில் மிச்சமாகும் பணத்தைக் கொண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி மாற்றும் செலவை ஈடுகட்டிவிட முடியும். ஆனால் மிகக் குறைந்த தூரம் மட்டுமே பயணிப்பவர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விட பெட்ரோல் பைக்கே நீண்ட காலத்தில் சிக்கனமான தேர்வாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஒரே சார்ஜில் 180 கிமீ ரேஞ்ச்! இந்தியாவில் களமிறங்கியது கீவே 'ஹைப்வோல்ட் ஆர்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
பெட்ரோல் vs எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

எனவே வெறும் ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வெறும் விளம்பரங்களைப் பார்த்து ஏமாறாமல், உங்கள் தினசரி பயணத் தேவையைச் சரியாகக் கணக்கிட்டு ஸ்கூட்டரைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com