சரியான நேரத்தில் EMI கட்டினாலும் சிபில் ஸ்கோர் குறைகிறதா? காரணமும் திருத்தும் வழியும்!

நீங்கள் வாங்கிய கடனை சரியாகச் செலுத்தியும் உங்கள் CIBIL Score குறைந்தால் உடனடியாக இதைச் செய்யுங்கள்!
சிபில் ஸ்கோர் (CIBIL Score) - Credit Score Tamil
சிபில் ஸ்கோர் (CIBIL Score) - Credit Score Tamil
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 7 சிறுகதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு நூல், ஒரு கட்டுரை நூல், ஒரு ஆய்வுக் கட்டுரை நூல், 5 சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதை மற்றும் நாவல் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். பொருளாதாரம் உட்பட பல்வேறு பிரிவுகளில் இவரது கட்டுரைகள் மற்றும் சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் கல்கி ஆன்லைனில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

Updated on: 

கற்பனை செய்து பாருங்கள் - நீங்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்திருக்கிறீர்கள். உங்களுக்குக் கொஞ்சம் பற்றாக்குறையான வருமானம்தான். கடன் வாங்கிக் கழித்தலில்தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவும், இன்றைய காலத்து இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர்கள் அதிக அளவில் கடைபிடிக்கக்கூடிய EMI முறையில்!

ஆனால், பலரும் செய்வதுபோல EMI என்பதற்காக நீங்கள் அனாவசியமான பொருட்களை வாங்குவதோ, ஆடம்பரங்களுக்காக செலவழிப்பதோ இல்லை. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும்தான்.

தேவையற்றும், தகுதிக்கு மீறியும் கடன் வாங்கிப் பல வகையில் கஷ்டப்படுகிற அனேகம் பேரின் கதைகள் உங்களுக்குத் தெரியும். உங்கள் நண்பர்கள், சக ஊழியர்கள், உறவினர்களிலேயே அப்படி சிலர் இருக்கின்றனர். நீங்களும் அப்படிக் கஷ்டப்படவோ, அவமானப்படவோ கூடாது என்பதற்காக, மாத சம்பளம் வந்ததுமே முதல் காரியமாகக் கடன் தவணைகளைச் செலுத்திவிடுவீர்கள். எனவே, உங்கள் EMI-கள் ஒரு நாளும் தாமதமானதில்லை.

கடன் அறிக்கை மற்றும் கடன் மதிப்பெண்

இன்றைய நிதி உலகில், தனிநபரின் பொருளாதார நம்பிக்கையை நிர்ணயிக்கும் மிக முக்கியமான ஆவணமாக கடன் அறிக்கை மற்றும் கடன் மதிப்பெண் சிபில் ஸ்கோர் (CIBIL Report / Credit Score) திகழ்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். வங்கியில் வீட்டுக்கடன், தனிநபர் கடன் அல்லது கடன் அட்டை எதை விண்ணப்பித்தாலும், வங்கிகள் முதலில் சரிபார்ப்பது இந்தக் கடன் அறிக்கையைத்தான்.

300 முதல் 900 வரை இருக்கும் கடன் மதிப்பெண் குறைவாக இருந்தால், கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் அல்லது அதிக வட்டி விகிதம் விதிக்கப்படலாம். உங்களுக்கு ஒருபோதும் அவ்வாறு ஆகக்கூடாது என்பதற்காக, சமயங்களில் “வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி”க்கூட EMI-ஐக் கட்டியே விடுவீர்கள்.

ஆனால் இப்போது வங்கி சொல்கிறது: "உங்கள் கடன் மதிப்பெண் குறைவாக உள்ளது.”

உங்களுக்கு ஒன்றும் புரியவில்லை! நீங்கள் எப்போதும் சரியான நேரத்துக்குக் கடன் தவணைகளைக் கட்டியிருந்தும் இப்படிச் சொல்லப்படுகிறதே எனக் குழம்பிப் பதறுகிறீர்கள். பதற வேண்டியதில்லை. கடன் சம்மந்தப்பட்ட உங்களின் ஆவணங்களையும் அறிக்கைகளையும் சரிபாருங்கள்.

இதையும் படியுங்கள்:
கிரெடிட் கார்ட் பில்: ஒரு நாள் தாமதமானாலும் ₹2500 நஷ்டமா? அதிர்ச்சித் தகவல்கள்!
சிபில் ஸ்கோர் (CIBIL Score) - Credit Score Tamil

பல சமயங்களில், நாம் கடன்களைச் சரியாகத் திருப்பிச் செலுத்தியிருந்தாலும், கடன் அறிக்கையில் ஏற்படும் தவறுகள் காரணமாக நமது கடன் மதிப்பெண் தேவையற்ற முறையில் குறையலாம்.

வழக்கமாக ஏற்படும் தவறுகள்

· தனிநபர் விவரக் குளறுபடிகள்: பெயர் எழுத்துப்பிழை, பிறந்த தேதி தவறு, PAN விவரங்கள் தவறாகப் பதிவாதல், முகவரிப் பிழைகள்.

· தவறான கடன் கணக்குகள்: நாம் வாங்காத கடனோ அல்லது பயன்படுத்தாத கடன் அட்டையோ நமது அறிக்கையில் பட்டியலிடப்படுவது.

· மூடப்படாத கணக்குகள்: கடனை முழுமையாக அடைத்து 'தடையில்லாச் சான்றிதழ்' (NOC) பெற்ற பிறகும், அது 'செயலில் உள்ளது' (Active), 'எழுத்தோட்டப்பட்டது' (Written-off) அல்லது 'முடிக்கப்பட்டது' (Settled) என்று காட்டப்படுவது.

· ஒரே கணக்கு இருமுறை பதிவாதல்: ஒரே கடன் கணக்கு இரண்டு முறை பதிவாகி, கடன் சுமை அதிகமாகக் காட்டப்படுவது.

சிபில் ஸ்கோர் (CIBIL Score) - Credit Score Tamil
சிபில் ஸ்கோர் (CIBIL Score) - Credit Score Tamil

· தவறான தாமதப் பதிவுகள்: EMI உரிய நாளில் செலுத்தியிருந்தாலும், வங்கித் தரவுப் பிழையால் 'தாமதமாகச் செலுத்தப்பட்டது' (DPD — Days Past Due) எனப் பதிவாவது.

இதில் ஏதாவது ஒரு தவறு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தவறுகள் உங்கள் அறிக்கையில் இருக்கலாம்.

இத்தகைய தவறுகள் ஏன் நிகழ்கின்றன?

· வங்கி/NBFC தரவுப் பிழை: வங்கிகளும் சாரா நிதி நிறுவனங்களும் வாடிக்கையாளர் தரவைக் கடன் தகவல் நிறுவனங்களுக்கு அனுப்பும்போது ஏற்படும் மனிதத் தவறு அல்லது தொழில்நுட்பக் கோளாறு.

· அடையாளத் திருட்டு: பான் கார்டு அல்லது ஆதார் விவரங்களைப் பயன்படுத்தி வேறு யாராவது மோசடியாகக் கடன் வாங்கியிருப்பது.

· ஒத்த பெயர்கள்: ஒரே பெயர் மற்றும் ஒத்த பிறந்த தேதி கொண்ட இரு நபர்களின் தரவுகள் தவறாக இணைக்கப்படுவது (Mixed File Error).

சரி, இப்போது நீங்கள் தவறைக் கண்டுபிடித்துவிட்டீர்கள். அடுத்து என்ன? அதை எப்படித் திருத்துவது?

இதையும் படியுங்கள்:
இனி வங்கி லேட் பண்ணா சந்தோஷப்படுங்க..! தினமும் ₹5,000 உங்க அக்கவுண்ட்டில் கிரெடிட் ஆகும்!
சிபில் ஸ்கோர் (CIBIL Score) - Credit Score Tamil

தவறுகளைத் திருத்தும் வழி

படி 1: CIBIL-இல் ஆன்லைன் முறையீடு

CIBIL அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்து, உங்கள் கடன் அறிக்கையைப் பதிவிறக்கவும். பின்னர் Dispute Center பகுதிக்குச் சென்று, 'Dispute an Item' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தனிநபர் விவரங்கள், கணக்கு விவரங்கள் அல்லது தாமதப் பதிவுகளில் எது தவறு என்பதைக் குறிப்பிட்டு, ஆன்லைன் முறையீட்டுப் படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.

முறையீடு பதிவானதும் CIBIL ஒரு Dispute ID வழங்கும்; தொடர்புடைய பகுதி 'Under Dispute' எனக் குறிக்கப்படும். CIBIL இந்தத் தகவலைத் தொடர்புடைய வங்கி/நிதி நிறுவனத்திடம் சரிபார்ப்புக்கு அனுப்பும். முறையீடு நிறைவேற்றப்படுவதற்கு பொதுவாக 30 நாட்கள் வரை ஆகலாம்; இது வங்கி பதிலளிக்கும் நேரத்தையும் சார்ந்தது.

படி 2: தொடர்புடைய வங்கியை நேரடியாக அணுகுதல்

CIBIL-இல் முறையீடு அளிப்பதோடு, தவறான தரவைப் பதிவளித்த வங்கி அல்லது NBFC-ஐயும் நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டும். கடன் முடிவுச் சான்று, NOC, வங்கி கணக்கு அறிக்கை, தவணை செலுத்திய ஆதாரங்கள் ஆகியவற்றுடன் கோரிக்கை மனுவை வழங்கவும்.

வங்கி ஆவணங்களைச் சரிபார்த்து, திருத்தப்பட்ட தரவை 21 நாட்களுக்குள் கடன் தகவல் நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும். பின்னர் CIBIL அதைச் சரிபார்த்து, திருத்தப்பட்ட அறிக்கையை வழங்கும்.

புகார் அளிக்கும் வழிகள்

வங்கி அல்லது CIBIL உங்கள் கோரிக்கையைச் சரியான நேரத்தில் கவனிக்கவில்லை என்றால் என்ன செய்வது?

· வங்கியின் புகார் தீர்ப்பு அதிகாரி (Grievance Redressal Officer): வங்கியின் வாடிக்கையாளர் சேவை மின்னஞ்சல் அல்லது புகார் பதிவு அமைப்பு வழியாக மேல்முறையீடு செய்யலாம்.

· RBI Integrated Ombudsman: வங்கியிடம் புகார் அளித்து 30 நாட்களுக்குள் பதில் கிடைக்கவில்லை அல்லது தீர்வு திருப்தியாக இல்லை என்றால், cms.rbi.org.in இணையதளத்தில் RBI-யின் ஒருங்கிணைந்த ஒம்புட்ஸ்மேன் திட்டத்தின் கீழ் புகார் பதிவு செய்யலாம்.

· இழப்பீடு உரிமை: RBI விதிகளின்படி, முறையீடு பதிவான 30 நாட்களுக்குப் பிறகும் தவறு திருத்தப் படாவிட்டால், தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் ₹100 இழப்பீடு பெறலாம். இதில் வங்கிக்கு 21 நாட்களும், CIBIL போன்ற கடன் தகவல் நிறுவனத்திற்கு மீதமுள்ள 9 நாட்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இழப்பீடு தனித் தாக்கல் இல்லாமலேயே கணக்கிடப்பட்டு, முறையீடு முடிந்த ஐந்து வேலை நாட்களுக்குள் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வங்கி திவாலானால் உங்கள் சேமிப்புப் பணம் என்னவாகும்? ரூ.5 லட்சம் காப்பீடு பற்றிய முழுத் தகவல்!
சிபில் ஸ்கோர் (CIBIL Score) - Credit Score Tamil

நினைவில் கொள்ள வேண்டியவை

· ஆண்டுக்கு ஒருமுறை இலவசக் கடன் அறிக்கை: RBI விதிகளின்படி, ஒவ்வொரு தனிநபரும் CIBIL, Experian, Equifax, CRIF High Mark உள்ளிட்ட ஒவ்வொரு கடன் தகவல் நிறுவனத்திடமிருந்தும், ஆண்டுக்கு ஒருமுறை இலவச முழு கடன் அறிக்கையையும் மதிப்பெண்ணையும் பெறலாம்.

· முன்கூட்டியே சரிபார்ப்பது நல்லது: புதிய கடன் அல்லது கடன் அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கு குறைந்தது 2–3 மாதங்களுக்கு முன்பே அறிக்கையைச் சரிபார்ப்பது நல்லது. ஏனெனில், தவறு திருத்தப்பட்டு மதிப்பெண் புதுப்பிக்க பொதுவாக சில வாரங்கள் ஆகலாம்.

· ஆதாரங்களைச் சேமித்து வைக்கவும்: NOC, முடிவுச் சான்று, EMI செலுத்திய ரசீதுகள், மின்னஞ்சல் பதில்கள் ஆகியவற்றை பத்திரமாகச் சேமித்து வையுங்கள்.

· ஒவ்வொரு ஆண்டும் சரிபார்க்கவும்: கடன் எடுக்காத காலத்திலும் அறிக்கையைச் சரிபார்ப்பது, மோசடி மற்றும் தரவுப் பிழைகளை முன்கூட்டியே கண்டறிய உதவும்.

தவறான கடன் பதிவுகள் உங்கள் நிதித் தகுதியைப் பாதிக்க அனுமதிக்காதீர்கள். சரியான நேரத்தில் முறையீடு செய்து, ஆதாரங்களுடன் பின்தொடர்ந்தால், தவறுகளைத் திருத்தி ஆரோக்கியமான கடன் வரலாற்றைப் பேண முடியும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference: