வங்கிக் கணக்கில் இனி 4 நாமினிகள்! புதிய ரிசர்வ் வங்கி சட்டம் உங்களுக்காக!

வங்கி கணக்கு மற்றும் லாக்கர்களில் நாமினி சேர்ப்பது எப்படி? முழுமையான புதிய வழிகாட்டல்.
நாமினி நியமனம் - Banking Laws Amendment Act
நாமினி நியமனம் - Banking Laws Amendment ActImage credit: Gemini
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 7 சிறுகதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு நூல், ஒரு கட்டுரை நூல், ஒரு ஆய்வுக் கட்டுரை நூல், 5 சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதை மற்றும் நாவல் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். பொருளாதாரம் உட்பட பல்வேறு பிரிவுகளில் இவரது கட்டுரைகள் மற்றும் சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் கல்கி ஆன்லைனில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

Updated on: 

நாம் வாழ்நாளில் பாடுபட்டுச் சேர்க்கும் சேமிப்பும் சொத்துகளும், நமக்குப் பிறகு நமது குடும்பத்தினரைச் சென்றடைய வேண்டும் என்பதே நம் ஒவ்வொருவரின் ஆசையாக இருக்கும். ஆனால், எதிர்பாராத அசம்பாவிதம் நடந்தால், வங்கிக் கணக்கிலோ அல்லது லாக்கரிலோ நாமினி நியமிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில், அந்தப் பணத்தை எடுப்பதற்கு நமது வாரிசுகள் சிரமப்பட வேண்டியிருக்கும்.

நாமினி என்ற ஒரு சிறிய விவரத்தைப் பூர்த்தி செய்யாததால், பல குடும்பங்களின் உரிமை கோரப்படாத தொகைகள் (Unclaimed Deposits) வங்கிகளில் முடங்கிக் கிடக்கின்றன.

வங்கிக் கணக்கு மற்றும் லாக்கர் பயன்பாட்டில் இந்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கொண்டுவந்துள்ள புதிய சட்டத் திருத்தங்கள், நாமினி நியமனத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அது பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.

நாமினி என்றால் என்ன? அவரின் அதிகாரம் என்ன?

மக்களில் பெரும்பாலானோர் ‘நாமினி’ என்றால் “சொத்துக்கு வாரிசாக நியமிக்கப்படுபவர்” எனக் கருதுகிறார்கள். ஆனால் அது தவறான கருத்து. நாமினி என்பவர் சொத்தின் உரிமையாளர் அல்ல; அவர் சட்டப்பூர்வ வாரிசுகளுக்காக அந்தச் சொத்தைப் பெற்று, அவர்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்புடைய நபர் (Trustee / Custodian) மட்டுமே. நிச்சயமாக, ஒருவர் தனது சட்டப்பூர்வ வாரிசையே நாமினியாக நியமிக்கவும் முழு உரிமை உண்டு.

வாரிசு என்பது வேறு, நாமினி என்பது வேறு. நாமினியின் முதன்மையான பொறுப்பு, சொத்துக்கு உரியவர்களிடம் அதைச் சரியான முறையில் கொண்டு சேர்ப்பதும், வாரிசுகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக இருக்கும் பட்சத்தில், உயிலிலோ அல்லது சட்டத்திலோ குறிப்பிடப்பட்டுள்ளபடி அதனைப் பிரித்து வழங்க இடைக்காலப் பாதுகாப்பாளராகச் செயல்படுவதுமே ஆகும்.

இதையும் படியுங்கள்:
வங்கியில FD போடுறீங்களா? இந்த 4 விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!
நாமினி நியமனம் - Banking Laws Amendment Act

சுருக்கமாக, கணக்கு வைத்திருப்பவர் காலமானால், அவரது கணக்கில் உள்ள பணம், FD அல்லது லாக்கரில் உள்ள பொருட்களைச் சட்டப்பூர்வ வாரிசுகளிடம் ஒப்படைக்கும் வரை, வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நபரே நாமினி. கூட்டுக்கணக்கில், அனைத்துக் கணக்கு வைத்திருப்பவர்களும் காலமான பிறகே நாமினியின் உரிமை செயல்படும்.

நாமினி நியமனம் - Banking Laws Amendment Act
நாமினி நியமனம் - Banking Laws Amendment ActImage credit: Gemini

எதற்கெல்லாம் நாமினி தேவை?

வங்கிச் சேமிப்புக் கணக்கு, நிலையான வைப்புத் தொகை (FD), லாக்கர், டீமேட் கணக்கு, மியூச்சுவல் ஃபண்ட், ஆயுள் காப்பீடு, EPF, PPF மற்றும் அசையாச் சொத்து ஆவணங்கள் வரை அனைத்து நிதிசார் கணக்குகளுக்கும் நாமினி நியமனம் அவசியம்.

இனி நான்கு நாமினிகள் வரை சேர்க்கலாமா?

இதுவரை ஒரு வங்கிக் கணக்கிற்கோ வைப்புத் தொகைக்கோ ஒரே ஒரு நபரை மட்டுமே நாமினியாக நியமிக்க முடிந்தது. ஆனால், ‘வங்கிச் சட்டங்கள் (திருத்தச் சட்டம்), 2025’ (Banking Laws (Amendment) Act, 2025) மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குகள் மற்றும் லாக்கர்களில் அதிகபட்சம் நான்கு நாமினிகள் வரை நியமிக்கச் சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத் திருத்தம் 2025-இல் நிறைவேற்றப்பட்டு, RBI அக்டோபர் 28, 2025 அன்று வெளியிட்ட வழிகாட்டுதல் களின்படி வங்கிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நான்கு நாமினிகள்: இரு வகை நியமனம்

1. ஒரே நேரத்திலான நாமினி நியமனம் (Simultaneous Nomination):

வங்கிக் கணக்கு அல்லது FD-க்கு நான்கு நாமினிகளைச் சேர்க்கும்போது, ஒவ்வொருவருக்கும் சதவீதப் பங்கீட்டை நீங்களே நிர்ணயிக்கலாம். உதாரணமாக, மனைவிக்கு 50%, இரு பிள்ளைகளுக்குத் தலா 25% எனக்குறிப்பிடலாம்.

2. வரிசை அடிப்படையிலான நாமினி நியமனம் (Successive Nomination):

இதில் முதல் நாமினி, இரண்டாம் நாமினி, மூன்றாம் நாமினி, நான்காம் நாமினி என வரிசையைக் குறிப்பிடலாம். முதல் நாமினி இல்லாத நிலையில் மட்டுமே அடுத்த நாமினிக்கு உரிமை கிடைக்கும்.

வங்கிக் கணக்கு மற்றும் FD-க்கு இரு வகை நியமனங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் லாக்கர் மற்றும் பாதுகாப்பான பொருட்களுக்கு, சதவீத அடிப்படையிலான ஒரே நேர நாமினி நியமனம் அனுமதிக்கப்படவில்லை; வரிசை அடிப்படையிலான நாமினி நியமனமே அனுமதிக்கப்படுகிறது.

இது குடும்பத்தில் ஒரே ஒரு நபரை நாமினியாக வைப்பதால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவும், வாரிசுகளுக்குத் தெளிவான பாதுகாப்பை வழங்கவும் உதவுகிறது.

நாமினியை நியமிக்க அல்லது மாற்ற, பின்வரும் விவரங்கள் தேவை:

· நாமினியின் முழுப் பெயர், பிறந்த தேதி, கணக்கு வைத்திருப்பவருடனான உறவுமுறை, முகவரி, தொலைபேசி எண்.

· நாமினி 18 வயதிற்குட்பட்டவராக (Minor) இருந்தால், அவருக்குப் பதிலாகப் பணத்தைப் பெறக்கூடிய பாதுகாவலரின் (Guardian) விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.

· நாமினியின் ஆதார் அல்லது பான் விவரங்கள்; வங்கி கோரினால் அவற்றின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வங்கி திவாலானால் உங்கள் சேமிப்புப் பணம் என்னவாகும்? ரூ.5 லட்சம் காப்பீடு பற்றிய முழுத் தகவல்!
நாமினி நியமனம் - Banking Laws Amendment Act

வங்கிக் கிளையில் சேர்ப்பது எப்படி?

வங்கிக் கிளைக்குச் சென்று DA-1 படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். ஏற்கனவே உள்ள நாமினியை மாற்ற அல்லது ரத்து செய்ய DA-2 / DA-3 படிவங்கள் பயன்படும்.

நாமினியாகச் சேர்க்கப்படும் நபர் வங்கிக்கு நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை. அவரது அடையாளச் சான்று விவரங்களை கணக்கு வைத்திருப்பவர் படிவத்தில் பூர்த்தி செய்து கையொப்பமிட்டால் போதுமானது; ஆனால் வங்கி கூடுதல் ஆவணங்களைக் கோரலாம்.

லாக்கரைக் கூட்டாகப் பயன்படுத்துபவர்கள் அனைவரும், வங்கியின் விதிகளின்படி நேரில் சென்று கையொப்பமிட வேண்டியிருக்கலாம்.

நெட் பேங்கிங் / மொபைல் ஆப் மூலம் மாற்றுவது எப்படி?

பல முன்னணி வங்கிகளில் இணைய வழியிலேயே நாமினியைச் சேர்க்கும் வசதி உள்ளது.

· வங்கியின் இன்டர்நெட் பேங்கிங் அல்லது மொபைல் செயலியில் ‘Service Requests’ அல்லது ‘Profile’ பகுதிக்குச் செல்லவும்.

· ‘Nomination Details’ / ‘Add or Modify Nominee’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

· கணக்கைத் தேர்ந்தெடுத்து, நாமினியின் பெயர், முகவரி, பிறந்த தேதி, உறவுமுறை மற்றும் பங்கீட்டுச் சதவீதம் அல்லது வரிசை முன்னுரிமையைப் பதிவிடவும்.

· பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐ உறுதிப்படுத்தினால், நாமினி விவரம் புதுப்பிக்கப்படும். சில வங்கிகள்.

இதையும் படியுங்கள்:
உஷார்! ஒரு மாதம் கடன் தவணை பவுன்ஸ் ஆனால் இவ்வளவு பெரிய ஆபத்து வருமா?
நாமினி நியமனம் - Banking Laws Amendment Act

ஆன்லைனில் ஆவணம் ஏதும் கேட்காமல் செயல் படுத்தினாலும், சில வங்கிகள் ஆவணங்களைக் கோரலாம்.

எதிர்கால நலனுக்காக

உங்களது குடும்பத்தின் எதிர்கால நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வது உங்கள் கையில்தான் உள்ளது. இதுவரை வங்கிக் கணக்கிலோ லாக்கரிலோ நாமினி சேர்க்கப்படாமல் இருந்தால், இன்றே வங்கிக் கிளை அல்லது நெட் பேங்கிங் வழியாக நாமினி விவரங்களைப் புதுப்பியுங்கள். இது உங்கள் குடும்பத்திற்கு நாமினி தொடர்பான நடைமுறையை எளிதாக்கி, குடும்பத்தினர் சந்திக்கும் சிரமத்தைக் கணிசமாகக் குறைக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference: