

இந்தியாவில் இருந்துகொண்டே அமெரிக்கப் பங்குகளில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா? அவ்வாறு முதலீடு செய்வதற்கு உதவும் பாரத ரிசர்வ் வங்கியின் எல்ஆர்எஸ் திட்டம் பற்றி தங்களுக்குத் தெரியுமா? அதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
எல்ஆர்எஸ் திட்டம் என்றால் என்ன?
எல்ஆர்எஸ் என்பது தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டம் (Liberalised Remittance Scheme - LRS) என்பது 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி, பாரத ரிசர்வ் வங்கியால் 1999 ஆம் ஆண்டின் வெளிநாட்டு பரிவர்த்தனை மேலாண்மை சட்டத்தின் கீழ் (Foreign Exchange Management Act (FEMA)) அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் 25,000 டாலர்கள் என இருந்தது, படிப்படியாக உயர்த்தப்பட்டு 2,50,000 டாலர்கள் என தற்போது உள்ளது.
இதன் மூலம் ஒரு நிதியாண்டில் 2,50,000 டாலர்கள் வரை வெளிநாடுகளுக்கு பணத்தை அனுப்ப முடியும். இவ்வாறு பணத்தை அனுப்புவது இரண்டு வகைகளில் வரலாம்.
1) செலவுகளுக்காக (Current Account)
2) முதலீடுகளுக்காக (Capital Account)
இந்த பணம் அனுப்புதல் பான் எண்ணைக்கொண்டு, தனிநபர் அளவில் கணக்கிடப்படுகிறது. எனவே, ஒரு குடும்பத்தில் இரண்டு நபர்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் இரண்டு நபர்களுக்கு தனித்தனியாக 2,50,000 டாலர்கள் கணக்கில் கொள்ளப்படும்.
ஏன் எல்ஆர்எஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது?
வெளிநாட்டு பயணம், வெளிநாட்டில் குழந்தைகளின் மேல் படிப்பு, வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை, வெளிநாட்டில் முதலீடு, வெளிநாட்டில் நன்கொடை போன்ற நியாயமான காரணங்களுக்கு வெளிநாடு களுக்கு பணத்தை அனுப்புவது எளிதாக்கப்பட்டது. 2,50,000 டாலர்களைத்தாண்டி பணம் அனுப்ப தேவைப்பட்டால் மட்டுமே பாரத ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெற வேண்டும்.
எல்ஆர்எஸ் திட்டம் மூலம் எத்தகைய பணம் அனுப்புதல்கள் செய்ய முடியும் ?
எல்ஆர்எஸ் திட்டத்தில் சில வகையான பணம் அனுப்புதல்கள் அனுமதிக்கப்படுகின்றன.
கல்வி சம்பந்தமாக - உறைவிடம், கல்விக் கட்டணம் போன்றவை.
பயணத்திற்காக - தொழில் மற்றும் தனிப்பட்ட பயணம், மருத்துவ சிகிச்சைகளுக்காக - வெளிநாட்டு சிகிச்சை மற்றும் மருத்துவம் சார்ந்த பராமரிப்பு,
நன்கொடை மற்றும் பரிசுகளுக்காக - நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு கொடுக்கப்படும் நன்கொடை மற்றும் பரிசுகள் குடும்பத்தைப் பராமரிப்பதற்காக - நெருங்கிய உறவினர்களுக்குப் பணம் கொடுத்து உதவுவது.
சொத்துக்களை வாங்குவதற்காக - வெளிநாட்டுப் பங்குகள், பரஸ்பர நிதிகள், நிலம் போன்றவற்றை வாங்குவது.
கடன்களை வழங்குவதற்காக - வெளிநாடு வாழ் இந்தியர்களான நெருங்கிய உறவினர்களுக்கு கடன் வழங்குவது.
சில வகையான பணம் அனுப்புதல்கள் அனுமதிக்கப் படவில்லை.
யூக வணிகம் (Speculative Trading)- விளிம்பு வணிகம் (Margin Trading) அல்லது அந்நிய செலவாணி வணிகம் (Forex Trading) போன்றவை தடை செய்யப்பட்ட வகைகளில் பணத்தை அனுப்புவது - லாட்டரி சீட்டு வாங்குவது, குலுக்கல்களில் பங்கு பெறுவது (Sweepstakes), தடை செய்யப்பட்ட சஞ்சிகைகள்(magazines) வாங்குவது சில வகையான நிதி முதலீடுகள் - இந்திய நிறுவனங்களால் விநியோகிக் கப்பட்ட வெளிநாட்டு பணம் மாற்றக்கூடிய கடன் பத்திரங்களை(Foreign Currency Convertible Bonds - FCCB) இரண்டாம் நபர் சந்தையில் (Secondary market) வாங்குவது.
இந்தியர்களுக்கிடையே பணம் பரிசாக கொடுப்பது - இன்னொரு இந்தியருக்கு வெளிநாட்டு பணத்தை பரிசாக கொடுப்பது.
அபாயகரமான அதிகார வரம்புகளில் முதலீடு செய்வது- நிதி செயல் வேலைக்குழுவால் (Finance Action Task Force - FATF) கண்டறியப்பட்ட அபாயகரமான அதிகார வரம்புகளை கொண்ட அமைப்புகளில் (உதாரணமாக, வடக்கு கொரியா, ஈரான் போன்ற நாடுகள்) முதலீடு செய்வது.
தடை விதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள்- பாரத ரிசர்வ் வங்கியால் தீவிரவாதத்துடன் தொடர்பு செய்யப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களில் முதலீடு செய்வது
எல்ஆர்எஸ் திட்டம் மூலம் எவ்வாறு அமெரிக்க பங்குகள் வாங்குவது?
உங்களது வங்கி பாரத ரிசர்வ் வங்கியின் வெளிநாட்டுக்கு பணம் அனுப்ப உரிமை பெற்ற வகையில் வருகிறதா (Category - I Authorized Dealer(AD) Bank) என்று பார்க்க வேண்டும். உங்கள் வங்கியில் இத்தகைய வசதி உள்ளதா என்பதை அறிய, வங்கியின் இணையதளத்தில் வெளிநாட்டு பரிவர்த்தனை பகுதிக்கு செல்லவேண்டும் அல்லது வங்கியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். வங்கியின் மூலமே இவ்வாறு பணத்தை அனுப்ப முடியும்.
அமெரிக்காவின் பங்குகளை எந்த தரகு நிறுவனத்தின் மூலம் வாங்குகிறீர்களோ அவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களது வங்கி விபரங்களைப் பெற வேண்டும்.
படிவம் A2 பூர்த்தி செய்யவேண்டும். எந்த காரணத்திற்காக வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புகிறோம் என்பதைத் தெரிவிக்கவேண்டும்.
உங்களது பான் அட்டையை சமர்ப்பித்து, கேஒய்சி விபரங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
10 இலட்சத்திற்கு ரூபாய் மேலாக ஒரு வருடத்திற்கு பணத்தை அனுப்பினால் தோற்றுவாயில் வசூலிக்கப்படும் வரி (TCS - Tax Collected at Source) கணக்கிடப்பட்டு, அது அனுப்பப்படும் பணத்திலிருந்து கழித்துக் கொள்ளப்படும். மேலும், வங்கியின் மற்ற கட்டணங்கள் போன்றவையும் கழித்துக் கொள்ளப்படும். இந்த வரி எந்த வகையான பணம் அனுப்புதல் என்பதற்கு ஏற்றவாறு மாறுபடும்.
கல்விக்காக மற்றும் மருத்துவ செலவுகளுக்கு - 5%
மற்ற எல்லா காரணங்களுக்காக(பயணம், முதலீடு போன்றவை) - 20%
நிதியாண்டின் இறுதியில் வருமானவரி தாக்கல் செய்யும்போது , டிசிஎஸ் வரி அதிகமாக வசூலிக்கப்பட்டு இருந்தால் அதனை மறுபடியும் கோரி பெற்றுக் கொள்ளலாம்.
வங்கி உங்களது விபரங்களைச் சரிபார்த்து பணத்தை அமெரிக்க தரகு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும். அந்தப் பணத்தைக் கொண்டு, நீங்கள் அமெரிக்க பங்குகளை வாங்கிக் கொள்ளலாம்.
எதிர்காலத்தில் இந்த பங்குகளின் வாயிலாக கிடைக்கும் ஈவுத்தொகை (Dividend) , மூலதன ஆதாயம்(Capital Gains) போன்றவற்றை நீங்கள் வருமான வரி தாக்கலில் உலக வருமானம் (Global Income) என்று குறிப்பிட்டு நீங்கள் இந்தியாவில் வரி செலுத்தவேண்டும்.
எல்ஆர்எஸ் திட்டம் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதை எளிதாக்குகிறது. இதன் மூலம் நாம் நமது முதலீட்டை இந்தியாவைத்தாண்டி பரவலாக்குவது எளிதாகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: