பெட்ரோல் முதல் சமையல் எரிவாயு வரை சேமிப்போம்: செலவைக் குறைக்கும் புதிய வழிகள்!

எரிபொருள், சமையல் எரிவாயு சேமிப்பால் நாட்டின் வளர்ச்சியும் குடும்ப செலவுகளும் சமநிலைப்படும் வழிகளை விளக்கும் வழிகாட்டி பதிவு.
save-petrol
save-petrol
Updated on

பொதுவாக நம்மைப் பொறுத்தவரை சேமிப்பு என்பது பணம் மட்டுமே. இதை நாம் சேவிங்ஸ் என்ற அழைக்கிறோம். பணம் என்பது நேராடியான பிற்காலத்திற்கு நமக்கு உதவக்கூடிய சேமிப்பு. இதற்கு அடுத்தபடியாக தங்கம் வெள்ளி முதலானவற்றை சேமிக்கிறோம். ஆனால் இவற்றைத் தவிர முக்கியமாக நமக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவக்கூடிய சேமிப்புகள் பல உள்ளன. அவற்றைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

தற்போதைய இக்கட்டான சூழலில் நாம் எரிபொருள் அதாவது பெட்ரோல், டீசல் முதலானவற்றையும் சமையல் எரிவாயு அதாவது CNG முதலியவற்றையும் முடிந்தவரை சேமிக்க வேண்டும். இவை இரண்டும் தற்போது பெரும் தட்டுப்பாட்டில் உள்ளன. இந்த இரண்டையும் சேமிப்பதன் மூலம் இரண்டு நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. முதலாவது நன்மை நாம் நம்மால் முடிந்தவரை நாட்டிற்கு நன்மை செய்கிறோம். இரண்டாவது இதன் மூலம் நமது பணமும் மிச்சமாகிறது.

தற்போதைய சூழலில் நாம் அலுவலகத்திற்குச் செல்லும்போது பொதுப் போக்குவரத்துகளான ரயில் மற்றும் பேருந்துகளைப் பயன்படுத்தப் பழகவேண்டும். முடிந்தவர்கள் பேட்டரியால் இயங்கும் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் மாசும் குறையும். எரிபொருளும் கணிசமாக சேமிப்பாகும்.

சிலர் காலை நேரங்களில் நடைபயிற்சிக்குச் செல்லும்போது வீட்டிலிருந்து தங்கள் கார் அல்லது இரண்டு சக்கர வாகனங்களில் பயணித்து பூங்காக்களுக்குச் சென்று நடைபயிற்சி மேற்கொண்டு பின்னர் அதில் வீடு திரும்புகின்றனர். நாம் செல்வதே நடைபயிற்சிக்காகத்தானே. அப்படியிருக்க வீட்டிலிருந்து எதற்காக வாகனங்களில் சென்று நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும். வீட்டிலிருந்தே கூடுமானவரை நடந்து திரும்பினால் போதுமே. இதனால் வாகன எரிபொருள் கணிசமாக சேமிப்பாகும். நமது பணமும் மிச்சமாகும்.

தற்போதைய சூழ்நிலையில் கார்களில் தனியே பயணிப்பதை அறவே தவிர்க்கப் பழகவேண்டும். குடும்ப சகிதமாக என்றால் பரவாயில்லை. சிலர் தனியே வெகுதூரம் செல்வதற்கு கார்களைப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இது அவர்களின் தனிப்பட்ட உரிமை என்றாலும் தற்போதைய சூழ்நிலையில் இதைத் தவிர்த்தல் நலம்.

இதையும் படியுங்கள்:
இனி உங்கள் சமையலறை ஒரு 'ஹெல்த் சென்டர்'! நஞ்சில்லா மாற்றத்திற்கான 8 எளிய ஸ்டெப்ஸ்!
save-petrol

தற்காலத்தில் வணிக எரிவாயு சிலிண்டர் கிடைக்காத சூழ்நிலையில பல உணவகங்கள் மூடப்படுகின்றன. மேலும் சிலிண்டர் விலை உயர்வால் உணவுப்பொருட்களின் விலையும் கணிசமாக ஏறிவிட்டதைக் காணமுடிகிறது. வீடுகளில் நாம் கூடுமானவரை இன்டெக்ஷன் அடுப்பில் சமைக்கப் பழகலாம். எலெக்ட்ரிக் ரைஸ் குக்கரைப் பயன்படுத்தி சமைக்கலாம். வழக்கமான குக்கரில் சமைக்கும் போது அரிசி பருப்பு காய்கறிகளை ஒரே சமயத்தில் வேகவைத்து சமையல் எரிபொருளை கணிசமாக சேமிக்கலாம்.

சிலர் குளிப்பதற்கு சூடுநீரைக் காய்ச்ச கேஸ் அடுப்பை பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இதற்கு பதிலாக சூரிய சக்தியில் இயங்கும் வாட்டர் ஹீட்டரைப் பயன்படுத்தி கணிசமான அளவில் சமையல் எரிவாயுவை சேமிக்கலாம். மேலும் குடிப்பதற்காக சுடுதண்ணீர் வைக்க கேஸைப் பயன்படுத்தாமல் கெட்டில் முதலான மின்சாதனங்களைப் பயன்படுத்தி பிளாஸ்க்கில் ஊற்றி வைத்துப் பயன்படுத்தலாம்.

பெரும்பாலோர் முதலில் கேஸ் அடுப்பை எரியவைத்த பின்னரே குக்கர் முதலான சமையல் சாதனங்களை சாவகாசமாக கேஸ் அடுப்பின் மீது வைக்கும் வழக்கத்தைக் கடைபிடிக்கின்றனர். இதனால் தேவையின்றி கேஸ் வீணாகும்.

இதற்கு பதிலாக எல்லாவற்றையும் தயார் செய்து அவற்றை அடுப்பின் மீது வைத்தபின்பு கேஸை எரியச்செய்தால் கணிசமான அளவில் சமையல் எரிவாயுவை மிச்சப்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
கூடுதல் வேலை, சிக்கன வாழ்க்கை மூலம் கடனிலிருந்து விடுபடலாம்!
save-petrol

சேமிப்பு என்பது பணம் மட்டுமல்ல என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். நம்மால் முடிந்தவரை யோசித்து திட்டமிட்டு சேமித்து சிறப்பாக வாழ்வோம். நாட்டையும் நம்மால் முடிந்த வரை முன்னேற்றுவோம்.

logo
Kalki Online
kalkionline.com