ஜெரோதா US Investing: அமெரிக்கப் பங்குகளில் இந்தியர்கள் முதலீடு செய்வது எப்படி?

சிறு முதலீட்டாளர்களும் ஆப்பிள், டெஸ்லா பங்குகளை வாங்கலாம்.
அமெரிக்கப் பங்குகள் - Global Investing
அமெரிக்கப் பங்குகள் - Global Investing
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 6 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, மூன்று சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். இவரது உலக சிறுவர் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள், 2024-ல், ஓர் அங்குலச் சிறுவன், அமேஸான் கானகத்தில் வழி மறந்த சிறுமி, ஆகாயத்தைத் தின்ற மனிதர்கள் ஆகிய மூன்று நூல்களாக வெளியாகியுள்ளன. இவ் வரிசையில் இன்னும் சில தொகுப்புகள் வரவுள்ளன.

Updated on: 

இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் சில்லறை மற்றும் சிறு-குறு முதலீட்டாளர்கள் பலருக்கும் உலகளவில் கொடிகட்டிப் பறக்கும் ஆப்பிள், மைக்ரோசாப்ட், என்விடியா, கூகுள் (ஆல்பாபெட்), டெஸ்லா போன்ற சர்வதேச முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்ற தீராத ஆர்வம் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.

உலகின் மாபெரும் தொழில்நுட்பப் புரட்சியையும், அமெரிக்க நிறுவனங்களின் அதிவேக வளர்ச்சியையும் கண்டு, அதிலிருந்து லாபம் ஈட்ட (அமெரிக்கப் பங்குகள்) இந்திய முதலீட்டாளர்கள் பலரும் விரும்புகின்றனர். ஆனால் நடைமுறையில் உள்ள பல்வேறு சிரமங்கள் காரணமாகp பலர் அமெரிக்க முதலீட்டைத் தவிர்த்து வருகின்றனர்.

அமெரிக்கப் பங்கு முதலீட்டில் இருந்த சிரமங்கள்

பொதுவாக இந்தியச் சிறு-குறு முதலீட்டாளர்கள் மாதந்தோறும் ஓரிரு ஆயிரங்கள், அல்லது சிலர் ₹5,000 முதல் ₹10,000 வரை மட்டுமே பங்குச்சந்தையில் முதலீடு செய்யுமளவு வருமானம் உள்ளவர்களாக இருக்கின்றனர். இத்தகைய கீழ் நடுத்தர வர்க்க முதலீட்டாளர்கள் நேரடியாக அமெரிக்கப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றால், பின்வரும் சிரமங்களைக் கடக்க வேண்டியிருந்தது.

1. பிரத்யேகக் கணக்கு மற்றும் தனித் தளங்கள்: இந்தியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யப் பயன்படும் வழக்கமான டீமேட் கணக்கு மூலம் நேரடியாக அமெரிக்கப் பங்குகளை வாங்க முடியாது. இதற்காகத் தனியாக வெளிநாட்டுத் தரகுத் தளங்களிலோ, இந்தியாவில் இயங்கும் பிற முதலீட்டுச் செயலிகளிலோ கணக்குத் தொடங்கி, பல கட்டச் சரிபார்ப்புகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

2. டாலர் மாற்றமும் வங்கி நடைமுறைகளும்: இந்திய ரூபாயை அமெரிக்க டாலராக மாற்றி அந்நிய நாட்டுக்கு அனுப்புவதற்கு (LRS - Liberalised Remittance Scheme) சில சமயம் வங்கிகளுக்கு நேரில் செல்ல வேண்டிய அல்லது சிக்கலான ஆன்லைன் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யவேண்டிய சூழல். இதற்காக வங்கிகள் வசூலிக்கும் கமிஷன், கரன்சி மாற்றுக் கட்டணம் (Forex Charges) மற்றும் டெலிகிராஃபிக் டிரான்ஸ்ஃபர் (TT) கட்டணங்கள் ஆகியவை சிறுகச் சிறுக முதலீடு செய்வோருக்குக் கூடுதல் நிதிச் சுமையாக அமைந்தன.

3. ஒரு பங்கின் அதிகப்படியான விலை: அமெரிக்கப் பங்குச்சந்தையில் முன்னணி ப்ளூ-சிப் நிறுவனங்களின் ஒரு பங்கின் விலை சில நூறு டாலர்களில், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹20,000 முதல் ₹40,000 வரைகூட இருக்கும். விலை குறைவான பிற நல்ல பங்குகளும் கிடைக்கத்தான் செய்கின்றன.

பெரும்பாலான சிறு முதலீட்டாளர்களின் இலக்கு மாபெரும் வளர்ச்சி கொண்ட முன்னணி ப்ளூ-சிப் நிறுவனங்களின் மீதே இருக்கும். பகுதியளவு பங்கு (Fractional Shares) வாங்கும் வசதி சில தளங்களில் முன்பே இருந்தாலும், வங்கி மற்றும் அந்நியச் செலாவணிச் செலவுகள் காரணமாக, குறு முதலீட்டாளர்களுக்கு இத்தகைய உயர்தரப் பங்குகளைத் திட்டமிட்டு வாங்குவது சிரமமாகவே இருந்தது.

இவற்றின் காரணமாகk குறைந்தபட்சத் தொகையைக் கொண்டு அமெரிக்கப் பங்குகளில் முதலீடு செய்வது குறு முதலீட்டாளர்களுக்குக் கடினமாகவே இருந்தது. இதனாலேயே பல இந்தியச் சிறு - குறு முதலீட்டாளர்கள் வெளிநாட்டுச் சந்தையை விட்டு ஒதுங்கியிருந்தனர்.

அமெரிக்கப் பங்குகள் - Global Investing
அமெரிக்கப் பங்குகள் - Global InvestingImage credit: Gemini

ஜெரோதாவின் தீர்வு: ‘US Investing’ அமைப்பின் சிறப்பம்சங்கள்

இந்தச் சிரமங்களில் பலவற்றைக் குறைக்கும் விதமாக, இந்தியாவின் முன்னணித் தரகு நிறுவனமான ஜெரோதா (Zerodha), அமெரிக்காவின் ‘ViewTrade’ எனும் தரகு நிறுவனத்துடன் இணைந்து நேரடியாகத் தனது தளத்தின் வழியே அமெரிக்கச் சந்தையை அணுகும் ‘US Investing’ புதிய வசதியை (Public Beta) அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கான பங்குகள் மற்றும் உலகளாவிய ஈடிஎஃப்கள் (ETFs)

அமெரிக்கப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்களின் பங்குகளிலும் (தொடக்க நிலையில் சுமார் 2,000 பங்குகளும் சுமார் 1,000 ETF-களும் என ஊடக அறிக்கைகள் கூறுகின்றன) உலகப் புகழ் பெற்ற S&P 500, Nasdaq 100 ஆகிய சந்தைக் குறியீடுகளைப் பின்பற்றும் ஈடிஎஃப்கள் (ETFs) ஆகியவற்றிலும், செயற்கை நுண்ணறிவு (AI), செமிகண்டக்டர் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளிலும் நேரடியாக முதலீடு செய்யமுடியும்.

இது வாங்கி வைத்திருக்கும் (Delivery) முதலீடு மட்டுமே; இன்ட்ராடே, மார்ஜின் வர்த்தகம், அமெரிக்க IPO விண்ணப்பம் ஆகியவை இல்லை; SIP வசதி உண்டு.

இதையும் படியுங்கள்:
பங்குச்சந்தை வீழ்ச்சியா? பயப்படாமல் கோடிகளில் லாபம் பார்க்க இதோ எளிய உத்திகள்!
அமெரிக்கப் பங்குகள் - Global Investing

மிகக் குறைந்த ப்ரோக்கரேஜ் கட்டணம்

ஜெரோதா வாங்கும்போதும் விற்கும்போதும் 0.10% மட்டுமே ப்ரோக்கரேஜ் கட்டணமாக நிர்ணயித்துள்ளது. குறைந்தபட்சக் கட்டணமாக $0.01 எனவும், அதிகபட்சக் கட்டணமாக $10 எனவும் வரம்பு வைக்கப்பட்டுள்ளது. கணக்குத் தொடக்கக் கட்டணமோ ஆண்டுப் பராமரிப்புக் கட்டணமோ (AMC) இல்லை. சட்டப்பூர்வக் கட்டணங்கள் ஆகியவையும் உண்டு என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஃப்ராக்ஷனல் இன்வெஸ்டிங் (Fractional Investing - பகுதியளவு பங்கு வாங்குதல்)

இந்தியச் சந்தையில் ஒரு பங்கை முழுமையாகத்தான் வாங்க முடியும். ஆனால், ஜெரோதாவின் இந்த அமெரிக்க முதலீட்டு அமைப்பில் ‘ஃப்ராக்ஷனல் இன்வெஸ்டிங்’ வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு பங்கின் விலை ₹30,000 ஆக இருந்தாலும், முழுப் பங்கை வாங்கத் தேவையில்லை;

வெறும் 1 டாலர் (சுமார் ₹96) இருந்தாலே, அந்தப் பங்கின் ஒரு குறிப்பிட்ட பகுதியைப் (எ.கா: சுமார் 0.003 பங்கு) பெற முடியும். (எல்லாப் பங்குகளிலும் இது சாத்தியமல்ல; தகுதியுள்ள பங்குகள், ETF-களுக்கு மட்டுமே). இது குறைந்தபட்சத் தொகையைக் கொண்டு முதலீடு செய்யும் சிறு-குறு முதலீட்டாளர்களுக்குக் பெரிய வசதியாகும்.

இதையும் படியுங்கள்:
ஜெரோதா மூலம் மாதந்தோறும் கமிஷன் பெறலாம்: இதோ எளிய வழிமுறைகள்!
அமெரிக்கப் பங்குகள் - Global Investing

இந்த வசதியை எப்படி அணுகுவது? (செயல்முறை விளக்கம்)

தற்போது இச்சேவை ‘Public Beta’ நிலையின் முதல் கட்டத்தில் இருப்பதால், பயனர்கள் படிப்படியாகவே (Batch by Batch) அனுமதிக்கப்படுகிறார்கள்:

1. விண்ணப்பிக்கும் முறை: account.zerodha.com தளத்தில் உள்நுழைந்து, ‘Enable US stocks’ (அல்லது ‘Enable US investing’) கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

2. அனுமதி: வரிசைப்படி அனுமதி கிடைத்ததும், kite-beta.zerodha.com பக்கத்தில் ‘International’ எனும் புதிய பகுதி தோன்றும்.

3. நிதி மாற்றம்:

· ‘Funds -> International’ பிரிவின் வழியே நேரடியாக டாலர் வாலட்டிற்கு நிதி அனுப்பலாம்.

· முதல் பரிமாற்றம் குறைந்தபட்சம் $50; அதற்குப் பிறகு ஒவ்வொன்றும் குறைந்தபட்சம் $100.

· தற்போது HDFC, ICICI, Axis, Kotak Mahindra, IDFC First ஆகிய முன்னணி வங்கிகளின் நெட் பேங்கிங் மூலம் நிதியை மாற்றலாம். UPI, டெபிட்/கிரெடிட் கார்டு மூலமோ, Kite வர்த்தக இருப்பிலிருந்தோ இதைச் செய்ய முடியாது. இது வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் (LRS) என்பதால் வழக்கமான நிதி மாற்றம் அல்ல.

இந்தியச் சில்லறை முதலீட்டாளர்களுக்கான நிதிப் பார்வை

ஒரு போர்ட்ஃபோலியோவை அமைக்கும்போது, ஒரே நாட்டின் பொருளாதாரத்தைச் சார்ந்திருக்காமல், சர்வதேச அளவிலான நிறுவனங்களிலும் முதலீடுகளைப் பரவலாக்குவது (Geographical Diversification) முதலீட்டு அபாயத்தைப் பகிர உதவும்.

குறைந்தபட்ச சேமிப்பைக் கொண்டே உலகின் முன்னணி நிறுவனங்களில் பங்கெடுப்பது எளிதாகியுள்ளது; ஆனால் செலவுகளையும் வரி விதிகளையும் புரிந்துகொண்டு, படிப்படியாகத் தொடங்குவதே நல்லது.

இதையும் படியுங்கள்:
தொடர்ந்து 8 வாரங்களாகச் சாய்ந்த பங்குச்சந்தை; பயப்படாமல் லாபம் பார்ப்பது எப்படி?
அமெரிக்கப் பங்குகள் - Global Investing
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com