

தனிமனித நிதியில் அடிப்படையான விஷயம் - வரவுக்குள் செலவு செய்வது. என்ன சார் ? இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தானே என்று நீங்கள் கூறலாம். ஆனால் இந்த அடிப்படையான விஷயத்தை நாம் கடைப்பிடித்தால் வாழ்வில் நிதி சம்பந்தமான பல்வேறு பிரச்சனைகளை நம்மால் தீர்க்க முடியும்.
2000 ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் இதனைக் குறித்து கூறியுள்ளார்.
குறள் 478:
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
பொருள் -
வருமானம் வரும் வழி சிறியதாக இருந்தாலும், செலவினம் போகும் வழி பெரிதாகாதபோது கேடு இல்லை.
இதைத்தான், பிரபல ஆங்கில நாவலாசிரியர் சார்லஸ் டிக்கென்ஸ் (Charles Dickens) அவர்கள் தன்னுடைய டேவிட் காப்பர்பீல்ட் (David Copperfield) என்ற நாவலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“Annual income twenty pounds, annual expenditure nineteen six, result happiness. Annual income twenty pounds, annual expenditure twenty-pound and six, result misery”.
'ஆண்டு வருமானம் இருபது பவுண்டு, ஆண்டு செலவு பத்தொன்பத்து ஆறு, முடிவு மகிழ்ச்சி. ஆண்டு வருமானம் இருபது பவுண்டு, ஆண்டு செலவு இருபத்து ஆறு, முடிவு துயரம்'
நமது ஔவையார் பாட்டி அவர்கள் தன்னுடைய நல்வழி நூலில், வரவுக்கேற்ற செலவு செய்யாமல் இருந்தால், என்ன பின்விளைவு வருமென்று பின்வருமாறு கூறுகிறார்.
வெண்பா - 25
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானமழிந்து மதிகெட்டு போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு
விளக்கம்:
ஈட்டும் பொருளினைவிட அதிகமாக செலவு செய்பவர்கள் பிற்காலத்தில் தங்கள் மானத்தை இழப்பார்கள். அறிவினை கெடுத்துக் கொள்வார்கள். அவர்கள் எத்திசை சென்றாலும் திருடர்கள் போல நடத்தப்படுவர். ஏழுபிறப்பிலும் தீயவர் போல நடத்தப்படுவர். நல்லவர்களுக்கும் ஆகாதவர்களாய் ஆகிவிடுவர்.
எனவே, நாம் வருமானத்தை விட குறைவாக செலவு செய்ய வேண்டும்.
இதைத்தான், நமது நாட்டில், பழமொழியாக பின்வருமாறு கூறுவார்கள்:
'விரலுக்கேத்த வீக்கம்'
ஒவ்வொரு விரலுக்கும் ஓரளவு வீக்கம் உள்ளது. கட்டைவிரல் வீக்கத்தை பார்த்து சுண்டு விரலும் அதே போல் தானும் வீக்கம் அடைய முயற்சித்தால் சுண்டு விரலால் சரிவர செயல்பட முடியாது. அதனைப் போலவே குறைவாக சம்பளம் வாங்கும் ஒருவன் அதிகமாக சம்பளம் வாங்குபவனைப் போல் செலவுகளைச் செய்தால் பின்னர் பெரும் கடன் பிரச்சனையில் மாட்டிக் கொள்ள நேரிடும். வரவுக்கேற்றவாறு செலவுகளை வைத்துக் கொள்ள வேண்டும்.
விதியை மதி - எப்படி?
மாதம் தொடங்கியதும், வரவு செலவு கணக்கு எழுதுங்கள். மாத இறுதியில் எப்படி எப்படி எல்லாம் பணம் செலவாகிறது என்று பாருங்கள். எவ்வாறு செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வருவது என்று பாருங்கள். எந்தெந்த செலவுகளைக் குறைக்கலாம் அல்லது தவிர்க்கலாம் என்று பாருங்கள். பின்னர் நிதி திட்டமிடல் அதாவது பட்ஜெட் உருவாக்குங்கள்.
ஒரு குறிப்பிட்ட செலவினத்திற்கு இவ்வளவு தொகை தான் என்று ஒரு காகித உறையில் பணத்தை ஒதுக்கி வைத்து விடுங்கள். அந்த பணம் தீர்ந்து விட்டால் மறுபடியும் அடுத்த மாதம் தான் அந்த செலவிற்கு பணம் என்று முடிவெடுங்கள். உதாரணத்திற்கு வெளியே உணவருந்துவதற்கு ஒதுக்கிய பணம் ஆயிரம் ரூபாய் எனில் இரண்டு முறை வெளியே உணவருந்த சென்ற பிறகு காகித உறையில் பணம் தீர்ந்து விட்டால், இனி அடுத்த மாதம் தான் வெளியே சென்று உணவு அருந்துவது என்று முடிவெடுங்கள்.
வரவுக்குள் செலவை வைத்துக் கொள்ளுங்கள். சேமிப்போடு நிறுத்தி விடாமல், சேமித்தப் பணத்தை முதலீடு செய்து பணத்தைப் பெருக்குங்கள்.