

டெஸ்லா, எலான் மஸ்க்கால் வழிநடத்தப்படும் அமெரிக்காவின் முன்னணி மின்சார வாகன (EV) மற்றும் ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்ப நிறுவனமாகும். டெஸ்லா வாகனங்கள், சுற்றுச்சூழல் நட்பு, உயர் செயல்பாடு மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்திற்காகப் புகழப்படுகின்றன.
இந்நிலையில் உலகப்புகழ் பெற்ற அமெரிக்க மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியச் சந்தையில் தனது 2-வது தயாரிப்பான ‘மாடல் ஒய்.எல்.’ (Model YL) என்ற 3 வரிசை இருக்கைகள் மற்றும் 6 இருக்கை கொண்ட மின்சார காரை இந்தியாவில் அதிகாரப் பூர்வமாக அறிமுகப்படுத்தி உள்ளது. இந்நிறுவனம் 2025-ல் இந்தியாவில் முதல் ஷோரூமை மும்பையில் திறந்து, 2026-ல் புதிய Model Y L வேரியண்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
6 பேர் அமரக்கூடிய வசதி கொண்ட இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 681 கிமீ வரை செல்லலாம்.
மெக்கானிக்கலாக, பேட்டரியுடன் இணைக்கப்பட்ட ஒரு முன் மோட்டார் மற்றும் ஒரு பின் மோட்டாருடன் கூடிய ஆல்-வீல் டிரைவ் அமைப்பைக் கொண்டுள்ள இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 201 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது.
மாடல் Y-ஐப் போலவே, மாடல் Y L-லும் முன்பக்கத்தில் முழு அகல LED லைட்பார் மற்றும் பல மின்சார வாகனங்களில் காணப்படும் மிகவும் நேர்த்தியான மற்றும் எளிமையான முன்பக்க வடிவமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.
அந்த இரண்டு கார்களுக்கும் இடையிலான வேறுபாடுகளைக் கண்டறிவது கடினமாக இருக்கும்; இருப்பினும், புதிய Model Y L மாடலானது, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 19-அங்குல 'ஏரோ' வடிவமைப்பு அலாய் சக்கரங்கள் மற்றும் கருமை நிற ஸ்பாய்லருடன் வருகிறது.
சிறந்த ஏரோடைனமிக் செயல்திறனுக்காக, வழக்கமான மாடல் Y-ஐப் போலவே, இதுவும் கதவுகளுடன் சமமாகப் பொருந்தும் கைப்பிடிகளைக் கொண்டுள்ளது.
மாடல் Y L, ஸ்டாண்டர்ட் மாடல் Y-ஐ விட 179 மிமீ நீளமானது. இரண்டு SUV-களின் அகலமும் ஒன்றாக இருந்தாலும், மாடல் Y L 44 மிமீ உயரம் அதிகம்.
மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், மாடல் Y L 6-இருக்கை (2+2+2) அமைப்பில் வருகிறது, அதேசமயம் ஸ்டாண்டர்ட் மாடல் 5-இருக்கை கொண்டது.
உள்ளே, இருக்கை அமைப்பைத் தவிர, இந்த இரண்டு எலக்ட்ரிக் SUV-களிலும் உள்ள தொழில்நுட்பம் மிகவும் ஒத்ததாக இருக்கிறது.
மாடல் Y L-ல் ஒரு பெரிய பனோரமிக் கண்ணாடிக் கூரையும் உள்ளது. அதனுடன், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங், பெரிய 16-அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட், காற்றோட்ட வசதியுள்ள முன் வரிசை மற்றும் இரண்டாம் வரிசை இருக்கைகள், பின் இருக்கைப் பயணிகளுக்கான ஒரு துணை டிஸ்ப்ளே, 18-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், பில்லரில் பொருத்தப்பட்ட ஏசி வென்ட்கள் மற்றும் பல அம்சங்களும் உள்ளன. இதில் வழக்கமான இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இல்லை.
பாதுகாப்பிற்கு பல ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற அம்சங்களுடன் வருகிறது.
இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.61.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் வெளிநாட்டிலிருந்து முழுமையாக இறக்குமதி செய்யப்படுவதால் 100 சதவீரம் வரை அதிக வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் இன்னும் டெஸ்லா தொழில்சாலை தொடங்கப்படாததால் விலையை குறைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
'Model Y L' மாடலுக்கான முன்பதிவுகள் தொடங்கிவிட்டன; இதன் விநியோகம் ஜூன் மாதத்திற்குள் தொடங்கும்.
இந்தியாவில் சென்னை, பெங்களூரு, புனே, டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் அதிவேக சூப்பர் சார்ஜர் நிலையங்களை அமைப்பதிலும் இந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.