

இந்தியப் பங்குச்சந்தையில் சமீப காலமாகப் பொதுப்பங்கு வெளியீடு (IPO – Initial Public Offering) முதலீட்டில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதே இதற்கு முக்கியக் காரணம்.
ஐபிஓக்களில் முக்கிய அங்கம் வகிப்பது சாம்பல் சந்தையில் (Grey Market) நிலவும் ஜிஎம்பி (GMP – Grey Market Premium). இது அதிகாரப்பூர்வமற்ற சந்தைக் கணிப்பு மட்டுமே. ஜிஎம்பி அப்படியே லிஸ்டிங் நாள் லாபமாக மாறும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. சில சமயம் கூடவோ குறையவோ செய்யலாம். இருப்பினும், லிஸ்டிங் நாளில் எவ்வளவு விலை உயர்வு இருக்கக்கூடும் என்பதற்கான தோராயமான சந்தை எதிர்பார்ப்பை இது காட்டுகிறது.
வழக்கமாக லிஸ்டிங் கெய்னுக்காக IPO விண்ணப்பிப்பவர்கள் 20% விலை உயர்வு இருந்தாலே நல்ல லாபம் அடைவார்கள். ₹15,000 முதலீடு செய்து 10 - 15 நாட்களுக்குள் ₹3,000 லாபம் அடைவது என்பது, பொதுவாக வேறெங்கும் கிடைக்காத பெரிய வாய்ப்பு. வழக்கமான பங்குச்சந்தை முதலீடுகளில் இதுபோல 20% லாபம் கிடைப்பதற்கே நீண்ட காலம் ஆகும்.
இப்படியான சூழலில் சில நிறுவன ஐபிஓ-க்கள் 30 – 50% ஜிஎம்பிகூடப் பெறுவதுண்டு. அந்த அளவு லாபம் கிடைத்தால் அது அமோக மகசூல் என்று சொல்லலாம்.
முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள டான்போ இமேஜிங் இந்தியா.
அக்டோபர் 15, 2026 ல் துவங்கி, அக்டோபர் 19, 2026 அன்று முடிய உள்ள டான்போ இமேஜிங் இந்தியா (Tonbo Imaging India Limited) நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு, முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 12-10-26 அன்று, முதல் ஜிஎம்பி வெளியான அன்றே 53.57% அடைந்திருந்தது. 13-ம் தேதியன்று 65.71% பெற்று, நல்ல லாப அளவு எனப்படும் 20%-த்தின் மூன்று மடங்குக்கும் மேல் எட்டியது. நேற்று 14-10-26 அன்று 71.43% எனும் உச்ச அளவை எட்டி மலைக்கச் செய்திருக்கிறது.
இந்த அளவு இறுதி வரை நீடிக்குமா, லிஸ்டிங் நாளில் இவ்வளவு லாபம் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். எனினும், இப்போதைய இந்த பிரம்மாண்ட எதிர்பார்ப்புக்குப் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன, அதே நேரத்தில் முதலீட்டாளர்கள் இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய நிதி சார்ந்த நிதர்சனங்கள் யாவை என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
டான்போ இமேஜிங்: நிறுவனத்தின் பின்னணியும் வணிகமும்
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட டான்போ இமேஜிங் நிறுவனம், 2003-ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, 2012 முதல் பாதுகாப்புத் துறைத் தயாரிப்புகளில் முழுக் கவனம் செலுத்தி வருகிறது. இது பாதுகாப்புத் துறை (Defence System) மற்றும் விண்வெளித் துறைக்குத் தேவையான அதிநவீன சாதனங்களை வடிவமைத்து உற்பத்தி செய்யும் அசல் உபகரண உற்பத்தியாளர் (OEM) ஆகும்.
குறிப்பாக, வெப்பக் கதிர்வீச்சைக் கொண்டு இருட்டிலும் இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறியும் தெர்மல் இமேஜிங் (Thermal Imaging), எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் (Electro-optics), AI-அடிப்படையிலான விஷன் சிஸ்டம்கள், ஏவுகணைத் தேடுசாதனங்கள் (Missile Seekers) மற்றும் ட்ரோன் கண்காணிப்பு சாதனங்களைத் தயாரிக்கிறது. இந்திய ராணுவம் மட்டுமின்றி, 2026 ஜூன் 30 நிலவரப்படி 24 நாடுகளில் 28,000-க்கும் மேற்பட்ட சாதனங்களை இந்நிறுவனம் நிறுவியுள்ளது.
மலைக்க வைக்கும் 71% ஜிஎம்பி: பிரதான காரணங்கள்
சந்தையில் இந்த அளவிற்கு ஜிஎம்பி (GMP) உயர்வதற்குப் பல முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவதாக, 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டத்தின் மூலம் உள்நாட்டுப் பாதுகாப்புத் தயாரிப்புகளுக்கு இந்திய அரசு அளித்து வரும் மிகப்பெரிய ஆதரவு, இத்துறை சார்ந்த பங்குகள் மீது பெரும் கவனத்தை உருவாக்கியுள்ளது.
இரண்டாவதாக, வழக்கமான உதிரிபாகத் தயாரிப்பில் ஈடுபடாமல், சொந்த வடிவமைப்பு மற்றும் அறிவுசார் சொத்து அடிப்படையிலான அதிநவீனத் தொழில் நுட்பத்தில் இந்நிறுவனம் செயல்படுவது இதன் பலம். ஃப்ராஸ்ட் & சல்லிவன் (Frost & Sullivan) அறிக்கையின்படி, 2024–2026 நிதியாண்டுகளில் இந்தியாவின் தெர்மல் இமேஜிங் ஏற்றுமதியில் (எண்ணிக்கை அடிப்படையில்) சுமார் 94% இந்நிறுவனத்தினுடையது.
மூன்றாவதாக, பங்குச்சந்தையில் ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள டேட்டா பேட்டர்ன்ஸ், ஜென் டெக்னாலஜிஸ் போன்ற பாதுகாப்புத் துறைப் பங்குகள் மிக அதிக மதிப்பீட்டில் வர்த்தகமாவதால், அதே துறையைச் சேர்ந்த டான்போ இமேஜிங் நிறுவனத்திற்கும் வலுவான தேவை உருவாகியுள்ளது.
ஐபிஓ கட்டமைப்பு: முதலீட்டாளர்கள் அறிய வேண்டிய முக்கிய அம்சம்
டான்போ இமேஜிங் ஐபிஓ-வின் மொத்த மதிப்பு ரூ.852.18 கோடி (சுமார் 1.22 கோடி பங்குகள்). எனினும், இந்த ஐபிஓ முழுக்க முழுக்க 'ஆஃபர் ஃபார் சேல்' (Offer For Sale - OFS) வகையைச் சேர்ந்தது. அதாவது, இதில் புதிய பங்குகள் (Fresh Issue) எதுவுமே வெளியிடப்படவில்லை. இதனால், ஐபிஓ மூலம் திரட்டப்படும் ரூ.852 கோடியில் ஒரு ரூபாய்கூட டான்போ இமேஜிங் நிறுவனத்தின் கைக்குச் செல்லாது.
ஆரம்பகால முதலீட்டாளர்களும் விளம்பரதாரர்களும் தங்களது பங்குகளின் ஒரு பகுதியை விற்றுப் பணமாக்கவே இந்த நிதி அவர்களுக்குச் செல்கிறது. எனவே, இந்த நிதியானது நிறுவனத்தின் எதிர்காலத் தொழில் விரிவாக்கத்திற்கோ அல்லது கடன் குறைப்பிற்கோ பயன்படாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
கடந்த கால நிதிச் செயல்பாடும் கடன் நிலவரமும்
நிறுவனத்தின் நிதி நிலைமையை ஆராயும்போது, சில மாறுபட்ட தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது. கடந்த 2025 நிதியாண்டில் ரூ.474.39 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் (Total Income), 2026 நிதியாண்டில் ரூ.369.94 கோடியாகக் குறைந்துள்ளது.
அதேபோல, நிகர லாபமும் (PAT) ரூ.72.76 கோடியிலிருந்து ரூ.50.88 கோடியாகச் சரிவைச் சந்தித்துள்ளது. மேலும், நடப்பு 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஜூன் 2026) நிறுவனம் ரூ.17.74 கோடி நிகர இழப்பைப் பதிவு செய்துள்ளது.
கடனைப் பொறுத்தவரை, 2024 நிதியாண்டில் ரூ.96 கோடியாக இருந்த மொத்தக் கடன், 2025-ல் ரூ.78.14 கோடியாகக் குறைந்து, பின்னர் 2026 நிதியாண்டில் ரூ.116.06 கோடியாகவும், ஜூன் 2026 நிலவரப்படி ரூ.129.72 கோடியாகவும் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.
பங்கின் மதிப்பீடு (Valuation) மற்றும் சந்தை அபாயங்கள்
தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.665–700 விலை வரம்பின் உச்சமான ரூ.700 அடிப்படையில், நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.4,010 கோடி; இதன் பி/இ (P/E) விகிதம் சுமார் 79x (78.83x) வருகிறது. கடந்த நிதியாண்டில் வருவாய் மற்றும் லாபம் சரிவடைந்து, முதல் காலாண்டில் இழப்பும் பதிவாகியுள்ள நிலையில், இந்த மதிப்பீடு விலை உயர்ந்ததாகவே (Expensive) உள்ளது. பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை, அரசின் கொள்முதல் ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் சர்வதேச விநியோகச் சங்கிலி சார்ந்த சிக்கல்கள் நிறுவனத்தின் வருவாயைப் பாதிக்கக்கூடிய காரணிகளாகும். எதிர்காலத்தில் நிறுவனம் தனது லாப வரம்பை வேகமாக உயர்த்தத் தவறினால், பங்கின் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
முதலீட்டாளர்களுக்கான நிறைவுப் பார்வை
டான்போ இமேஜிங் நிறுவனம் அதிநவீனத் தொழில்நுட்பக் கட்டமைப்பு கொண்ட முன்னணிப் பாதுகாப்புத் துறை நிறுவனம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சாம்பல் சந்தையில் நிலவும் 71% ஜிஎம்பி என்பது தற்போதைய சந்தை மனநிலையின் அடிப்படையில் கிடைக்கக்கூடிய குறுகிய கால லிஸ்டிங் லாபத்திற்கான (Listing Gain) சாத்தியக்கூறைக் காட்டுகிறது.
அதேவேளையில், 100% ஆஃபர் ஃபார் சேல், சமீபத்திய நிதிச் சரிவு மற்றும் அதிகப்படியான பி/இ மதிப்பீடு ஆகியவை நீண்டகால முதலீட்டிற்கு எச்சரிக்கையைத் தருகின்றன.
பங்குச்சந்தை முதலீடுகள் எப்போதும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. சாம்பல் சந்தை பிரீமியம் (GMP) என்பது ஒரு தற்காலிகக் கணிப்பே தவிர, அதுவே உறுதியான லாபத்திற்கு உத்தரவாதம் ஆகாது. எனவே, முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் நிதி அறிக்கைகள், அபாயங்கள் மற்றும் தங்களின் தனிப்பட்ட நிதி இலக்குகளை கவனமாகப் பரிசீலித்து, சுய விருப்பத்தின் பேரில் மட்டுமே முதலீட்டு முடிவுகளை எடுப்பது பாதுகாப்பானது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: