பிபிஎஃப் (PPF) முதிர்வடைந்ததா? அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை உடனே தெரிந்துகொள்ளுங்கள்!

15 ஆண்டுகள் முடிந்தபின் பிபிஎஃப் கணக்கை நீட்டிப்பது அல்லது பணம் எடுப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி.
முதலீட்டுத் திட்டம்
முதலீட்டுத் திட்டம்
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 7 சிறுகதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு நூல், ஒரு கட்டுரை நூல், ஒரு ஆய்வுக் கட்டுரை நூல், 5 சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதை மற்றும் நாவல் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். பொருளாதாரம் உட்பட பல்வேறு பிரிவுகளில் இவரது கட்டுரைகள் மற்றும் சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் கல்கி ஆன்லைனில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

Updated on: 

ஒரு குடும்பத்தின் எதிர்காலத்துக்காக செய்யப்படும் சேமிப்புகளில் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட தேவைகள், நோக்கங்கள், பயன்கள் உள்ளன. குழந்தைகளின் உயர்கல்வி, மகளின் திருமணம், ஓய்வுக்காலச் செலவுகள், எதிர்பாராத மருத்துவத் தேவைகள் எனப் பல்வேறு எதிர்காலத் தேவைகளுக்காகவே பலர் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கிச் சேமிக்கிறார்கள்.

நீண்டகாலப் பாதுகாப்பான சேமிப்புக்கு இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund – PPF) முதலீட்டுத் திட்டம். 15 ஆண்டுகள் சிறுகச் சிறுகச் சேமித்து முதிர்வுத் தொகையைப் பெறுவது இதன் அடிப்படை அம்சம்.

மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் சிறிய தொகையை ஒதுக்கி, 15 ஆண்டுகள் பொறுமையாகச் சேமித்த பிறகு கிடைக்கும் முதிர்வுத்தொகை அவர்களுக்கு ஒரு பெரிய நிதி ஆதாரமாக அமைகிறது. அப்படிப்பட்ட சேமிப்பு முதிர்வடையும்போது, அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி எழுவது இயல்பானது.

15 ஆண்டுகள் முடிந்தவுடன் கணக்கை மூடித்தான் ஆக வேண்டும் என்பதில்லை. முதிர்வுக்குப் பிறகு கணக்கை ஐந்தாண்டுத் தொகுதிகளாக, தேவைப்பட்டால் பலமுறை நீட்டித்துக்கொள்ளலாம். இதில் புதிய பணத்தைச் செலுத்தித் தொடர்வது, புதிய பணம் செலுத்தாமல் கணக்கைத் தொடர்வது என இரண்டு வழிகள் இருக்கின்றன.

முதலில் முதிர்வுக் காலத்தைக் கவனியுங்கள்

PPF கணக்கின் முதிர்வுக் காலம் என்பது கணக்கு தொடங்கிய தேதியிலிருந்து சரியாக 15 ஆண்டுகள் அல்ல. கணக்கு தொடங்கப்பட்ட நிதியாண்டின் முடிவிலிருந்து 15 முழுமையான நிதியாண்டுகள் கணக்கிடப்படுகின்றன. உதாரணமாக, 2011-12 நிதியாண்டில் கணக்கைத் தொடங்கியிருந்தால், 2012 மார்ச் 31-ஐ அடிப்படையாகக் கொண்டு 15 ஆண்டுகள் கணக்கிடப்படும். எனவே, முதிர்வுத் தேதியைச் சரிபார்த்துக்கொள்வது அவசியம்.

முதலீட்டுத் திட்டம் - PPF tax benefits
முதலீட்டுத் திட்டம் - PPF tax benefitsImage credit: truedata.in

வழி 1: பணம் செலுத்தி மேலும் ஐந்தாண்டுகள் நீட்டிக்கலாம்

முதிர்வுக்குப் பிறகும் தொடர்ந்து சேமிக்க விரும்புபவர்கள், PPF கணக்கை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். இதற்கு கணக்கு முதிர்வடைந்த தேதியிலிருந்து ஓராண்டுக்குள் சம்பந்தப்பட்ட வங்கி அல்லது அஞ்சலகத்தில் Form 4 சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தினால், தொடர்ந்து புதிய முதலீடுகளைச் செய்யலாம். ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ரூ.500, அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை செலுத்தலாம். இவ்வாறு நீட்டிக்கப்படும் ஐந்தாண்டுக் காலத்திலும் கணக்கில் உள்ள தொகைக்கும் புதிய முதலீடுகளுக்கும் நடைமுறையில் அறிவிக்கப்படும் வட்டி விகிதத்தின்படி வட்டி கிடைக்கும்.

ஆனால், இந்த முறையில் பணம் எடுப்பதற்கு ஒரு கட்டுப்பாடு உள்ளது. ஐந்தாண்டு நீட்டிப்புக் காலத்தின் தொடக்கத்தில் கணக்கில் இருந்த இருப்புத் தொகையில் அதிகபட்சம் 60 சதவீதம் மட்டுமே அந்த ஐந்தாண்டுகளில் எடுக்க முடியும். இந்த 60% வரம்புக்குள், ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒரே ஒரு முறை மட்டுமே பணம் எடுக்க முடியும். இந்தத் தொகையை ஒரே தவணையாகவோ அல்லது வருடாந்திரத் தவணைகளாகவோ பெற்றுக் கொள்ளலாம்.

ஏற்கனவே 15 ஆண்டுகள் தொடர்ந்து சேமித்தவர்கள், அடுத்த ஐந்தாண்டுகளிலும் தங்களது சேமிப்பைத் தொடர விரும்பினால் இந்த வழியைப் பயன்படுத்தலாம். முதல் ஐந்தாண்டு நீட்டிப்பு முடிந்த பிறகும், மீண்டும் Form 4 சமர்ப்பித்து அடுத்த ஐந்தாண்டுத் தொகுதிக்கு நீட்டிக்கலாம். குறிப்பாக, உடனடியாகப் பணம் தேவைப்படாதவர்களுக்கும், எதிர்காலத்தில் ஒரு பெரிய நிதி ஆதாரத்தை உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வங்கியில் அதிக பணப்பரிவர்த்தனை செய்றீங்களா? வருமான வரி நோட்டீஸ் வராமல் தப்பிப்பது எப்படி?
முதலீட்டுத் திட்டம்

ஆனால், Form 4 மூலம் நீட்டிப்பதற்கான விருப்பத்தை ஒருமுறை அளித்துவிட்டால், பின்னர் அந்தக் கோரிக்கையைத் திரும்பப் பெறமுடியாது. எனவே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு முதலீட்டைத் தொடர முடியுமா என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டும்.

வழி 2: புதிய பணம் செலுத்தாமல் கணக்கைத் தொடரலாம்

தற்போதுள்ள PPF தொகையை அப்படியே வைத்திருந்து, அதற்கு வட்டி மட்டும் பெற்றுக்கொள்ள விரும்புபவர் களுக்கு இது ஏற்ற வழியாகும். இந்த முறையில் கூடுதலாக எந்தப் பணத்தையும் செலுத்த வேண்டியதில்லை. கணக்கில் ஏற்கெனவே உள்ள தொகைக்கு நடைமுறையில் அறிவிக்கப்படும் வட்டி தொடர்ந்து கிடைக்கும்.

இதன் முக்கியமான சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒரே ஒரு முறை, கணக்கில் உள்ள இருப்புத் தொகைக்குள் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அதாவது, பணத் தேவைக்கேற்ப பகுதியளவிலோ அல்லது முழுத் தொகையையும்கூட எடுத்துக்கொள்ள முடியும். இதற்கு ஐந்தாண்டுக் காலத்தில் 60 சதவீதம் என்ற உச்சவரம்பு கிடையாது.

ஓய்வுபெற்றவர்கள், நிலையான வருமானம் இல்லாதவர்கள் அல்லது குடும்பத்தின் முக்கியச் செலவுகளுக்குப் பணம் தேவைப்படுபவர்கள் இந்த வசதியைப் பரிசீலிக்கலாம்.

ஆனால், இங்கு ஒரு முக்கியமான விதி இருக்கிறது. முதிர்வுக்குப் பிறகு புதிய பணம் செலுத்தாமல் கணக்கைத் தொடர்ந்துவிட்டால், ஓராண்டுக்கு மேல் கழித்து மீண்டும் புதிய முதலீடுகளுடன் தொடரும் வாய்ப்பைத் தேர்ந்தெடுக்க முடியாது. எனவே, இந்த முடிவை அவசரப்படாமல் எடுக்கவேண்டும்.

எந்த வழி உங்களுக்கு ஏற்றது?

· தொடர்ந்து சேமிக்க விரும்பினால்: புதிய பணம் செலுத்தி ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.

· புதிய சேமிப்பு தேவையில்லை என்றால்: பணம் செலுத்தாமல் கணக்கைத் தொடரலாம்.

· பெரிய தொகை தேவைப்பட்டால்: முதிர்வின்போது முழுத் தொகையையும் எடுத்துக்கொள்ளலாம்.

· ஓய்வூதியத்திற்காகச் சேமித்திருந்தால்: தற்போதைய வருமானத் தேவை மற்றும் எதிர்கால நிதித் தேவைகளைப் பொறுத்து முடிவெடுக்கலாம்.

இங்கு கவனிக்க வேண்டியது, எந்த வழி அதிக லாபம் தரும் என்பதைக் காட்டிலும், எந்த வழி நமது தற்போதைய வாழ்க்கைச் சூழலுக்கும் எதிர்காலத் தேவைகளுக்கும் பொருத்தமாக இருக்கும் என்பதுதான். ஒருவருக்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்குத் தொடர்ந்து சேமிப்பது சரியான முடிவாக இருக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வி: கணக்கில் பணம் குறைந்தால் இழப்பீடு பெறுவது எப்படி?
முதலீட்டுத் திட்டம்

மற்றொருவருக்கு அதே பணத்தைத் தனது குடும்பத் தேவைகளுக்காகப் பயன்படுத்துவது சிறந்த முடிவாக இருக்கலாம். எனவே, பிறர் எடுக்கும் முடிவைப் பின்பற்றாமல், தங்களது நிதி நிலையை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.

தற்போதைய வட்டி விகிதம் என்ன?

2026 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் PPF திட்டத்திற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1 சதவீதமாக உள்ளது. இது ஆண்டுதோறும் கூட்டுவட்டிக் கணக்கீட்டின் அடிப்படையில் வரவு வைக்கப்படுகிறது. எனினும், இந்த வட்டி விகிதத்தை அரசு காலாண்டு அடிப்படையில் மாற்றியமைக்க முடியும். எனவே, நீட்டிப்பு முடிவை எடுக்கும்போது எதிர்கால வட்டி விகித மாற்றங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

வரிச் சலுகைகளையும் கவனியுங்கள்!

PPF திட்டத்தில் கிடைக்கும் வட்டியும், முதிர்வின்போது பெறப்படும் தொகையும் வருமான வரியிலிருந்து விலக்குப் பெறுகின்றன. புதிய முதலீடுகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C-ன் கீழ், பழைய வரி விதிப்பு முறையைத் தேர்ந்தெடுத்திருப்பவர்களுக்கு, ஒட்டுமொத்தமாக ரூ.1.50 லட்சம் வரையிலான முதலீட்டு வரிச்சலுகை கிடைக்கலாம். புதிய வரி விதிப்பு முறையில் இந்த 80C சலுகை கிடையாது.

முடிவெடுப்பது எப்படி?

PPF முதிர்வடைந்தவுடன் அவசரமாகப் பணத்தை எடுக்கவோ அல்லது கட்டாயமாக நீட்டிக்கவோ வேண்டியதில்லை. அடுத்த ஐந்தாண்டுகளில் பணம் தேவைப்படுமா, தொடர்ந்து முதலீடு செய்யும் வசதி இருக்கிறதா, மாற்று முதலீடுகளில் சிறந்த வாய்ப்புகள் உள்ளனவா என்பதைக் கணக்கிட்டுப் பார்க்கவேண்டும்.

15 ஆண்டுகள் என்பது வெறும் முதலீட்டுக் காலம் மட்டுமல்ல; பல குடும்பங்களுக்கு அது பொறுமையாகச் சேமித்துச் சேர்த்த ஒரு நிதிப் பயணத்தின் நிறைவாகும். அந்தச் சேமிப்பை எப்படிப் பயன்படுத்துவது என்பது அடுத்தகட்ட வாழ்க்கையின் நிதிப் பாதுகாப்பைத் தீர்மானிக்கக்கூடும்.

எனவே, முதிர்வுத் தொகையைப் பெறும்போது அவசரப்பட்டு முடிவெடுக்காமல், குடும்பத்தின் தேவைகள், எதிர்கால இலக்குகள், வருமான நிலை ஆகியவற்றை நன்கு சிந்தித்துப் பார்த்து செயல்படுவது நல்லது.

இதையும் படியுங்கள்:
வங்கிக்கணக்கில் 10 லட்சம் டெபாசிட் செய்தால் ஐடி நோட்டீஸ் வருமா? வருமான வரித்துறையின் புதிய விதிகள்!
முதலீட்டுத் திட்டம்
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference: