கிரெடிட் கார்டுக்கு (credit card) விண்ணப்பிக்கும்போது சிறிய தவறுகள் கூட உங்கள் விண்ணப்பத்தை நிராகரிக்கச் செய்துவிடும். பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கு முக்கிய காரணம், போதிய கிரெடிட் ஸ்கோர் இல்லாவிட்டாலும், விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதில் செய்யும் தவறுகளும் தான். பெரும்பாலான வங்கிகள் இப்போது உங்கள் அடையாளத்தையும், வருமானத்தையும், கடன் வரலாற்றையும் தானியங்கி (Automated) அமைப்புகள் மூலம் சரிபார்ப்பதால், துல்லியம் என்பது மிக முக்கியம். உங்கள் கிரெடிட் கார்டு அப்ளிகேஷன் முதல் முயற்சியிலேயே வெற்றியடைய, நீங்கள் செய்ய வேண்டிய எளிய, ஆனால் முக்கியமான படிகள் இங்கே:
1. உங்களுக்குப் பொருந்தாத கார்டைத் தேர்ந்தெடுப்பது:
பலரும் அதிகப் பரிசுகள் அல்லது பளபளப்பான சலுகைகளைக் கொண்ட கார்டை மட்டும் பார்த்து விண்ணப்பிக்கிறார்கள். இதுவே முதல் தவறு. வட்டி விகிதம், ஆண்டு கட்டணம், வெகுமதிகள் மற்றும் உங்கள் செலவுப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்றதா என்று ஒப்பிட்டுப் பார்க்கவும். அதிக கட்டணம் அல்லது தேவையற்ற சலுகைகளைக் கொண்ட கார்டைத் தேர்ந்தெடுத்து பிறகு வருத்தப்படுவதைத் தவிர்க்கலாம்.
2. கிரெடிட் ஸ்கோரைச் சரிபார்ப்பது:
விண்ணப்பத்தை நிரப்ப தொடங்கும் முன் இந்த இரண்டு விஷயங்களை உறுதி செய்யுங்கள்.
கிரெடிட் ஸ்கோர்: உங்கள் கிரெடிட் ஸ்கோர் 700 அல்லது அதற்கு மேல் இருக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும். ஸ்கோர் குறைவாக இருந்தால், கார்டுக்கு விண்ணப்பிக்கும் முன் அதை உயர்த்த முயற்சி செய்யுங்கள். (வங்கிகள் பொதுவாக 700-750 மற்றும் அதற்கு மேற்பட்ட ஸ்கோரை எதிர்பார்க்கின்றன.)
ஆவணங்கள்: தேவையான அனைத்து ஆவணங்களையும் (PAN, ஆதார், முகவரிச் சான்று, வருமானச் சான்று/சம்பளச் சீட்டு) தயாராக அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.
3. துல்லியமான தனிப்பட்ட தகவல்கள் (Personal Details):
விண்ணப்பத்தின் மிக முக்கியப் பகுதி இதுதான். இந்த விவரங்களில் பிழை இருந்தால், வங்கிகள் உங்கள் விண்ணப்பத்தை உடனடியாக நிராகரிக்க வாய்ப்புள்ளது.
பெயர் மற்றும் பிறந்த தேதி: உங்கள் PAN கார்டில் இருப்பது போலவே உங்கள் முழுப் பெயரையும், பிறந்த தேதியையும் தட்டச்சு செய்யுங்கள். ஒரு எழுத்து பிழை கூட இருக்கக்கூடாது.
முகவரி மற்றும் போன் நம்பர்: உங்கள் முகவரிச் சான்றில் (ஆதார்/ஓட்டுநர் உரிமம்) உள்ள சரியான முகவரியை நிரப்பவும். அத்துடன், வங்கித் தொடர்புக்காக நீங்கள் நிரந்தரமாகப் பயன்படுத்தும் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிடவும்.
திருமண நிலை: திருமணமானவர் (Married) அல்லது திருமணம் ஆகாதவர் (Single) போன்ற தகவல்களை சரியாகக் குறிப்பிடவும்.
4. வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு விவரங்கள்:
வங்கி உங்களுக்கு கிரெடிட் கார்டு (credit card) வழங்குவதற்கு முன், கடனைத் திருப்பிச் செலுத்தும் உங்கள் திறனைப் பார்க்கவே இந்தப் பகுதியைப் பூர்த்தி செய்யச் சொல்கிறது.
நீங்கள் சம்பளம் பெறுபவரா (Salaried) அல்லது சுயதொழில் செய்பவரா (Self-Employed) என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவும். உங்கள் நிறுவனத்தின் பெயரைச் சுருக்காமல், அதிகாரப்பூர்வமாக உள்ளபடி குறிப்பிடவும். நீங்கள் ஒரு நிறுவனத்தில் ஆறு மாதங்களுக்கும் குறைவாக வேலை செய்திருந்தால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, பணியில் நிலைத்தன்மை முக்கியம்.
சம்பளச் சீட்டில் உள்ள சரியான மாத அல்லது ஆண்டு வருமானத்தை நிரப்பவும். ஊதியத்தை தவறாக காட்டினால், சமர்ப்பிக்கும் ஆவணங்களுடன் ஒத்துப்போகாமல் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
5. இறுதிச் சரிபார்ப்பும் சமர்ப்பித்தலும்:
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்த பிறகு, சமர்ப்பிப்பதற்கு முன் இதைச் நீங்கள் வழங்கிய அனைத்து விவரங்களும் (பெயர், பிறந்த தேதி, PAN எண், வருமானம்) உங்கள் ஆவணங்களுடன் 100% ஒத்துப்போகிறதா என்பதை இரண்டு முறை சரிபார்க்கவும்.
நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தால், ஆவணங்களைச் சரியான வடிவத்தில் (PDF/JPG) தெளிவாக ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யுங்கள். ஆவணங்கள் மங்கலாக இருக்கக்கூடாது.
நீங்கள் ஏற்கெனவே அதிக இ.எம்.ஐ-கள் அல்லது கடன்களை வைத்திருந்தால், அவற்றை மறைக்க முயற்சி செய்யாதீர்கள். வங்கிகள் உங்கள் கடன்-வருமான விகிதத்தை (DTI Ratio) சரிபார்க்கும்.
6. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிப்பது:
வட்டி விகிதங்கள், ஆண்டு கட்டணங்கள், வெளிநாட்டு பரிவர்த்தனை கட்டணங்கள் மற்றும் பிற மறைக்கப்பட்ட செலவுகள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் குறிப்பிட்டுள்ள சிறிய எழுத்துக்களைப் புறக்கணிக்காதீர்கள். கட்டணங்கள் எவ்வாறு தள்ளுபடி செய்யப்படும், வெகுமதிகள் எவ்வாறு சம்பாதிக்கப்பட்டுப் பெறப்படும் மற்றும் தவணை தவறினால் என்ன ஆகும் என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ளுங்கள். இல்லையெனில், நீங்கள் எதிர்பார்த்ததை விட அந்தக் கார்டு மிகவும் செலவுமிக்கதாக மாறலாம்.
7. விரைவாக பல கார்டுகளுக்கு விண்ணப்பிப்பது:
அதிக விண்ணப்பங்கள் சமர்ப்பித்தால் அங்கீகாரம் கிடைக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை இதற்கு நேர்மாறானது. குறுகிய காலத்தில் நீங்கள் பல முறை விண்ணப்பிக்கும்போது, அது உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கலாம்.
நீங்கள் சமீபத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டால், கொஞ்ச காலம் காத்திருந்து (குறைந்தது 6 மாதங்கள்), உங்கள் வருமானம் அல்லது கடன் ஸ்கோரை மேம்படுத்திய பின் மீண்டும் விண்ணப்பிக்கவும்.
கிரெடிட் கார்டு (credit card) விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்குப் பெரும்பாலும் துல்லியமற்ற அல்லது முரண்பாடான தகவல்களே காரணம். இந்த எளிய படிகளைப் பின்பற்றி, துல்லியமான தகவல்களுடன் உங்கள் படிவத்தைப் பூர்த்தி செய்தால், உங்கள் கிரெடிட் கார்டு விண்ணப்பம் முதல் முயற்சியிலேயே அங்கீகரிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.