
நெட்ஃப்ளிக்ஸில் ஜனவரி 10, 2025 முதல் வெளியிடப்பட்ட, நடுங்க வைக்கும் ஹிந்தி சீரியல் ப்ளாக் வாரண்ட்.
ப்ளாக் வாரண்ட் என்றால் சுருக்கமாக தூக்கு தண்டனை என்று அர்த்தம்!
டெல்லியில் 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திஹார் ஜெயிலை அக்கு வேறு ஆணி வேறாகப் பிய்த்தெடுத்துச் சித்தரிக்கும் இது, The Snake, Gallows, Macho, Team Player, Prison Food, The Blanket, Double Life Sentence ஆகிய ஏழு எபிசோடுகளைக் கொண்டுள்ளது.
சுனித்ரா சௌத்ரி மற்றும் சுனில் குப்தா படைத்த ப்ளாக் வாரண்ட் என்ற தொடரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத்தொடரை, விக்ரமாதித்த மோத்வானெ, சத்யன்ஷு சிங், அர்கேஷ் அஜய், ரோஷின் ரவீந்திர நாயர் மற்றும் அம்பிகா பண்டிட் ஆகியோர் இயக்கியுள்ளனர்.
சிறை என்றும் கைதி என்றும் ஒரு நிமிடம் பேசிவிட்டு அதை மறந்து போவது அனைவரது இயல்பு தான். ஆனால் திஹார் வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது, என்பதையும் அங்குள்ள கைதிகளிடையே உள்ள அதிகாரப் போட்டியையும், அதில் வெற்றி பெற்று தலைமையிடம் வகிக்கப் போராடும் குழுக்களைப் பற்றியும் இதில் பார்த்துத் திகைக்கலாம்.
தூக்கு தண்டனை எப்படி போடப்படுகிறது என்பதை ஒரு முறை அல்ல மூன்று முறை இதில் பார்த்து வேதனைப்படலாம்.
டிஎஸ்பி தோமராக நடிக்கும் ராகுல் பட் நம்மை வியக்க வைக்கிறார்.
காயத்ரி மந்திரம் சொல்லும் ஜெயிலர் சுனில் குப்தாவாக வரும் ஜஹன் கபூரின் நடிப்பு மிக இயல்பாக இருக்கிறது.
ஜெயிலுக்குள் பாம்பு, போர்வைத் திருட்டு, கள்ள வியாபாரம் அடிதடி, கொலை ஆகியவற்றையெல்லாம் பார்த்து வியக்கிறோம்.
ஜெயிலருக்கும் கைதிகளுக்கும் இடையே இருக்கும் உறவு அதிசயமானது. பங்காளி உறவா அது? அட்ஜஸ்ட்மெண்ட் உறவா?
சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜின் ஆதிக்கம் ஜெயிலில் எப்படி இருந்தது, அவனது ராஜ வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை இதில் பார்த்து பிரமிக்கலாம்.
தனிக் குரலுடனும் தனி நடையுடனும் சோப்ராஜாக வரும் சிதாந்த் குப்தா நமது பாராட்டுக்குரியவர்.
இந்த ப்ளாக் வாரண்ட்- சீரியலை எழுதிய சுனில் குமார் குப்தா 35 வருடம் திஹார் ஜெயிலில் ஜெயிலராக இருந்தவர். சோப்ராஜ் உள்ளிட்ட கைதிகளை அன்றாடம் பார்த்தவர்.
தனிப் பேட்டியில் கீழ்க்கண்ட பல தகவல்களை அவர் தெரிவிக்கிறார் (இந்தத் தொடரில் அல்ல).
அப்ஜல் குரு என்ற தீவிரவாதிக்கு ப்ளாக் வாரண்ட் கொடுத்து தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட போது அவன் பாடிய பாலிவுட் பாடல்: அப்னே லியே ஜியே (நீ உனக்காக வாழ்ந்தால் நீ வாழ்ந்தது வீண், உலகிற்காக வாழ்) –
தூக்கு தண்டனையே கூடாது என்ற கொள்கையை முன் வைக்கிறார் குப்தா. 82 சதவிகித கைதிகள் ஒருவித வசதியுமின்றி மிக மோசமான பின்னணியில் இருந்து வருபவர்கள். அவர்களில் குற்றமிழைக்காதோர் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வக்கீலை வைத்துக்கொள்ளக் கூடப் பணமில்லதவர்கள். ஒரு நாளைக்கு 78 கொலைகள் நடக்கும் தேசத்தில் ஜெயில் தண்டனை ஒரு தீர்வு அல்ல. ஏராளமான சீர்திருத்தங்களை வெளியிலும் செய்ய வேண்டும். ஊழல் ஊறிக் கிடக்கும் சிறைகளிலும் செய்ய வேண்டும் என்கிறார் இவர்.
ஒரு கேஸ் முடிய ஆகும் காலம் யாராலும் சொல்ல முடியாத ஒன்று என்று கூறி வேதனைப்படும் இவர், தனது அடுத்த புத்தகமானது ஜெயில் எஸ்கேப் பற்றி இருக்கும் என்கிறார். ஒரு கைதி போலீஸ் ஆபீஸர் உடையில் தப்ப, இன்னொரு கைதி தூங்கிக் கொண்டிருந்த ஜெயில் அதிகாரியின் யூனிபார்மை அணிந்து தப்ப... இது போன்ற விவரங்கள் எல்லாம் இவரது அடுத்த புத்தகத்தில் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.
மொத்தத்தில் பரிதாபகரமான ஜெயில் கைதிகளின் வாழ்க்கை மிகவும் சீர்திருத்தி அமைப்பட வேண்டிய ஒன்று என்ற விழிப்புணர்ச்சியை ப்ளாக் வாரண்ட் ஏற்படுத்துகிறது.
ப்ளாக் வாரண்ட் தொலைக்காட்சியின் ஏழு எபிசோடுகளையும் பார்த்தால் நமக்குத் தோன்றுவது - ப்ளாக் வாரண்ட் – வேண்டவே வேண்டாம், யாருக்கும், எப்பொழுதும்!