

ஒரு மனிதன் கடனாளி என்ற நிலையிலிருந்து எவ்வாறு பணக்காரன் என்ற நிலையை அடைய முடியுமென்பதற்கு அமெரிக்காவின் பிரபல நிதி மேலாண்மை நிபுணர் டேவ் ராம்சே அவர்கள் 7 அடிகளையுடைய குழந்தை அடிகள் (Baby steps) நிதி திட்டமிடலைக் குறிப்பிடுகிறார். நடையில் எவ்வாறு குழந்தையானது முதலில் ததகா பிதகாவென நடந்து, பின்னர் தள்ளாடி நடந்து, பின்னர் வீறு கொண்டு நடைபோடுகிறதோ அவ்வாறே, இந்த 7 குழந்தை அடிகளைப் பின்பற்றுவதன் மூலம், நிதி நிலைமையில் கடனாளியாக உள்ள மனிதன் அடி அடியாக நடந்து பணக்கார மனிதனாக வீறு கொண்டு நடக்கமுடியும்.
இந்த 7 அடிகளையுடைய குழந்தை அடிகள் நிதி திட்டமிடல், ஒரு மனிதனுக்கு பணக்காரன் ஆவதற்கான வழிமுறையைக் காட்டுகின்றன. கடனில் மாட்டியுள்ள மனிதன் இந்த குழந்தை அடிகளைப் பின்பற்றி, கடனிலிருந்து மீண்டு, பணக்காரன் ஆக முடியும்.
இந்த 7 குழந்தை அடிகள் நிதி திட்டமிடலை டேவ் ராம்சே அவர்கள் தனது பிரபலமான தனிமனித நிதி சார்ந்த புத்தகமான த டோட்டல் மனி மேக் ஓவர் (The Total money make over) என்ற புத்தகத்தில் விவரிக்கிறார். அவர் அதில் சிக்கனமான வாழ்க்கை வாழ்ந்து கடன்களை அடைத்து முதலீடு செய்வதன் மூலம் பணக்காரன் ஆக முடியுமென்பதை விவரிக்கிறார். அவர் சிக்கன வாழ்க்கை வாழ்ந்து பணக்காரனாக முயலும் நபர்களைக் குறித்து பின்வருமாறு கூறுகிறார்.
If you will live like no one else, later you can live like no one else. ― Dave Ramsey
நீங்கள் மற்றவர்களைப்போல் வாழாமல் இருந்தால், பின்னர், யாராலும் வாழ முடியாத வாழ்க்கையை உங்களால் வாழ முடியும் - டேவ் ராம்சே
அதாவது, பணக்காரன் ஆவதற்கு, சிக்கன மெனக்கெடல்கள், முதலீட்டு முனைப்புகள், தேவையற்ற செலவுகளின் தியாகங்கள் உள்ளன. அவற்றை செய்த மனிதனே, பணக்காரன் ஆக முடியும். அவ்வாறு செய்யும் மனிதன், மற்ற சாதாரண மக்களைப் போல் வாழ மாட்டான். ஆனால், அவன் பிற்காலத்தில், அந்த சாதாரண மக்களால் வாழ இயலாத வாழ்க்கையை வாழ்வான். ஏனென்றால், அதற்கான அஸ்திவாரத்தை ஏற்கனவே, அவன் போட்டுவிட்டான் என்கிறார் டேவ் ராம்சே.
டேவ் ராம்சே குறிப்பிடும் 7 குழந்தை அடிகள் நிதி திட்டமிடல் பின்வருமாறு;
அவசரத் தேவைக்காக $1000 ஒதுக்குங்கள்
எல்லா கடன்களையும் அடைத்து விடுங்கள், வீட்டுக்கடன் தவிர
3 முதல் 6 மாதங்களுக்கான பணத்தை சேமித்து வையுங்கள்
15% சம்பாத்தியத்தை ஓய்வுகாலத்திற்காக முதலீடு செய்யுங்கள்
குழந்தைகளின் எதிர்கால படிப்பிற்காக பணம் முதலீடு செய்யுங்கள்
வீட்டுக்கடனை சீக்கிரம் அடைத்து விடுங்கள்
பணக்காரர் ஆகிவிடுங்கள், மேலும் தானதருமங்கள் செய்யுங்கள்
இவற்றைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
1. அவசரத் தேவைக்காக $1000 ஒதுக்குங்கள் : இங்கு $1000 என்பதை, இந்திய வாழ்க்கைத் தரம் படி, ரூபாய். 10000 என்று வைத்துக் கொள்ளலாம். இதை அவசரத்தேவைக்காக ஒதுக்க வேண்டும். திடீர் உடல்நல குறைவு, திடீர் வாகன குளறுபடி, திடீர் வீடு மராமத்து வேலைகள் போன்ற அவசரத்தேவை சமயங்களில், கடன் வாங்குவதை தவிர்க்க இது உதவும். கடன் நம்முடைய பணக்காரர் ஆகும் இலக்கை தடுக்கும் பெரிய சுவர்.
2.எல்லா கடன்களையும் அடைத்து விடுங்கள், வீட்டுக்கடன் தவிர: கடன் என்பது அன்பை மட்டுமல்ல, நிம்மதி, மதிப்பு, கௌரவம் என பல்வேறு விஷயங்களை முறிக்கவல்லது. எனவே, எல்லா கடன்களையும் வரிசைப்படுத்தி, சிறிய கடன் முதல், பெரிய கடன் வரை, வரிசையாக கடன் பனிப்பந்து முறையில் அடைத்து விட வேண்டும். வீட்டுக்கடன் மட்டும் விதி விலக்கு. வீட்டுக்கடன் பெரிய கடன்;அத்தியாவசியமான தேவை;வரிவிலக்கு உண்டு;வட்டிவிகிதம் குறைவு. எனவே அதை பின்வரும் மற்றொரு குழந்தை அடியில் அடைத்துவிடலாம்.
3.3 முதல் 6 மாதங்களுக்கான பணத்தை சேமித்து வையுங்கள்: முதல் குழந்தை அடியில் பார்த்த அவசரத்தேவை பணம் ரூபாய். 10000 என்பது, தற்காலிகமானதே. நிரந்தர அவசரத்தேவை நிதி என்பது 3 முதல் 6 மாதங்களுக்கான செலவுகளுக்கான பணத்தை சேமித்து வைத்திருப்பது. இது எளிதாக தேவைக்கு உபயோகப்படுத்தும் வகையில் வங்கியில் சேமிப்புக் கணக்கில் இருக்க வேண்டும். குடும்பத் தலைவரின் வேலை இழப்பு, அல்லது பணிக்கு சில மாதம் செல்ல முடியாத நிலை, திடீர் மருத்துவ செலவு, திடீர் தேவைகளுக்கு, இந்தத் தொகை உதவும். கடன் வாங்குவதைத் தவிர்க்க உதவும். அடி இரண்டாவதில் ஏற்கனவே, வீட்டுக்கடனைத் தவிர மற்ற கடன்களை அடைத்துவிட்டோம். மேலும் கடன் வாங்காமலிருக்க, இந்தக் குழந்தை அடி உதவும்.
4.15% சம்பாத்தியத்தை ஓய்வுகாலத்திற்காக முதலீடு செய்யுங்கள்: சம்பாதித்த பணத்தில் 15% ஒதுக்கி, பங்குகள் மற்றும் கடன்பத்திரங்கள் கலந்த பரவலான முறையில் முதலீடு செய்ய வேண்டும். அந்த முதலீடு அஞ்சலக அல்லது வங்கி வைப்பு சேமிப்பு கணக்காகவோ, பங்குச்சந்தை சார்ந்த அல்லது கடன் பத்திரங்கள் சார்ந்த பரஸ்பர நிதி முதலீடாகவோ இருக்கலாம். இந்தச் சேமிப்பு நன்கு பெருகி, ஓய்வு காலத்தில், யார் கையையும் ஏந்தாமல், தன்மான வாழ்க்கை வாழ உதவும்.
5.குழந்தைகளின் எதிர்கால படிப்பிற்காக பணம் முதலீடு செய்யுங்கள்: குழந்தைகளின் படிப்புதான் அவர்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய முதலீடு. அவர்களின் படிப்பு அவர்களின் எதிர்காலத்திற்கு அஸ்திவாரம். பணவீக்கத்தின் காரணமாக, மேற்படிப்பிற்கான செலவு வருடா வருடம் கூடி வருகிறது. எனவே, குழந்தைகளின் எதிர்கால படிப்புத் தேவைக்காக, பொது சேமநல நிதி, சுகன்யா சம்ருத்தி திட்டம் அல்லது பங்குச்சந்தை மற்றும் கடன்பத்திரங்கள் சார்ந்த பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம். குழந்தைகள் 18 வயது மேல்படிப்பிற்காக இந்த அடியில் சேமிக்கத் தொடங்கவேண்டும்.
6.வீட்டுக்கடனை சீக்கிரம் அடைத்து விடுங்கள்: குழந்தை அடிகள் 4, 5 இல் முதலீடு செய்தது போக எஞ்சியுள்ள பணத்தைக் கொண்டு, வீட்டுக் கடனை சீக்கிரம் அடைத்து விட வேண்டும். கடன் என்பது எந்த வகையிலும் நம்மை மீண்டும் தொடாதவாறு, திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும். கடன் நமது அமைதியைக் குலைக்க வல்லது.
7.பணக்காரர் ஆகிவிடுங்கள், மேலும் தானதருமங்கள் செய்யுங்கள்: இப்போது எந்தக் கடனும் இல்லாமல், நிறைய பணத்தை நம்மால் முதலீடு செய்ய முடியும். எவ்வளவு முதலீடு செய்ய முடியுமோ, அவ்வளவு செய்ய பார்க்க வேண்டும். முதலீடுகள் மூலம் பணத்தைப் பெருக்க முடியும். பணக்காரர் ஆகிவிடுவோம். நமது பணத்தைக் கொண்டு சமூகத்திற்கு நிறைய தான தருமங்கள் செய்யவேண்டும். சமூகத்தை மேம்படுத்த நம்மால் முடிந்த உதவி செய்ய வேண்டும். நம் பின்னால், ஒரு பாரம்பரியத்தை, அறக்கட்டளையை விட்டுச் செல்ல வேண்டும்.
கடனில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் டேவ் ராம்சே அவர்களின் இந்த 7 குழந்தை அடிகளைக் கண்டு, நாம் எந்த அடியில் உள்ளோம் என்று கண்டு, பணக்காரர் ஆவதற்கான பயணத்தை தொடங்கவேண்டும். பணக்காரர் என்ற இலக்கை அடையவேண்டும்.